சாம்சங் போராட்டம் முடிந்த பிறகும் பணியில் சேர முடியாமல் தவிக்கும் தொழிலாளர்கள் – என்ன நடக்கிறது?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ், சென்னை
-
சாம்சங் இந்தியா நிர்வாகத்துக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக தமிழ்நாடு அரசு அறிவித்துவிட்டது.
“ஆனால், நிர்வாகம் அளிக்கும் பயிற்சியை முடித்த பின்னரே சேர்த்துக் கொள்வோம் எனக் கூறிவிட்டதால், பணியில் சேர முடியவில்லை,” என்கின்றனர் தொழிலாளர்கள்.
தொழிற்சங்கத்திற்கு எதிராக தொழிலாளர்களை திசை திருப்பும் முயற்சியில் சாம்சங் இந்தியா நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக, சி.ஐ.டி.யு குற்றம் சுமத்துகிறது.
ஆனால், “நிறுவனம் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவது தொடர்பாகவே பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும் சென்னை சாம்சங் இந்தியா ஆலையில் தற்போது நம்பிக்கையும் அமைதியும் ஏற்பட்டுள்ளதாகவும்” சாம்சங் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் பிபிசி தமிழுக்கு அளித்த விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்ட பின்னரும் தொழிலாளர்களால் ஏன் பணிக்குத் திரும்ப முடியவில்லை? சாம்சங் இந்தியா நிறுவனத்தில் என்ன நடக்கிறது?
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரத்தில் அமைந்துள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு 1400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அனுமதி உள்படப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.
இதை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இவை தோல்வியில் முடிவடைந்த நிலையில், ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு சாம்சங் இந்தியா நிறுவனம் மறுத்ததால், போராட்டம் தீவிரமடைந்தது.
அதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் கூட்டாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு எட்டப்பட்டதாகக் கூறப்பட்டது.
‘இது சட்டவிரோத பேச்சுவார்த்தை’ எனக் கூறி சி.ஐ.டி.யு புறக்கணித்தது. மறுபுறம் போராட்டம் தீவிரம் அடைந்ததால், அதை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் தொழிலாளர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன.
போராட்டப் பந்தல் பிரிப்பு, நள்ளிரவு கைதுகள், தொடர் வழக்குகள் என அரசின் நடவடிக்கைகள் வேகமெடுத்தன.
ஒரு கட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலையிட்டு இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியாக போராட்டம் முடிவுக்கு வருவதாக அக்டோபர் 15ஆம் தேதியன்று அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.
சாம்சங் இந்தியாவில் என்ன நடந்தது?
வியாழன் அன்று (அக்டோபர் 17) தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப உள்ளதாவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.
“ஆனால், 38 நாள்கள் போராட்டம் முடிந்து வேலைக்குச் சென்ற தங்களுக்கு உரிய பணிகள் ஒதுக்கப்படவில்லை” என்கிறார் சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர் ஒருவர்.
பெயர் குறிப்பிடாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், வியாழன் அன்று சாம்சங் இந்தியா நிறுவனத்தில் நடந்த சம்பவங்களை விவரித்தார்.
“கம்பெனிக்குள் நுழைந்தவுடன் அனைவரையும் ஓரிடத்திற்கு வருமாறு நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். அங்கு சென்றதும், ‘இன்று முதல் சம்பளத்திற்கான வருகைப் பதிவேட்டைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம் என்று கூறினார்கள்,” என்று விவரித்தார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்தத் தொழிலாளர்.
மேலும், “அதன் பின்னர் பேசிய அதிகாரி ஒருவர், ‘உங்கள் அனைவருக்கும் சிறு சிறு குழுவாக பயிற்சிகள் வழங்க உள்ளோம். இந்தப் பயிற்சி ஒரு வாரம் நடைபெறும். யார் யாருக்கு எப்போது பயிற்சி என்பதை மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிப்போம். அப்போது வந்தால் போதும்’ என்றார். ஆனால், தற்போது வரை அதுபோன்ற மின்னஞ்சல்கள் எதுவும் வரவில்லை,” என்று கூறினார்.
சி.ஐ.டி.யு சொல்வது என்ன?
“எந்தப் போராட்டமாக இருந்தாலும் ஒருநாள் அல்லது இரண்டு நாட்களில் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். தற்போது சாம்சங் இந்தியாவின் கொள்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக நிர்வாகம் கூறுகிறது.
