வயநாட்டில் நீடிக்கும் பயம், பதற்றம்: பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் மக்கள் – பிபிசி கள ஆய்வு
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ், வயநாட்டில் இருந்து
“வீட்டிற்கு 15 நாட்களில் கிரஹப் பிரவேசம் செய்து, அம்மாவை குடி வைத்துவிட்டுச் செல்வதற்காக விடுப்பில் வந்திருந்தேன். ஆனால், மழையின்போது ஒரே இரவில் வீடு முற்றிலும் அழிந்துவிட்டது. எனது அம்மாவையும், இரண்டரை வயது குழந்தையையும் இழந்துவிட்டேன். எதிர்காலம் பற்றி நினைக்கவே இப்போதெல்லாம் நடுக்கமாக இருக்கிறது.”
பொங்கி வந்த கண்ணீரை, கண்களில் குளமாகத் தேக்கி வைத்தபடி, துக்கத்தை அடக்கிக் கொண்டு பேசினார் அனில் குமார்.
அனில் குமார், ஐரோப்பாவில் ஓட்டுநராகப் பணியாற்றி, சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணத்தில், தனது சொந்த ஊரான முண்டக்கையில் வீடு கட்டிக் கொண்டிருந்தார். இறுதிக்கட்டப் பணிகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில், நிலச்சரிவுப் பேரிடர் இப்படியொரு துயரத்தை அவரது வாழ்வில் அரங்கேற்றியுள்ளது.
ஒரு தாய், தந்தைக்கு மூன்று மகள்கள், மூவருமே வெளியூரில் வேலை பார்க்கின்றனர். அதில் பொறியாளரான மூத்த மகளை, தாயார் தன்னுடன் ஓராண்டுக்கு வந்து இருக்குமாறு வலியுறுத்தி வர வைத்திருக்கிறார். மூத்த மகள் அவர்களுடன் தங்கியிருந்த நேரத்தில் நிலச்சரிவுப் பேரிடர் நிகழ்ந்தது.
அப்போது தாய், தந்தையை வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்று காப்பாற்றிய மகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். வெளியூரில் பாதுகாப்பாக இருந்த தனது மகளைத் தானே அழைத்து வந்து “கொன்றுவிட்டதாக” அந்தத் தாய் மகளை நினைத்து மனமுடைந்து அழுதுகொண்டே இருக்கிறார்.
நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு உளவியல் சிகிச்சை அளித்து வரும் மனநல ஆலோசகர் அபிராமி பகிர்ந்துகொண்ட தகவல் இது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், கடந்த ஜூலை 30ஆம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவு, குறைந்தது 300 பேர் வரை பலிகொண்டது.
நிலச்சரிவுப் பேரிடரில் சேகரிக்கப்பட்ட 405 உடல் பாகங்கள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் பகுப்பாய்வு முடிவுகள் தெரிந்த பிறகே பலி எண்ணிக்கை முழுமையாகத் தெரிய வரும் என்று கேரள முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
உடல் பாகங்களை வைத்தே இந்த மரபணு சோதனை நடந்து வருகிறது. இன்னும் எத்தனை உடல்கள் மண்ணுள் புதைந்து கிடக்கின்றன, ஆற்றில் எத்தனை அடித்துச் செல்லப்பட்டன, எப்போது, எப்படி கண்டுபிடிக்கப்படும் என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை.
கேரளாவின் மோசமான இயற்கைப் பேரிடர்களில் ஒன்றைச் சந்தித்த வயநாடு மாவட்ட மக்கள், நிலச்சரிவு நடந்து இரண்டு மாதங்களைக் கடந்த நிலையில் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
அந்த ஒற்றை இரவில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து முண்டக்கை உள்ளிட்ட கிராமங்கள் எப்படி மீண்டு வருகின்றன என்பதைக் காண பிபிசி தமிழ் குழு வயநாட்டிற்கு சென்றது.
முடிவடையாத தேடுதல் பணி
வயநாடு மாவட்டத்தின் தலைநகர் கல்பெட்டாவில் இருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சூரல்மலை, நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று. அதன் பெரும் பகுதி அழிந்துவிட்ட நிலையில், மீதமிருக்கும் பகுதியும் ஒரு மயான அமைதியில் மூழ்கியிருந்தது.
அந்த அமைதிக்கு நடுவே ஒரு குழு மட்டும் பல இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டது.
‘‘நிலச்சரிவு நடந்ததாகத் தகவல் வந்ததும் அதிகாலையில் நாங்கள் இங்கு வந்துவிட்டோம். நான்கு அணி வந்ததில், மற்றவர்கள் போய்விட, இப்போது 35 பேர் கொண்ட ஒரு குழு இங்கு இருக்கிறோம். இப்போதும் சந்தேகத்திற்கு இடமான பகுதிகளைத் தோண்டிப் பார்க்கிறோம். வீடிழந்த மக்கள் உதவி கேட்டால் செய்கிறோம்,’’ என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஆய்வாளர் பிரதேஷ்.
மேலும், ‘‘முண்டக்கை முற்றிலும் அழிந்துவிட்டதால், அந்தப் பகுதியில் இன்னும் பலருடைய உடல்கள் புதைந்திருக்க வாய்ப்புள்ளது. சிலர் ஆற்றிலும் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். இது ஓர் அனுமானம்தான், எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது,’’ என்று தெரிவித்தார் பிரதேஷ்.
இருபுறமும் அமைந்துள்ள மலைப்பகுதிக்கு இடையேதான், சூரல்மலை ஆறு கடந்து செல்கிறது. இந்த ஆற்றைக் கடந்து சென்றால்தான், முண்டக்கை, குஞ்ஜிரி மட்டம், அட்டமலை பகுதிகளுக்குச் செல்ல முடியும்.
இந்த ஆற்றுப் பகுதியில்தான், நிலச்சரிவின்போது, இந்திய ராணுவத்தின் பொறியியல் பிரிவினரால் ‘பெய்லி பிரிட்ஜ்’ எனப்படும் தற்காலிக இரும்புப் பாலம் அமைக்கப்பட்டது. இன்றும் அந்தப் பாலம் தினசரி பயன்பாட்டிற்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.
மண்ணுக்குள் புதைந்த பள்ளிக்கூடம்
சூரல்மலை பேருந்து நிறுத்தத்தில் கேரள காவல்துறையினர், வருவாய்த்துறையினர் சோதனைச் சாவடி அமைத்துள்ளனர்.
வெளியாட்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. இருப்பினும் இரும்புப் பாலத்தைத் தாண்டிச் செல்ல காவல்துறை அனுமதிப்பதில்லை. உள்ளூர் மக்கள், தேயிலைத் தோட்டங்களில் பணி செய்வோர் மட்டுமே தற்போது அந்தப் பகுதிகளுக்குச் செல்ல இயலும்.
சூரல்மலை பாலத்தைக் கடந்து செல்ல மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், வயநாடு மாவட்ட ஆட்சியர் மேகாஸ்ரீ பிபிசி தமிழுக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டார். அங்கு நடக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், ஊடகம், வெளியாட்கள் என யாரையும் அனுமதிப்பதில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் சூரல்மலை பகுதியில் வேறு எந்தப் பணிகளும் நடைபெறுவதைப் பார்க்க முடியவில்லை. ராணுவம் அமைத்த பாலத்தின் இருபுறமும் பல வீடுகள் உருத்தெரியாமல் அழிந்துள்ளன. பள்ளிக் கட்டடம் ஒன்று பாதிக்கும் மேல் மண்ணில் புதைந்து கிடக்கிறது. அங்கு படித்த மாணவர்கள், மேப்பாடி பள்ளிக்கு மாற்றப்பட்டு, அவர்களுக்காக இலவச பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பாலத்தின் இடதுபுறத்தில் கிராம மக்கள் பலரும் இணைந்து கட்டிய பிரமாண்ட சிவன் கோவில் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட, தல விருட்சமான அரச மரம் மட்டும் கம்பீரமாக நின்றிருந்தது.
கோவில் இருந்த இடத்தைச் சுற்றிலும் கட்டியுள்ள பச்சைத் திரையும், கோவிலின் பழைய புகைப்படத்தின் ஃபிளக்ஸ் போர்டும் மட்டுமே இன்று அங்கிருந்த கோவிலுக்கு அடையாளமாக இருக்கின்றன.
முடங்கிய சுற்றுலாத் தலங்கள்
வயநாடு, வருமானத்திற்கு சுற்றுலாவையே அதிகம் நம்பியுள்ள மாவட்டம். மேப்பாடியில் இருந்து சூரல்மலை வரும் வரை இரு புறங்களிலும் நுாற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள் அமைந்துள்ளன.
நிலச்சரிவுக்குப் பின், சுற்றுலாப் பயணிகள் வருகை கடுமையான சரிவைக் கண்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளை நம்பியுள்ள உணவகங்கள், மலைகளுக்கு இடையில் சாகசப் பயணம் மேற்கொள்ள வைக்கும் ஜிப்லைன், காட்சி முனைகள், ஆஃப் ரோடு அட்வென்ச்சர் என சுற்றுலா இடங்கள் எல்லாமே ஆள் அரவமின்றி இருக்கின்றன. அவ்வப்போது வரும் வாகனங்களை உணவக ஊழியர்கள் கூவிக் கூவி அழைக்கிறார்கள்.
தொள்ளாயிரம் கண்டி, சூரல்மலை பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் சுற்றுலாப் பயணிகளை நம்பியிருந்தன. இப்போது முப்பது நபர்களுக்குக்கூட போதுமான சவாரிகள் கிடைப்பதில்லை என்கின்றனர் வாகன ஓட்டிகள்.
“இரண்டு மாதங்களாக எந்த வருமானமும் இல்லை. எனக்கென இருந்த வீடும் போய்விட்டது. என் அம்மா, தம்பி, தங்கை மகன்கள் என 5 பேர் இறந்துவிட்டனர். இப்போது வரை இழப்பீடு எதுவும் வரவில்லை. ஒவ்வொரு நாளும் ரணமாகக் கழிகிறது’’ என்று பிபிசி தமிழிடம் வேதனையுடன் கூறினார் முண்டக்கையைச் சேர்ந்த அனில். இவர் ஜீப் ஓட்டுநராக பணியாற்றுகிறார்.
மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
நிலச்சரிவில் மொத்தம் 1,555 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்திருப்பதாக கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் கூறியுள்ளார். நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேப்பாடி, வைத்திரி ஆகிய இரண்டு இடங்களில், மொத்தம் 1,043 வீடுகளைக் கொண்ட டவுன்ஷிப் அமைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கேரள அரசு சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முகாம்களில் இருந்தவர்களை வீடுகளுக்கு அனுப்பும் முன், அவர்களுக்கு வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க கேரள அரசு சார்பில் ரூ. 16 ஆயிரம் வழங்கப்பட்டது.
மாத வாடகையாக ரூ. 6 ஆயிரம், தினசரி செலவுக்கு ரூ.300 வீதம் இரு மாதங்களாக பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிற்குப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் வீடு எப்போது கிடைக்கும், தங்களுக்கான எதிர்கால வாழ்வாதாரம் என்ன என்பது பற்றி, பாதிக்கப்பட்ட மக்களிடம் கேள்விகளும், பெரும் கவலைகளுமே நிறைந்திருக்கின்றன.
‘‘அம்மா போய்விட்டார். எதுவுமறியா எனது இரண்டரை வயது குழந்தையையும் இழந்துவிட்டேன். சேமிப்புகள், நகை, பொருள் என எல்லாமே வீட்டுடன் சேர்ந்து அழிந்துவிட்டது. நிலச்சரிவில் சிக்கியதால் முதுகுத் தண்டில் பலத்த காயம்.
ஆறு மாதங்களுக்கு கட்டாய ஓய்வு தேவை எனச் சொல்லியிருக்கிறார்கள். ஓராண்டுக்கு அப்புறம்தான் எடை தூக்க முடியும். இனி என்ன வேலை செய்வது, எப்படி வாழ்வது என நினைத்தாலே இதயம் நடுங்குகிறது,” என்று பிபிசி தமிழிடம் தனது கவலையை வெளிப்படுத்தினார் அனில் குமார்.
முண்டக்கையைச் சேர்ந்த சாவித்ரி ஒரு தனியார் விடுதியில் சமையல் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். நிலச்சரிவு ஏற்பட்ட நாளில், கடும் மழை காரணமாக அவரால் வீட்டிற்குத் திரும்ப முடியவில்லை. “அதனால்தான் உயிர்பிழைத்தேன்,” என்று பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
ஆனால், ‘‘நான் உயிர் பிழைத்துவிட்டேன். எனது சித்தப்பா, சித்தி, அண்ணன், தம்பி என 8 பேர் இறந்து விட்டனர். வீட்டையும் வீட்டிலிருந்த பொருட்களையும் இந்தப் பெரும் நிலச்சரிவில் இழந்துவிட்டேன். இப்போது கையில் பணமும் இல்லை, வேலையும் இல்லை” என்று கூறுகிறார் அவர்.
வீட்டுக் கடன் மட்டும் நிலுவையில் இருப்பதாகக் கூறும் அவர், சில தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களும் தன்னார்வ அமைப்புகளும் வழங்கிய உதவிகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கிறார்.
“எங்களின் தற்போதைய தேவையெல்லாம், பணமும் வேலைவாய்ப்பும்தான்,” என்று கூறுகிறார் சாவித்ரி.
பயம்… பதற்றம்… படபடப்பு!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் ஸ்ருதி, ‘‘பலரும் உடைமைகளை, உறவுகளை இழந்திருந்ததால், நிலச்சரிவு நடந்து 10 நாட்கள் வரையிலும், அவர்கள் உடலில் எங்கே காயம், எங்கே வலி இருக்கிறது என்பதைக்கூட உணர முடியவில்லை.
இயற்கைப் பேரிடரில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு, உயர் ரத்த அழுத்தத்தைப் ஏற்படுத்தியுள்ளது. அதைக் குறைக்கவே முதலில் சிகிச்சை தர வேண்டியதாயிற்று,’’ என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாகப் பிரிந்த பின்னர், அவர்களில் பலர் உளவியல் ரீதியாகக் கூடுதல் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் மனநல ஆலோசகர் அபிராமி.
நிலச்சரிவில் உயிர் தப்பியவர்கள், பயம், பதற்றம், படபடப்பு, எதிர்மறை எண்ணங்கள் எனப் பலவித பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். ஃபேன் சத்தம், காற்று சத்தம், தேங்காய் விழும் சத்தம் என எதைக் கேட்டாலும் பலர் அஞ்சுகின்றனர். மழை பெய்வதைப் பார்த்தாலே சிலர் படபடப்பாகி விடுகின்றனர் என்கிறார் அபிராமி.
“பெற்றோரை, சக மாணவர்களை இழந்துள்ள குழந்தைகள், தனியாக பள்ளி செல்லவே பயப்படுகின்றனர். பாதிப்பைப் பொறுத்து, வாரம் ஒருமுறை, மாதம் இருமுறை என அவர்களின் வீடுகளுக்கே சென்று உளவியல் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் இதிலிருந்து இவர்கள் மீள்வதற்குக் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது ஆகும்,’’ என்றார்.
மத்திய, மாநில அரசுகள் என்ன செய்கின்றன?
பாதிக்கப்பட்டவர்கள் மீள்வதற்கு, வீடு, வேலை வாய்ப்பு குறித்த உறுதி மிக அவசியம் என்கிறார் தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சாண்டீபன்.
‘‘நாங்கள் பார்த்த நூற்றுக்கணக்கான மக்களில் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு, எப்போது அவர்களுக்கு வீடு கிடைக்கும், அங்கே போனால் என்ன வேலை கிடைக்கும் என்பதாகத் தான் இருக்கிறது. அரசும் அதற்காக வேகமாக வேலை செய்கிறது,’’ என்றார்.
ஒவ்வொரு உயிரிழப்புக்கும் மாநில அரசு சார்பில் ரூ. 6 லட்சம், மத்திய அரசின் சார்பில் ரூ.2 லட்சம் என மொத்தம் 8 லட்ச ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு சோதனைகள் முடிந்த பின்பே, இந்த நிதி வழங்கப்படவுள்ளது.
“இந்தத் தொகையுடன், அரசே ஒரே மாதிரியான தொகுப்பு வீடு கட்டித் தருவதற்குப் பதிலாக, ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு கட்டுவதற்கு ஒரு தொகையைக் கொடுத்தால், வேலை கிடைக்கும் இடத்தில் வீடு கட்டிக் கொள்ள ஏதுவாக இருக்கும்,” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் அனில் குமார்.
‘‘ஆயிரம் சதுர அடி பரப்பில் வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் முதல் தளத்தில் விரிவாக்கம் செய்யும் வகையில் இந்த வீடுகள் கட்டப்படும். அதேபோல தொழில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஓர் ஆண்டுக்குள் இந்தப் பணிகள் முடிக்கப்படும்’’ என்று பிபிசி தமிழிடம் தெரிவித்த கல்பெட்டா முன்னாள் எம்எல்ஏ சசீதரனிடம், கேரள அரசிடம் இதற்குத் தேவையான நிதி இருக்கிறதா என்ற கேள்வியை பிபிசி தமிழ் முன் வைத்தது.
அதற்கு அவர், “நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு, கடந்த ஆகஸ்ட் 11 அன்று பிரதமர் மோதி கேரளாவுக்கு வருகை புரிந்தார். நிலச்சரிவு நடந்த இடங்களை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட நபர்களை மருத்துவமனையில் சந்தித்தார். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்களித்தார். ஆனால் ஒன்றுமே நடைபெறவில்லை,” என்று குற்றம் சாட்டினார் சசீதரன்.
“கேரளா நிலச்சரிவுக்குப் பிறகு திரிபுராவில் பாதிப்பு ஏற்பட்டது; அங்கே ரூ. 48 கோடியை மத்திய அரசு கொடுத்தது. அதற்குப் பின் ஆந்திராவில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அங்கே ரூ.3,448 கோடி மத்திய அரசால் வழங்கப்பட்டது. அவர்களுக்கு நிதி உதவி வழங்கியது நல்லதே என்றாலும், கேரளாவும் இந்தியாவின் ஓர் அங்கம்தான். இங்கும் அந்த நிதி உதவியை வழங்குங்கள் என்றுதான் கேட்கிறோம். ஆனால் தராமல் அரசியல் செய்கிறார்கள்,’’ என்றார்.
கேரள ஆளும்கட்சியின் குற்றச்சாட்டு குறித்து, பாரதிய ஜனதா கட்சியின் கேரளத் தலைவர் சுரேந்திரன் மறுத்து, காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்து கேரள மக்களிடம் பொய்யைப் பரப்புவதாகத் தெரிவித்துள்ளார்.
நிதியுதவி அளிப்பது தொடர்பான விரிவான அறிக்கையை, உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாக கேரளாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் கூறியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு