உலக வறுமை ஒழிப்பு தினம் (International Day for the Eradication of Poverty) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 அன்று கொண்டாடப்படுகிறது. இது 1992ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபை (UN) முன்னெடுத்த முயற்சியால் 1993 முதல் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளின் முக்கிய நோக்கம் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் குரலை கேட்கும் விதத்தில் அவர்களின் உரிமைகளுக்கு நியாயம் கிடைக்க செய்தல், சமூகத்தில் ஏற்பட்டுள்ள சமவாயம், அநீதிகளை சுட்டிக்காட்டுதல் மற்றும் வறுமையை சமுதாயமுழுக்க ஒழிப்பதற்கான முயற்சிகளை ஊக்குவித்தல் ஆகும்.
வறுமை என்பது ஒரு தனி நபர் அல்லது ஒரு குடும்பம் அடிப்படை அல்லது குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை பெறுவதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் இருக்கின்ற நிலையே வறுமை. இந்த நிலையில் இருக்கும் மக்களுக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தால் வீடு, சுகாதார வசதி, கல்வி உட்பட உயிர் வாழ அவசியமானதாக கருதப்படும் எந்தவித வசதியும் இல்லாமல் இருகின்றனர்.
வறுமை உலகெங்கிலும் பல்வேறு சமூகங்களை நீண்டகாலமாக பாதித்து வரும் ஒரு பெரும் சவாலாகும். வறுமையில் வாழும் மக்களுக்கு அவசியமான அடிப்படை வசதிகள், உணவு, குடிநீர், மருத்துவ சேவைகள், கல்வி போன்ற உரிமைகள் எளிதில் கிடைக்காமல் இருக்கும். இது அந்த மக்களின் வாழ்வோட்டம் குறையும் நிலையை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியிலும், சமுதாய முன்னேற்றத்திலும் பின்தங்கச் செய்கிறது. மேலும், வறுமை மிகுந்த சமூகங்களில், பணியில்லா நிலை, கல்வியின்மை, சுகாதார சேவைகளின் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் அதிகமாக காணப்படுகின்றன.
உலக வங்கியின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில் உலகை தாக்கிய கொரோனா 8 முதல் 11 கோடி மக்களை வறுமைக்கு தள்ளி உள்ளதாகவும் தெற்காசிய மற்றும் சஹாரா நாடுகளில் பெரும்பான்மையினர் ஏழைகளாக மாறியுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் 14 முதல் 16 கோடி ஆக அதிகரித்திருக்கலாம் எனவும் தெரிவித்து உள்ளது.
உலக வறுமை ஒழிப்பு தினத்தின் முக்கியத்துவம்
உலக வறுமை ஒழிப்பு தினம், வறுமையில் இருக்கும் மக்களின் நிலையை மேம்படுத்த, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகிறது. இந்த நாள், அரசுகள், சமூக அமைப்புகள், தனிநபர்கள் என அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்கான ஒரு துவக்கத்தை வலியுறுத்துகிறது. ஐ.நா., வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டங்கள், நிதி உதவிகள் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.வறுமையின் வேர்கள் ஆழமாகப் பதிந்துள்ள இடங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வதன் மூலம் வறுமையைக் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.
2024 ஆம் ஆண்டின் கரு:
ஒவ்வொரு ஆண்டும் உலக வறுமை ஒழிப்பு தினத்திற்கான தனித்துவமான கருவை ஐ.நா. அறிவிக்கிறது. 2024ஆம் ஆண்டுக்கான கரு “ஊழியர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம்” எனும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய நிலைப்பாடுகளில், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகளை ஆராய்ந்து, அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
வறுமை ஒழிக்கப்பட வேண்டிய அவசியம்:
வறுமை என்பது உலகளாவிய பிரச்சினையாக இருந்தாலும், அதை ஒழிப்பதற்கான முயற்சிகளில் அரசுகள் மட்டுமின்றி தனிப்பட்ட நபர்களும் பங்கு பெறவேண்டும். இதற்கு பெரும்பாலான நாடுகள் உணவுத் திட்டங்கள், இலவசக் கல்வி, மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆனால் வறுமை ஒழிப்பு பணிகள் பொதுவாகவே நீண்டகால முயற்சிகளைக் கொண்டதாகும். தன்னார்வ அமைப்புகள், சமூக சேவை நிறுவனங்கள், மற்றும் குரல் இல்லாத மக்களின் குரலாக செயல்படுபவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
வறுமைக்கு பல காரணங்கள் உள்ளன, அவற்றில் சில :
பொருளாதார ஏற்றத்தாழ்வு: சிலரின் கையில் அதிக செல்வம் குவிந்து கிடக்கும்போது, மற்றவர்கள் அடிப்படை தேவைகளுக்கே போராட வேண்டியிருக்கும்.
வேலைவாய்ப்பு இல்லாமை: வேலை இல்லாததால் மக்கள் வருமானம் இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
கல்வி இல்லாமை: கல்வி இல்லாததால் மக்கள் திறன்மிக்க வேலைகளைப் பெற முடியாமல் போகிறது.
சுகாதார வசதிகள் இல்லாமை: நோய்கள் பரவி மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலை செய்ய முடியாமல் போகிறது.
இயற்கை பேரிடர்கள்: நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து வறுமையை ஏற்படுத்துகின்றன.
வறுமை என்பது தனிநபர் மட்டும் அல்லாமல் ஒரு நாட்டின் முழு வளர்ச்சியையும் பாதிக்கும். வறுமையினால் பல விளைவுகள் ஏற்படுகின்றன :
குழந்தைத் தொழிலாளர்: வறுமையால் குழந்தைகள் பள்ளிக்குப் போகாமல் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
குடும்ப சிதைவு: வறுமையால் குடும்பங்கள் சிதைந்து, குழந்தைகள் தெருவில் தவிக்க நேரிடுகிறது.
சமூகப் பிரச்சினைகள்: குற்றங்கள், வன்முறை போன்ற சமூகப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.
பொருளாதார வளர்ச்சி தடை: வறுமையால் மக்களின் உற்பத்தித்திறன் குறைந்து, பொருளாதார வளர்ச்சி தடைபடுகிறது.
வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்
வறுமையை ஒழிப்பது என்பது எளிதான காரியமல்ல. இதற்கு அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.
வறுமையை ஒழிப்பதற்கான சில முக்கிய நடவடிக்கைகள்:
பொருளாதார வளர்ச்சி: பொருளாதாரத்தை வளர்ப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்கி, வருமானத்தை அதிகரிக்க செய்யலாம்.
கல்வி: அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பை வழங்க வேண்டும்.
சுகாதாரம்: அனைவருக்கும் சுகாதார வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
சமூக பாதுகாப்பு திட்டங்கள்: முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் போன்றோருக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
உலக நாடுகளின் ஒத்துழைப்பு: வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு பொருளாதார உதவிகள் வழங்க வேண்டும்.
உலக வங்கியின் 2024 தரவுகளின் படி, உலகில் அதிக வறுமை விகிதங்களைக் கொண்ட 10 நாடுகள் பின்வருமாறு:
1.எக்வடோரியல் கினியா – 76.8%
2.தெற்கு சூடான் – 76.4%
3.மடகாஸ்கர் – 70.7%
4.மலாவி – 70.3%
5.காங்கோ ஜனநாயக குடியரசு – 63.9%
6.மத்திய ஆப்ரிக்கக் குடியரசு – 61.5%
7.குவாத்தமாலா – 59.3
8.சாட் – 58.7%
9.மொசாம்பிக் – 53.4%
10யேமன் – 48.6%
வறுமை ஒழிப்பு என்பது ஒரு நீண்ட கால செயல்முறை. இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. ஒவ்வொரு தனி மனிதனும் தன் வாழ்வில் சிறிய மாற்றங்களை கொண்டு வந்து வறுமையை ஒழிப்பதற்கு பங்களிக்கலாம். வறுமையை ஒழிப்பது என்பது மனிதநேயத்தின் அடிப்படையான கடமையாகும்.
(இராசேந்திரன் நிலக்ஷனா)