தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: பிரசார் பாரதி விழாவில் என்ன நடந்தது? டிடி தமிழ் சொல்வது என்ன?

தமிழ்த்தாய் வாழ்த்து - சமஸ்கிருத சர்ச்சை

பட மூலாதாரம், DD tamil

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்தி மாத விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

“தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை,” என டிடி தமிழ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதற்கு கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளதாக அந்த விழாவில் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

‘தமிழ் மக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்’ என்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின் .

டிடி தமிழ் அலுவலகத்தில் நடந்த இந்தி மாத விழாவில் என்ன நடந்தது? ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு தி.மு.க கொதிப்பது ஏன்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

என்ன நடந்தது?

சென்னையில் பிரசார் பாரதி அலுவலகத்தில் இந்தி மாத கொண்டாட்டத்தின் நிறைவு விழா, வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 18) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அதன்பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இதைப் பாடியவர்கள், ‘தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரியைத் தவிர்த்து விட்டுப் பாடினர். டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தக் காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

‘தேசிய கீதத்தில் திராவிடம்’ – ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்’ எனப் பதிவிட்டுள்ளார்.

‘சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்’ என ஆளுநர் ஆர்.என்.ரவியை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் ஆளுநர் இழிவுபடுத்துகிறார்’ எனத் தெரிவித்துள்ளார்.

‘திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?’ என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து - சமஸ்கிருத சர்ச்சை

பட மூலாதாரம், X/mkstalin

டிடி தமிழ் அளித்த விளக்கம்

இதுகுறித்து, டிடி தமிழ் தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது. ” ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில், ‘தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்’ என்று சக ஊழியர்கள் வந்து கூறினர்.

அவர்கள் பாடும்போது மேடையின் பின்பக்கம் ஏதோ இடையூறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் இந்த வார்த்தை தவிர்க்கப்பட்டுவிட்டது” என்று மட்டும் பதில் அளித்தார்.

தொடர்ந்து, டிடி தமிழ் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

‘தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலின்போது கவனச் சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டுவிட்டார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்’ எனப் பதிவிட்டுள்ளது.

மேலும், ‘தமிழையோ அல்லது தமிழ்த் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை. வேண்டும் என்று இதனை யாரும் செய்யவில்லை. இதுதொடர்பாக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.

இந்த சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், இந்தி மாத நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து - சமஸ்கிருத சர்ச்சை

பட மூலாதாரம், X/DDTamilOfficial

ஆர்.என்.ரவி பேசியது என்ன?

நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, “தமிழ்நாட்டில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு உள்ளது என நினைத்தேன். இங்கு பரவலாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சென்று பேசும்போது, அவர்கள் இந்தி மொழியை ஆர்வத்துடன் கற்று வருவது தெரிந்தது.

“அனைத்து மொழிகளும் பாரத நாட்டின் மொழிகள் தான். காலனி ஆதிக்க காலத்தில் இந்திய மொழிகளைச் சிறுமைப்படுத்தும் வேலைகளை ஆங்கிலேயர்கள் செய்தனர். ஆங்கிலத்தை மட்டும் மொழியாக பார்த்தனர்.

“நமது மொழிகளை ‘வெர்னாகுலர்’ (vernacular) என அழைத்தனர். நமது மொழிகளை அடிமைகளின் மொழி என அழைத்தனர். அந்த வார்த்தையை தற்போதும் பயன்படுத்துகிறோம்,” என்றார்.

அடுத்து, சமஸ்கிருதம் குறித்துப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாட்டில் பலம் வாய்ந்த மொழியாக சமஸ்கிருதம் இருந்தது. அண்ணாமலை பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்த சமஸ்கிருத துறைகள் மூடப்பட்டுவிட்டன. சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்த சமஸ்கிருத துறையையே அழித்துவிட்டனர்,” என சாடினார்.

இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதற்கு கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்தியா எப்போதும் ஒன்றாக இருந்துள்ளது. பிரித்தாளும் கொள்கை இங்கு வெற்றி பெற்றதில்லை. நாட்டின் ஆன்மிக தலைநகராக தமிழ்நாடு இருக்கிறது. இங்கு தமிழ் குறித்துப் பேசுகிறவர்கள், இந்தியாவை விட்டு தமிழைக் கொண்டு செல்வதற்கு என்ன முயற்சிகளை எடுத்தனர்?” எனக் கேள்வி எழுப்பினார்.

தமிழ் இருக்கை, திருவள்ளூவர் இருக்கை ஆகியவற்றைப் பிற பல்கலைக்கழகங்களில் அமைப்பதற்கு மோதி அரசு மேற்கொண்ட முயற்சிகளை ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்து, தி.மு.க

பட மூலாதாரம், RajivGandhi

படக்குறிப்பு, தி.மு.க மாணவரணித் தலைவர் வழக்கறிஞர் ராஜிவ்காந்தி

சீண்டுகிறாரா ஆளுநர்?

ஆளுநரின் பேச்சு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க மாணவரணி தலைவர் வழக்கறிஞர் ராஜிவ்காந்தி, “இந்தியை எதிர்த்து தமிழ்நாடு நீண்டகாலமாகப் போராடி வருகிறது. இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டுக்கு இந்தி பொருந்தாது என விதிவிலக்கு பெறப்பட்டது.

“கடந்த பத்து ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளுக்கு மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியது. தமிழ் உள்பட சில மொழிகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவதை தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறோம்,” என்றார்.

“தமிழ்நாட்டில் இந்தி மாதம் கொண்டாடப்படும் என அறிவித்து நிகழ்ச்சிகளை நடத்துவது தமிழர்களைச் சீண்டிப் பார்க்கும் வேலை. இதை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னின்று நடத்தி வருகிறார். இதுபோன்ற நிகழ்ச்சிகளைக் கைவிட வேண்டும் என பிரதமர் மோதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்,” என்கிறார் ராஜிவ்காந்தி.

சமஸ்கிருத மொழி சர்ச்சை

சமஸ்கிருதம் குறித்து ஆளுநர் பேசியதற்கு பதில் அளித்த ராஜிவ்காந்தி, “சமஸ்கிருதம் தமிழ்நாட்டில் பிறந்த மொழி அல்ல. இன்றும் தமிழகக் கோயில்களில் சமஸ்கிருதம் இருக்கிறது. அதை ‘தேவபாஷை’ எனக்கூறி ஒதுக்கி வைத்தது தான் சிதைவடையக் காரணம். அதற்கு நாங்கள் காரணம் அல்ல. கல்விரீதியாக சமஸ்கிருதத்தைச் சிதைக்கும் வேலையை தி.மு.க செய்ததில்லை,” என்கிறார்.

“மக்களிடம் சென்று தங்கள் கொள்கைகளைக் கூறி வெற்றி பெற்ற பிறகு இவர்கள் இந்தியை உயர்த்திப் பேசட்டும். அதைவிடுத்து, ஆளுநர் மூலமாக இந்தியை உயர்த்தும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. அதற்காக தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதை ஏற்க முடியாது,” என்கிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில், “சென்னை தூர்தர்ஷன் டிடி தமிழ் சேனலில் இந்தி மாத நிறைவு விழாவில் பங்கேற்ற தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்ததாக கூறி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மீது வன்மத்தை கக்கும் விதமாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்,” என்று கூறியிருக்கிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்து, பா.ஜ.க

பட மூலாதாரம், S R Sekhar

படக்குறிப்பு, தமிழக பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்

‘தோல்வியை மறைக்க நாடகம்’

“தி.மு.க., ஆட்சியின் தோல்வியை மறைப்பதற்கு இந்தி எதிர்ப்பை மீண்டும் ஸ்டாலின் கையில் எடுத்திருக்கிறார்,” எனக் கூறுகிறார் தமிழக பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “சட்டம்-ஒழுங்கு பிரச்னை, போதைப்பொருள் புழக்கம், பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றை மறைப்பதற்கு இந்தி விழாவில் ஆளுநர் பேசியதை பெரிதுபடுத்துகிறார்கள்,” என்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.