ஆனால், தொழிற்சங்கத்திற்கு எதிராக ஊழியர்களை திசை திருப்புவதற்காகவே இவை நடத்தப்படுவதாக அறிகிறோம்” என்கிறார், சி.ஐ.டி.யு அமைப்பின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் முத்துக்குமார்.
தொழிலாளர்களை 300 பேர் கொண்ட குழுவாகப் பிரித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகக் கூறும் முத்துக்குமார், “1,500 நபர்கள் 35 நாட்கள் வரை பயிற்சி எடுத்துக்கொள்ள உள்ளனர். இதில் கடைசி குழுவினர் வேலைக்குச் செல்வதற்கே ஒரு மாதம் ஆகிவிடும்” என்கிறார்.
“புதிதாக வேலைக்குச் சேரும் நபர்களுக்கு இதுபோன்ற பயிற்சிகளை வழங்குவதில் தவறு இல்லை. தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் பத்து முதல் 15 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றவர்கள். இவர்களுக்கு எதற்காக பயிற்சி கொடுக்க வேண்டும்?” என்றும் கேள்வி எழுப்புகிறார் முத்துக்குமார்.
சாம்சங் இந்தியா நிர்வாகம் இதைத் திட்டமிட்டே செய்வதாகக் குற்றம் சுமத்தும் முத்துக்குமார், “தொழிற்சங்கத்திற்கு எதிராகவே வாழ்நாள் முழுவதும் நிர்வாகம் செயல்படும் என்றால் தொழிலாளர்களும் அதற்கு எதிராகப் போராடுவார்கள். இதன்மூலம் இரு தரப்புக்கும் இணக்கமான சூழல் ஏற்படுவதைத் தவிர்க்கும் நிலை ஏற்படும்,” என்றார்.
தற்காலிக பணியாளர் நியமனம் – விதிமீறலா?
தொழிலாளர் போரட்டம் நடந்துகொண்டிருந்த நேரத்தில், சாம்சங் இந்தியா அரசிடம் அனுமதி பெற்று 370 தற்காலிகப் பணியாளர்களை நியமித்ததாக முத்துக்குமார் கூறுகிறார்.
அதேவேளையில், நிர்வாகம் கூடுதலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்களை அரசின் அனுமதியைப் பெறாமல் பணிக்கு அமர்த்தியதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசின் தொழிற்சாலை உணவு மற்றும் பாதுகாப்பு இயக்குநர் ஆனந்திடம் பிபிசி தமிழ் கேட்டபோது, “தற்காலிகப் பணியாளர்களை நியமித்துக் கொள்வதற்கான ஒப்புதலை சாம்சங் இந்தியா நிர்வாகம் பெற்றுள்ளது. தற்காலிகப் பணியாளர்கள் என்பதால் அவர்களுக்குத் தற்காலிகமாகவே வேலை ஒதுக்கப்படும். வேறு பணிகளுக்கும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.
சாம்சங் இந்தியா நிர்வாகம் சொல்வது என்ன?
“போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரும் தொழிலாளர்களுக்குப் பயிற்சி தர வேண்டியதன் அவசியம் என்ன?” என்று சாம்சங் இந்தியாவின் உயரதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, நிறுவனம், தொழிலாளர் என இரு தரப்புக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவது தொடர்பாகவே பயிற்சி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
இதே கருத்தை பிபிசி தமிழுக்கு அனுப்பிய விளக்கத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்கள் திரும்பி வந்துள்ளதால், சென்னையில் உள்ள சாம்சங் ஆலையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சாம்சங் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், “தொழிலாளர்களின் குறைகள் மற்றும் கவலைகள் கேட்கப்பட்டு படிப்படியாகத் தீர்க்கப்படும் என்று சென்னை சாம்சங் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் எஸ்.எச்.யூன் உறுதியளித்துள்ளதாகவும்” தெரிவித்துள்ளது.
“சென்னை சாம்சங் இந்தியா ஆலையில் தற்போது நம்பிக்கையும் அமைதியும் ஏற்பட்டுள்ளது. அவை முன்பைவிட வலுவாக இருப்பதை உணர முடிகிறது. தொடர்ச்சியான உரையாடலையும் ஆரோக்கியமான பணியிடத்தையும் ஏற்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம்” என்று சாம்சங் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ஆனால், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகளின் சந்தேங்கள் மற்றும் அவர்கள் விமர்சிக்கும் இந்தப் பயிற்சி குறித்து வேறு எந்த விளக்கத்தையும் சாம்சங் இந்தியா நிர்வாகம் அளிக்கவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு