இஸ்ரேல், காஸா, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய காஸாவில், இஸ்ரேல் தாக்குதலால் நடந்த சேதங்களுக்கிடையே தனது குழந்தையுடன் அமர்ந்திருக்கும் பெண்
  • எழுதியவர், டாம் பேட்மேன்
  • பதவி, பிபிசி வெளியுறவு துறை செய்தியாளர், வாஷிங்டனிலிருந்து

காஸாவில் 30 நாட்களில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை அதிகரிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அமெரிக்க ராணுவத்தின் சில உதவிகளை நிறுத்த நேரிடும் என்றும் தெரிவித்து இஸ்ரேலுக்கு அமெரிக்கா கடிதம் எழுதியுள்ளது.

தன் நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) அனுப்பப்பட்ட அக்கடிதம், அமெரிக்காவிடமிருந்து இதுவரை அறியப்பட்ட, வலுவான எழுத்துபூர்வ எச்சரிக்கையாக உள்ளது. வடக்கு காஸாவில் இஸ்ரேலின் புதிய தாக்குதல்களால் குடிமக்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில் அமெரிக்கா இக்கடிதத்தை எழுதியுள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கிடையேயான சுமார் 90% மனிதாபிமான உதவிப்பொருட்களின் விநியோகத்தை கடந்த மாதம் இஸ்ரேல் மறுத்தது அல்லது தடுத்ததாகவும், காஸாவில் மனிதாபிமானச் சூழல் மோசமாகிவருவதாகவும் ஆழ்ந்த கவலைகளை அக்கடிதத்தில் அமெரிக்கா எழுப்பியுள்ளது.

அமெரிக்காவின் கடிதத்தை மதிப்பாய்வு செய்து வருவதாக, இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “இந்த விவகாரத்தை இஸ்ரேல் தீவிரமாக எடுத்துள்ளதாகவும்”, அமெரிக்கா “எழுப்பியுள்ள கவலைகள் குறித்து கவனம் கொள்வதாகவும்,” அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

4 லட்சம் மக்களின் நிலை?

வடக்கு காஸாவில் உள்ள ஹமாஸ் தளங்களை தாங்கள் இலக்கு வைப்பதாகவும் மனிதாபிமான உதவிகளைத் தடுக்கவில்லை என்றும் இஸ்ரேல் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

காஸாவுக்குள் மனிதாபிமான உதவிகள் நுழைவதற்கு பொறுப்பான இஸ்ரேல் ராணுவத்தின் அமைப்பான ‘கோகாட்’ (Cogat), உலக உணவுத் திட்டத்தின் மனிதாபிமான உதவிகள் அடங்கிய 30 லாரிகள் வடக்கு காஸாவுக்குள் எரெஸ் கடவுப்பாதை வழியாக திங்கட்கிழமை நுழைந்ததாகத் தெரிவித்தது.

வடக்கு காஸாவில் இரண்டு வார காலத்திற்கு உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை என்றும் அங்குள்ள சுமார் 4 லட்சம் பாலத்தீனர்கள் உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் தீர்ந்துவருவதாகவும் ஐ.நா., கூறியது இதன்மூலம் முடிவுக்கு வந்தது.

காஸா ‘எப்போதும் உச்சபட்ச அவசரநிலையிலேயே’ இருப்பதாக ஐ.நா., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனப் பிரதேசங்களுக்கான உலக உணவுத்திட்டத்தின் தலைவரான ஆண்டோன் ரெனார்ட், அப்பிரதேசத்தின் வடக்குப் பகுதியில் உள்ள மக்களுக்கு, ஐ.நா. முகமைகளால் வழங்கப்படுவதைத் தவிர வேறு புதிய உணவுகள் கிடைப்பதில்லை என்றும், “அம்மக்கள் உதவிகளை மட்டுமே சார்ந்திருப்பதாகவும்” ஏ.எஃப்.பி., செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு அதிகளவில் ஆயுதங்களை விநியோகிக்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. கடந்த ஓராண்டாக காஸாவில் ஹமாஸுக்கு எதிரான போரில் அமெரிக்காவால் வழங்கப்படும் விமானங்கள், இலக்குகளைத் துல்லியமாக தாக்கும் வகையிலான வெடிகுண்டுகள் (guided bombs), ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் அதிகமாகச் சார்ந்துள்ளது.

இஸ்ரேல், காஸா, அமெரிக்கா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சுமார் 17 லட்சம் பேர், குறுகலான அல்-மவாசி கடற்கரை பகுதிக்கு இடம்பெயர நிர்பந்திக்கப்பட்டதால், ‘நோய்த்தொற்றுக்கான அதிக அபாயம் இருப்பதாக’ அமெரிக்கா தெரிவித்துள்ளது

கடிதத்தில் கூறியிருப்பது என்ன?

இஸ்ரேல் அரசுக்கு அமெரிக்கா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் அமெரிக்க வெளியுறவு துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கடிதம் குறித்த செய்தி ஆக்ஸியோஸ் (Axios) எனும் செய்தி இணையதளத்தில்தான் முதலில் வெளியானது. அக்கடிதத்தில் வெளியுறவுத் துறைச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

“காஸாவில் மனிதாபிமானச் சூழல் மோசமாகிவருவது குறித்த அமெரிக்க அரசின் ஆழ்ந்த கவலைகளை வலியுறுத்துவதற்காக இக்கடிதத்தைத் தற்போது எழுதுகிறோம். இந்தப் போக்கை மாற்றுவதற்கான அவசரமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை இம்மாதம் உங்கள் அரசாங்கம் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்,” என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் அரசின் உத்தரவு காரணமாக, சுமார் 17 லட்சம் பேர், குறுகலான அல்-மவாசி கடற்கரை பகுதிக்கு இடம்பெயர நிர்பந்திக்கப்பட்டதாகவும் அப்பகுதியில் பெருந்திரளான மக்கள் கூட்டம் காரணமாக, “பெரும் பாதிப்பை ஏற்படுத்தவல்ல நோய்த்தொற்றுக்கான அதிக அபாயம் இருப்பதாகவும்”, அம்மக்கள் உயிர்வாழ்வதற்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட முடியாத நிலையில் இருப்பதாகவும், மனிதநேய அமைப்புகள் தெரிவிக்கின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“செப்டம்பர் மாதம் வடக்கு மற்றும் தெற்கு காஸாவுக்கு இடையே சுமார் 90% மனிதாபிமான உதவிப்பொருட்களின் விநியோகத்தை இஸ்ரேல் அரசாங்கம் தடுத்து நிறுத்தியது, அந்த உதவிகளை பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக உள்ள அதிக கட்டுப்பாடுகள் தொடர்வது, புதிய பரிசோதனைகள், அவற்றுக்குச் சட்டபூர்வ பொறுப்பேற்றல் மற்றும் மனிதாபிமான உதவிகளை கொண்டு சேர்க்கும் பணியாளர்கள் மற்றும் உதவிப் பொருட்களுக்கான சுங்கக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட இஸ்ரேல் அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து நாங்கள் குறிப்பாக கவலை கொண்டுள்ளோம். இவற்றுடன் சட்டமீறல் மற்றும் சூறையாடல் ஆகியவையும் காஸாவில் சூழல் மோசமடைவதை அதிகரித்துள்ளதாக,” அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கச் சட்டம் என்ன சொல்கிறது?

மனிதாபிமான உதவிகள் சென்று சேர்வதை அதிகப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை “இப்போதிலிருந்து தொடங்கி 30 நாட்களுக்குள் மேற்கொள்ள வேண்டும்,” எனவும், தவறினால், “அமெரிக்க கொள்கையில் அதனால் தாக்கங்கள் ஏற்படும் என்றும்,” அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மனிதாபிமான உதவிகள் சேருவதைத் தடுக்கும் நாடுகளுக்கு ராணுவ உதவிகளைத் தடை செய்யும் அமெரிக்கச் சட்டங்கள் அக்கடிதத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

குளிர்காலத்திற்கு முன்னதாக, நான்கு முக்கியக் கடவுப்பாதைகள் மற்றும் புதிதாக திறக்கப்பட்ட ஐந்தாம் பாதை வழியாக ஒருநாளைக்கு குறைந்தது 350 லாரிகள் சென்று சேருவது உட்பட, ‘அனைத்து வித மனிதாபிமான உதவிகளையும் காஸா முழுவதும் சென்று சேருவதை மும்முரமாக மேற்கொள்ள வேண்டும்’ என்றும் அல்-மவாசி கடற்கரையில் உள்ள மக்களை எல்லையிலிருந்து இன்னும் தொலைவுக்குள் இடம்பெயர அனுமதிக்க வேண்டும் என்றும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா கூறியுள்ளது.

‘குடிமக்களை கட்டாயமாக வெளியேற்றுவதற்கான கொள்கை ஏதும் இல்லை’ என்பதை உறுதிப்படுத்தி, ‘வடக்கு காஸாவை தனிமைப்படுத்துவதை’ இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

30 நாள் காலக்கெடு ஏன்?

செவ்வாய்கிழமை (அக்டோபர் 15) வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவு துறை செய்தித்தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களிடம், “அக்கடிதம், பொதுவில் வெளிப்படுத்தும் நோக்கம் இல்லாத, தனிப்பட்ட ராஜதந்திர ரீதியிலானது,” என தெரிவித்தார்.

“பாதுகாப்புத் துறைச் செயலாளர் பிளிங்கன் மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின், காஸாவில் மனிதாபிமான உதவிகள் நுழைவதை அதிகரிப்பதற்கு மீண்டும் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை இஸ்ரேல் அரசுக்கு தெளிவுபடுத்துவது நல்லது என நினைத்தனர்,” என்றார் அவர்.

மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை அதிகரிக்காவிட்டால் இஸ்ரேலுக்கு என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து தெரிவிக்க மில்லர் மறுத்துவிட்டார்.

ஆனால், “அமெரிக்க ராணுவ உதவிகளைப் பெறும் நாடுகள், அமெரிக்காவின் மனிதாபிமான உதவிகளைத் தன்னிச்சையாக மறுக்கவோ, தடுக்கவோ முடியாது. சட்டம் அதைத்தான் சொல்கிறது, நாம் நிச்சயமாக அதனை பின்பற்ற வேண்டும். ஆனால், நாங்கள் வலியுறுத்தியுள்ள மாற்றங்களை இஸ்ரேல் மேற்கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம்,” என அவர் குறிப்பிட்டார்.

இந்த 30 நாட்கள் காலக்கெடுவுக்கும் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் தொடர்பு அல்ல என கூறிய அவர், “பலவிதப் பிரச்னைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு உரிய நேரம் வழங்குவதுதான் ஏற்றது,” என கூறினார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

‘ஆயுதத் தடை’ நடவடிக்கை

காஸா முழுதும் விநியோகிக்கப்படும் மனிதாபிமான உதவிகளின் அளவு தொடர்பாக எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை என இஸ்ரேல் முன்னதாக வலியுறுத்தியுள்ளது. மேலும், மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் தோல்வியுற்றதாக ஐநா சர்வதேச முகமைகளையும் இஸ்ரேல் குற்றம்சாட்டியது. மனிதாபிமான உதவிப்பொருட்களை ஹமாஸ் திருடுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டிய நிலையில், அதனை அந்த அமைப்பு மறுத்துள்ளது.

கடந்த மே மாதம் தெற்கு காஸா நகரமான ரஃபா நகரில் தரைவழித் தாக்குதலுக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முழு வீச்சிலான தாக்குதலை தடுக்கும் பொருட்டு 2,000 மற்றும் 500 பவுண்ட் எடை கொண்ட வெடிகுண்டுகள் அடங்கிய சரக்குகளை ரத்து செய்தார்.

ஆனால், இந்நடவடிக்கை காரணமாக ஜோ பைடன் குடியரசு கட்சியினரிடையே எதிர்ப்பை சந்தித்தார். மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நடவடிக்கையை ‘ஆயுதத் தடையுடன்’ ஒப்பிட்டார். இதையடுத்து, இந்த ரத்து நடவடிக்கை கடந்த ஜூலை மாதம் பகுதியளவு விலக்கிக்கொள்ளப்பட்டது, மீண்டும் ஒருபோதும் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இஸ்ரேல், காஸா, அமெரிக்கா

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, கடந்த 10 தினங்களுக்கு முன் இஸ்ரேல் ராணுவம் புதிதாக தரைவழி தாக்குதலை தொடங்கியதிலிருந்து ஜபாலியா நகரம், கடும் குண்டுவீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியது

‘கற்பனைக்கு அப்பாற்பட்ட பயம்’

கடந்த 10 தினங்களுக்கு முன்பு, இஸ்ரேலின் தாக்குதலால் வடக்கு காஸாவில் உள்ள குடும்பங்கள், ‘கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவுக்கு பயம், அன்பானவர்களின் இழப்பு, குழப்பம் மற்றும் அதீத சோர்வால்’ பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்தது.

ஜபாலியா நகரம் மற்றும் அதன் நகர்ப்புற அகதிகள் முகாமில் மீண்டும் ஒன்றிணைந்துள்ள ஹமாஸ் படையினரை அழிக்க அப்பகுதிகளுக்கு பீரங்கிகள் மற்றும் துருப்புகளை அனுப்பியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜபாலியா மற்றும் அருகிலுள்ள பெயிட் லாஹியா மற்றும் பெயிட் ஹனௌன் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள், அல்-மவாசி “மனிதாபிமான பகுதிக்கு” செல்லுமாறு உத்தரவிட்டுள்ளது.

சுமார் 50,000 பேர் காஸா நகரம் மற்றும் வடக்கின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது. ஆனால், பலருக்கும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவது பாதுகாப்பற்றதாக உள்ளது அல்லது உடல்நலமில்லாததால் அவர்களால் வெளியே வர முடிவதில்லை.

ஜபாலியாவைச் சேர்ந்த காலித் என்பவரது அனுபவம், பிபிசி-யின் புதிய ஆவணப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. அவர், ஒரு வாரமாக தானும் தன்னுடைய குடும்பத்தினரும் பயத்திலேயே வாழ்ந்துவருவதாக அவர் அனுப்பிய குரல்பதிவில் தெரிவித்திருந்தார்.

“எங்களிடம் தெற்குப் பகுதிக்குச் செல்லுமாறு கூறப்பட்டது. ஆனால், குவாட்காப்டர் வகை ட்ரோன்கள் (quadcopter drones) அல்லது அழுக்கான தடுப்புகள் மூலம் இஸ்ரேல் ராணுவம் அப்பகுதியைச் சுற்றிவளைத்துள்ளது. எங்களால் இடம்பெயர முடியவில்லை, அது மிகவும் கடினமானதாக உள்ளது,” என்றார்.

“அதேசமயம், தீவிரமான குண்டுவீச்சின் காரணமாக, நாங்கள் தொடர்ந்து பயத்திலேயே இருக்கிறோம். என் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அவளுக்குக் காய்ச்சல் இருக்கிறது. குண்டுச் சத்தம் காரணமாக, அவளுடைய முழு உடலும் பயத்தில் நடுங்குகிறது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளை என்னால் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்ல முடியவில்லை,” எனவும் அவர் தெரிவித்தார்.

‘சர்ச்சைக்குரிய திட்டம்’

ஹமாஸால் நடத்தப்படும் பாதுகாப்பு முகமை (Civil Defence agency), செவ்வாய்கிழமை (அக்டோபர் 15) ஜபாலியா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இஸ்ரேலிய வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 42 பேரின் உடல்களை மீட்டுள்ளதாகத் தெரிவித்தது.

இறந்தவர்களுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் உள்ளதாகவும் பெரும்பாலும், அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் அவர்களது வீடு நள்ளிரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு முந்தைய தினம் ஜபாலியாவில் இருந்த ‘டஜன் கணக்கிலான பயங்கரவாதிகளை’ தங்கள் துருப்புகள் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்கிழமை தெரிவித்தது.

”ஜெனரல் பிளான்’ எனப்படும் (சர்ச்சைக்குரிய) திட்டத்தை இஸ்ரேல் ராணுவம் அமைதியாகச் செயல்படுத்த தொடங்கிவிட்டதற்கான ஆபத்தான அறிகுறிகள் தென்படுவதாக’ பாலத்தீனர்கள் எழுப்பிய கவலைகளை இஸ்ரேல் மனித உரிமைகள் குழுக்கள் கடந்த திங்கட்கிழமை எதிரொலித்தன.

வடக்கில் உள்ள அனைத்து குடிமக்களையும் வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யவும், அதைத் தொடர்ந்து அங்கு எஞ்சியிருக்கும் ஹமாஸ் படையினரை சுற்றிவளைத்து அவர்களைச் சரணடையக் கட்டாயப்படுத்தவும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கவும் அந்த சர்ச்சைக்குரிய திட்டம் வலியுறுத்துகிறது.

இத்திட்டத்தை அமல்படுத்துவதாக கூறப்படுவதை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. ‘மக்களை ஆபத்திலிருந்து வெளியேற்றுவதற்காக மட்டுமே’ இத்திட்டம் எனவும் தெரிவித்துள்ளது.

தெற்கு இஸ்ரேல் மீது 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி சுமார் 1,200 பேரின் உயிரிழப்பிற்கும் 251 பேர் பணையக்கைதிகளாக பிடிப்பதற்கும் வழிவகுத்த ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸை அழிக்கும் நோக்கில் ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது.

இதில், காஸாவில் 42,340-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக, ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு