- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் நடந்து வந்த தொழிலார்களின் போராட்டம் முடிவை எட்டியுள்ளது.
’38 நாட்களாக நீடித்து வந்த தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக’ அமைச்சர் எ.வ.வேலு, செவ்வாய் (அக்டோபர் 15) அன்று அறிவித்திருந்தார்.
“இரு தரப்பு உடன்பாட்டை தொழிலாளர்களும் ஏற்றுக் கொண்டனர். நாளை (அக்டோபர் 17) முதல் அவர்கள் வேலைக்குச் செல்ல உள்ளனர்,” என்று கூறியிருந்தார் சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன்.
தங்களின் பிடிவாதத்தை சாம்சங் இந்தியா நிறுவனம் தளர்த்தியதால் தான் உடன்பாடு எட்டப்பட்டதாக கூறுகிறார், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்.
ஒன்பது முறைகளுக்கு மேல் நீடித்த பேச்சுவார்த்தைகள், நள்ளிரவுக் கைதுகள், தொடர் வழக்குகள், கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம், அமைச்சர்களின் தலையீடு ஆகியவற்றைக் கடந்து ஒப்பந்தம் கையெழுத்தானது எப்படி?
பிரச்னையின் துவக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா தொழிற்சாலை அமைந்துள்ளது. சுமார் 1800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் இந்நிறுவனத்தில் வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கடந்த ஜூலை மாதம் சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சி.ஐ.டி.யு சார்பில் சங்கம் தொடங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு சாம்சங் இந்தியா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து, ஆலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
‘சாம்சங்’ என்ற பெயருக்கு எதிர்ப்பு
அடுத்து, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, ‘ஊதிய உயர்வு உள்பட தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து சி.ஐ.டி.யு உடன் சாம்சங் இந்தியா நிர்வாகம் பேச வேண்டும்’ என தொழிலாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த சாம்சங் இந்தியா நிர்வாகம், சங்கத்தின் பெயரில் ‘சாம்சங்’ எனப் பெயர் வைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதன் பின்னர், அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் 14 கோரிக்கைகளை சாம்சங் இந்தியா நிறுவனம் ஏற்றுக் கொண்டதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.
தொழிலாளர்களும் ஏற்றுக் கொண்டதால் சுமுக உடன்பாடு ஏற்பட்டதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார். இதனை ஏற்க மறுத்து போராட்டம் தொடர்வதாக அறிவித்த சாம்சங் இந்தியா தொழிற்சங்கத் தலைவர் (சி.ஐ.டி.யு) தலைவர் முத்துக்குமார், “நிறுவனத்துக்கு வேண்டிய தொழிலாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு அமைச்சர்கள் நாடகம் ஆடுகின்றனர்,” என்றார்.
இதன்பிறகு போராட்டம் நீடித்ததால் போராட்டப் பந்தல் அகற்றம், தொழிலாளர்கள் மீது வழக்குப் பதிவு, நள்ளிரவுக் கைது எனப் பதற்றம் நீடித்தது.
பிபிசி தமிழுக்கு சாம்சங் சொன்ன விளக்கம்
தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பாக பிபிசி தமிழ் அனுப்பிய கேள்விகளுக்கு சாம்சங் இந்தியா ஊடகத் தொடர்பாளர் விளக்கம் அனுப்பியிருந்தார். அதில், ஊதியம், சலுகைகள், பணிச்சூழல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் நேரடியாகத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளதாகக் கூறியிருந்தார்.
மேலும், “ஊழியர்களின் நலனே எங்களுக்குப் பிரதானமாக உள்ளது. இந்தியாவின் அனைத்துச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கிச் செயல்படுகிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறோம்,” என சாம்சங் இந்தியா நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பணியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்பட நான்கு அமைச்சர்கள் ஈடுபட்டனர். அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், நான்கு கோரிக்கைகளை சாம்சங் இந்தியா நிறுவனம் ஏற்றுக் கொண்டதால் இரு தரப்பிலும் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.
“தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதன் தீர்ப்பை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும்,” என்றார் அமைச்சர் எ.வ.வேலு.
“இரு தரப்பிலும் உடன்பாடு எட்டப்பட்டாலும் தொழிலாளர்களிடம் இதனை எடுத்துக் கூறி அவர்களது ஒப்புதலைப் பெற்ற பின்னரே போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும்,” என சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.
புதன்கிழமையன்று (அக்டோபர் 16) சாம்சங் இந்தியா தொழிலாளர்களுடன் பொதுக்குழு கூட்டம் நடத்திய சி.ஐ.டி.யு நிர்வாகிகள், இரு தரப்பு உடன்பாட்டுக்கு ஒப்புதல் பெற்றனர். இதன்பின்னர், போராட்டம் முடிவுக்கு வருவதாக அ.சவுந்தரராஜன் அறிவித்தார்.
“தொழிலாளர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக அமைச்சர் எ.வ.வேலு வாய்மொழியாக கூறியுள்ளார். என் மீதும் வழக்கு போட்டு ஒருநாள் சிறை வைத்தனர். நாளை (அக்டோபர் 17) முதல் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல உள்ளனர். ஒப்பந்த விதிகளை நிறுவனம் மீறாது என நம்புகிறோம்” என பிபிசி தமிழிடம் தெரிவித்தார், சி.ஐ.டி.யு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன்.
அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
ஐந்து கேள்விகளும் பதில்களும்
கேள்வி: பல நாட்களாக, பல மணிநேரமாக பேச்சுவார்த்தை நீடித்தது. இழுபறிக்கு என்ன காரணம்?
பதில்: சாம்சங் இந்தியா நிறுவனத்தில், ‘சி.ஐ.டி.யு தொடர்பான எந்த நடவடிக்கைகளும் இருக்கக் கூடாது’ என்பது நிறுவனத்தின் வாதமாக இருந்தது. அவர்கள் தொடர்ந்து அடம் பிடித்து வந்ததால், அமைச்சர்களிடம் ஒரே ஒரு கேள்வியை முன்வைத்தோம்.
எங்களிடம் 19 கோரிக்கைகள் உள்ளன. அதற்கு எழுத்துப்பூர்வமான பதிலை தொழிலாளர் நலத்துறையில் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றோம். இந்த 19 கோரிக்கைகளில் சம்பள உயர்வு, 7 மணிநேர வேலை உள்பட எதை வேண்டுமானாலும் அவர்கள் மறுக்கட்டும். அது அவர்களின் உரிமை எனக் கூறினோம்.
இதை ஏற்காவிட்டால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தொழிலாளர் தீர்ப்பாயத்துக்கு அரசு சார்பில் அறிக்கை அனுப்ப வேண்டும் என்றோம். தீர்ப்பாயத்துக்கு இந்த வழக்கு செல்லும்போது இரு தரப்பும் வாதங்களையும் முன்வைப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இதற்கு சாம்சங் இந்தியா தரப்பு உடன்படவில்லை.
அதேநேரம், தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வது தொடர்பான கோரிக்கையைப் போராட்டத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை நாங்கள் முன்வைக்கவில்லை. அது சட்டரீதியாக எங்களிடம் வந்து சேரும் என எதிர்பார்க்கிறோம். நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நாளை வர உள்ளது. அப்போது எங்கள் தரப்பு வாதத்தை முன்வைப்போம்.
ஒப்பந்தம் சட்டரீதியாக ஏற்புடையதா?
கேள்வி: சுமுக உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் சட்டரீதியாக ஏற்புடையதா?
பதில்: ஆமாம். ‘தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குச் செல்லும்போது பழிவாங்கும் நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ளக் கூடாது’ என்பதை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் தொழிலாளர் நலத்துறையின் இணை ஆணையர், துணை ஆணையர் என இருவர் கையொப்பமிட்டுள்ளனர். இதன் மூலம் இது அரசு ஆவணமாக மாறிவிட்டது. இந்த விவகாரத்தில் யார் பிரச்னை செய்தாலும் சட்டரீதியாக நடவடிக்கையை எடுக்க முடியும்.
கேள்வி: தொழிற் சங்க அங்கீகாரம் – தொழிற்சங்கப் பதிவு, இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: சி.ஐ.டி.யு ஏற்படுத்தியுள்ள சங்கத்தை சாம்சங் இந்தியா நிறுவனம் ஏற்றுக் கொள்வதை அங்கீகாரம் என்கின்றனர். அப்படியொரு அங்கீகாரம் இருந்தால் நிர்வாகத்துடன் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தைகள் நடக்கும். அதைத் தாண்டி அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.
நிறுவனத்தின் அங்கீகாரம் என்பது பெரிய விஷயம் அல்ல. அதில் சில நிபந்தனைகள் இடம் பெற்றிருக்கும். எங்களுக்கென நிறுவனத்துக்குள் ஓர் அறையை ஒதுக்குவார்கள். இதனால் தொழிலாளர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. தொழிற்சங்கத்தை அரசு பதிவு செய்வது தான் முக்கியம். அதற்கு சாம்சங் இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சங்கத்தின் பெயரில் காப்புரிமைச் சிக்கலா?
கேள்வி: சாம்சங் இந்தியா போராட்டத்தைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் இனி வேறு நிறுவனங்களில் தொழிற்சங்க பதிவுகள் எளிதாக நடக்க வாய்ப்புள்ளதா?
பதில்: கடந்த இரு மாதங்களில் மட்டும் சி.ஐ.டி.யு சார்பில் கொடுத்த ஏழுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கம் பதிவு தொடர்பான விண்ணப்பங்களை ஏற்றுப் பதிவு செய்துள்ளனர். இதுதவிர, 23 நிறுவனங்களில் வெவ்வேறு தொழிற்சங்கங்கள் பதிவு செய்துள்ளன.
இவை எல்லாம் அந்தந்தக் கம்பெனிகளின் பெயர்களில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் மட்டும் தான் ‘சாம்சங்’ எனப் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கேள்வி: ‘சாம்சங் இந்தியா’ என்ற பெயர் காப்புரிமைக்குள் வருவதாகக் கூறியதால் தான் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததாக கூறப்படுகிறதே?
பதில்: இதை அவர்கள் பேச்சுவார்த்தையில் முன்வைத்தனர். ஆனால் இது சரியான வாதம் அல்ல. சாம்சங் என்ற பெயரைப் பயன்படுத்துகிறவர்கள், அதே பெயரிலான பொருள்களை உற்பத்தி செய்யும்போது தான் காப்புரிமை பிரச்னை ஏற்படும்.
அந்த பிராண்டை பயன்படுத்திப் பணம் சம்பாதிப்பது தான் தவறு. நாங்கள் அவர்களுக்குப் போட்டியாக தொழில் நடத்தப் போவதில்லை. ‘இதை ஒரு பிரச்னை என நீங்களும் பேசலாமா?’ என அமைச்சர்களிடம் எடுத்துக் கூறினோம். அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
‘பிடிவாதத்தை தளர்த்திய சாம்சங்’ – அமைச்சர் சி.வி.கணேசன்
இதையடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
“தமிழ்நாட்டில் சொற்பமான எண்ணிக்கையில் முதலாளிகள் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து பெரிய நிறுவனங்களை எல்லாம் தொழில் தொடங்குவதற்காக முதலமைச்சர் அழைத்து வருகிறார். போராட்டம் நீடித்தால் பிற தொழில் நிறுவனங்கள் மத்தியில் தவறான புரிதல் ஏற்படும். அதனால் தான் ஒன்பது முறை பேச்சுவார்த்தை நடத்தினோம். தனிப்பட்ட முறையிலும் சி.ஐ.டி.யு நிர்வாகிகளிடம் வேண்டுகோள் வைத்தேன்,” என்கிறார் சி.வி.கணேசன்.
தொடர்ந்து, சுமுக உடன்பாடு எட்டப்பட்டது குறித்துப் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், “இரு தரப்பிலும் சமசர உடன்பாட்டைத் தொடர்ந்து ஏற்படுத்தியதால் தான் மனக்கசப்பில்லாமல் முடிவுக்கு வந்தது. ‘கூட்டணிக் கட்சிகளின் மனம் நோகாமல் நடந்து கொள்ள வேண்டும்’ என முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். நேற்று முன்தினம் மட்டும் 11 மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்று (அக்டோபர் 15) எட்டு மணி நேரத்துக்கு மேல் பேசினோம். நேற்று தான் சாம்சங் இந்தியா நிறுவனம் தங்களின் பிடிவாதத்தை தளர்த்தியது,” என்றார்.
“நான் அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம், ‘தமிழ்நாட்டுக்கு மிக நல்ல முதலமைச்சர் கிடைத்திருக்கிறார். அவர் மனதை வலிக்கச் செய்ய வேண்டாம். உங்கள் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என நினைக்கிறார். விட்டுக் கொடுங்கள்’ என்றேன். ஒருகட்டத்தில் அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்,” என்றார்.
சாம்சங் இந்தியா நிறுவனத்தின் பொதுமேலாளர் பார்த்திபனிடம் பேச்சுவார்த்தை தொடர்பாகக் கேட்டபோது, “ஊடகத் தொடர்பாளர் மட்டுமே பதில் அளிப்பார். நான் பேச விரும்பவில்லை” என்று மட்டும் பதில் அளித்தார்.
சாம்சங் இந்தியா ஊடகத் தொடர்பாளரின் இமெயில் முகவரிக்கு பிபிசி தமிழ் சார்பில் கேள்விகளை அனுப்பினோம். அதற்கு பதில்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்தக் கட்டுரையில் சேர்க்கப்படும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு