திருச்சி சிறப்பு முகாமில் மரத்தில் ஏறிப் போராட்டம்!

by smngrx01

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டித்து மரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள், அகதிகளாக வந்தவர்கள், உரிய ஆவணங்களின்றி வந்தவர்கள் என இலங்கை தமிழர்கள் உள்பட 110 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களில் குறிப்பாக இலங்கை தமிழர்களுக்கு வழக்கு தொடர்பாக நீதிமன்றங்களுக்கு செல்லவோ, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவோ, நீதிமன்றம் மற்றும் தூதரங்கள் தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திடவோ மண்டல தனித்துணை ஆட்சியர் கே.நசிமுல் நிஷா அனுமதி மறுப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டித்தும், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மற்றும் தண்டனை முடிந்த தங்களை விடுவிக்கக் கோரியும் 10க்கும் மேற்பட்டோர் நேற்றுப் புதன்கிழமை காலை 8 மணி முதல் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதில் 5 பேர் மரத்தின் மீது ஏறியும், சிலர் கதவுகளை அடித்து நொறுக்கியும் தங்களது எதிர்ப்பை காட்டினர். இதையடுத்து, திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், முகாம் தனித்துணை ஆட்சியர் கே.நசிமுல் நிஷா, மாநகர காவல் துணை ஆணையர் செல்வகுமார் ஆகியோர் மாலை 3 மணியளவில் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.

திருச்சி சிறப்பு முகாமில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கோ அல்லது அவர்கள் விரும்பும் நாட்டுக்கோ அனுப்புவதற்கான எந்த நடவடிக்கையும் முகாம் மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுப்பதில்லை. முகாம்வாசிகளை அவர்களது உறவினர்களிடம் பேச அனுமதிப்பதில்லை. நீதிமன்றங்கள் மற்றும் வழக்குகள் தொடர்பான ஆவணங்களில் முகாம் தனித்துணை ஆட்சியர் சான்றோப்பமிட (அஃபிடவிட்) மறுக்கிறார். மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. இந்த முகாமில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்வர்களே சுமார் 30 பேர் இருக்கிறார்கள். இதில் வழக்கிலிருந்து விடுதலையான சிலர் 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளனர். பாஸ்கரன் என்பவர் சுவிட்சர்லாந்து செல்வதற்காக கடந்த 2020ம் ஆண்டு முதல் தொடர்ந்து போராடி வருகிறார் என இந்த முகாமில் உள்ள பல்வேறு வழக்குகளில் முன்னிலையாகி வரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜான்சன் கூறினார்.

இதற்காக டில்லியில் உள்ள அந்தநாட்டு தூதரகத்துக்கு விண்ணப்பித்தார். ஆனால் அந்நாட்டு தூதரகம் டில்லியில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டும் என தெரிவித்துள்ளது. ஆனால், டில்லிக்கு அனுப்பி வைக்க முகாம் நிர்வாகம் மறுக்கிறது. பங்களாதேஷ், ஈரான், நைஜீரியா நாட்டுக்காரர்கள் கூட எளிதில் வெளியில் செல்ல முடிகிறது. அதற்கு அந்த நாட்டு தூதரகங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றன. ஆனால் இலங்கை தூதரகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும், முகாம்வாசிகளில் குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் அகதிகளை விட மோசமாக நடத்தப்படுகின்றனர். தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் இலங்கை தமிழர்களுக்கு உரிய நிவாரணம் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நீதிமன்றம் ஒருவரை விடுவித்து அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தால், சம்பந்தப்பட்ட நாட்டு தூதரகத்துக்கு அனுப்பப்படும். அந்நாட்டு தூதரகங்கள் இவர் எங்கள் நாட்டைச் சேர்ந்தவர் தான் என்று மத்திய அரசிடம் தெரிவித்து, மத்திய அரசு மாநில அரசின் பொதுத்துறை மூலமாக சம்பந்தப்பட்டவர்களை விடுவிப்பதற்கான உத்தரவு வழங்கும். அப்படி வந்ததும் அவர்களை சம்பந்தப்பட்ட நாட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். இதுதான் நடைமுறை என  திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமர் மேலும் கூறினார்.

இதில் சிலருக்கு அந்த நாட்டு தூதரகங்கள் சரியாக ஒத்துழைப்பு அளிப்பதில்லை. அதுவே அவர்கள் இங்கு தங்க வைப்பதற்கு முக்கிய காரணம். இலங்கையைச் சேர்ந்தவராக இருந்தால் அவர் இலங்கைக்குத் தான் அனுப்பி வைக்கப்படுவார். வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்க முடியாது. அப்படி செல்வதாக இருந்தால் சம்பந்தப்பட்டவர் தனது சொந்த நாட்டுக்கு சென்ற பிறகு அங்கிருந்து தான் பிற நாடுகளுக்கு செல்ல முடியும். வாய்தா உள்ளிட்ட ஆவணங்களில் சான்றொப்பமிடுவதில் பிரச்சினையிருந்தால் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றார்.

கவனிப்பாரா எம்பி துரை வைகோ?: இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிக அக்கறைக்காட்டக் கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது மகனும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ திருச்சி தொகுதி எம்பியாக உள்ளார். எனவே எம்பி துரை வைகோ இந்த விவகாரத்தில் தலையிட்டு தங்களுக்கான நியாயமான அடிப்படை உரிமைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்