ஏர் இந்தியா, இண்டிகோ, விமானம், வெடிகுண்டு மிரட்டல்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், மெரில் செபாஸ்டியன்
  • பதவி, பிபிசி செய்திகள், கொச்சி

கடந்த 48 மணி நேரத்தில் 10-க்கும் அதிகமான இந்திய விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதனால், விமானப் பாதைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும், பல விமானங்கள் தாமதமாகச் சென்றன.

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, அந்த விமானத்தை மக்கள் அதிகம் இருக்கும் பகுதிக்கு அப்பால் அழைத்துச் செல்ல சிங்கப்பூர் விமானப்படை இரண்டு போர் விமானங்களை அனுப்பியது.

அதற்குச் சில மணி நேரத்திற்கு முன்பு, டெல்லியில் இருந்து சிகாகோ செல்லும் ஏர் இந்தியா விமானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கனடா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வெடிகுண்டு மிரட்டல்கள் – என்ன நடக்கிறது?

இந்தியாவில் விமான நிறுவனங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாகவே இருக்கிறது. ஆனால், திங்கள்கிழமை (அக்டோபர் 14) முதல் திடீரென இது அதிகமாக நடப்பது ஏன் என்று தெளிவாகத் தெரியவில்லை.

இது பற்றிய கருத்துகளைக் கேட்க, அரசின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (Directorate General of Civil Aviation) மற்றும் சிவில் விமானப் பாதுகாப்பு பணியகத்தின் (Bureau of Civil Aviation Security) அதிகாரிகளுக்கு பிபிசி அனுப்பி மின்னஞ்சலுக்கு எந்தவித பதிலும் வரவில்லை.

ஏர் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஆகாஸா ஏர் ஆகிய நிறுவனங்களின் விமானங்களுக்கும் மிரட்டல்கள் வந்துள்ளன.

சமூக வலைதளமான எக்ஸ் (முன்பு ட்விட்டர்) தளத்தில் வந்த மிரட்டலை அடுத்து, கடந்த திங்கள்கிழமை மும்பையில் இருந்து புறப்பட்ட மூன்று சர்வதேச விமானங்கள் தாமதமாயின. சில விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. இது தொடர்பாக ஒரு இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

எக்ஸ் தளத்தில் இடப்பட்ட பதிவில் வந்த மற்றொரு மிரட்டலால் செவ்வாய்க்கிழமை ஓர் ஏர் இந்தியா விமானம் உள்ளிட்ட ஏழு விமானங்கள் நிறுத்தப்பட்டன. தற்போது அந்த எக்ஸ் சமூக வலைதளக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவுகளின் ஸ்கிரீன்ஷாட்களைப் பார்க்கும் போது, பதிவிட்டவர் ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் உள்ளூர் காவல் நிலையத்தை டேக் (Tag) செய்து விமானத்தின் எண்ணைக் குறிப்பிட்டுள்ளார் என்பது தெரியவருகிறது.

ஏர் இந்தியா, இண்டிகோ, விமானம், வெடிகுண்டு மிரட்டல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அக்டோபர் 15 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு வந்தது

ஏர் இந்தியா என்ன சொல்கிறது?

இந்த அச்சுறுத்தல்களுக்குப் பின்னால் இருப்பவர்களை அடையாளம் காணவும், இதனால் ஏற்பட்ட சேதங்களை மீட்க அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு ஒத்துழைத்து வருவதாக ஏர் இந்தியா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு இந்திய விமான நிலையத்திலும் வெடிகுண்டு மிரட்டல் மதிப்பீட்டுக் குழு (Bomb Threat Assessment Committee) உள்ளது. இந்தக் குழுக்கள் அச்சுறுத்தலின் தீவிரத்தை மதிப்பிட்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கிறது. ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்தால், வெடிகுண்டு செயலிழப்பு படை, மோப்ப நாய்கள், ஆம்புலன்ஸ், காவல் துறை மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட துறையினர் நடவடிக்கைகளில் இறங்க வழிவகுக்கும்.

விமானத்தில் ஏற்றப்பட்ட சரக்குகள், விமானத்தில் பயணிகள் எடுத்துச் சென்ற உடமைகள், ஏற்கனவே ஏற்றப்பட்ட உடமைகள் உள்ளிட்டவைகளுடன் பயணிகள் விமானத்திலிருந்து இறக்கப்படுவார்கள். பயணிகள் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். விமானம் பறப்பதற்கு முன், பொறியாளர்கள் மற்றும் பாதுகாப்புக் குழு மீண்டும் விமானத்தை சோதனை செய்யும்.

இதனால் ஏற்படும் தாமதம் காரணமாக, விமான நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஆயிரக் கணக்கான டாலர்கள் செலவாகின்றன.

மற்ற நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் என்றால், சிங்கப்பூர், கனடா போன்ற சர்வதேச நிறுவனங்களும் ஈடுபடும்.

ஏர் இந்தியா, இண்டிகோ, விமானம், வெடிகுண்டு மிரட்டல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏர் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஆகாஸா ஏர் ஆகிய நிறுவனங்களின் விமானங்களுக்கும் மிரட்டல்கள் வந்துள்ளன

சிங்கப்பூர் அரசு என்ன சொன்னது?

செவ்வாய்க்கிழமை அன்று சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஷாங்காய் விமானநிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்படுவதற்கு முன் நகரத்தின் இரண்டு ஜெட்கள் அதற்கு பாதுகாப்பாக சென்றது என்றார். இது, மதுரையில் இருந்து சிங்கப்பூருக்குச் சென்ற விமானம்.

தரையிறங்கியதும், விமானம் விமான நிலையக் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் ஜி எங்க் ஹென் (Ng Eng Hen) தெரிவித்தார்.

விமானம் பாதுகாப்பாக ஷாங்காய் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானம் கனடாவின் இக்காலுயிட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. மிரட்டல் குறித்து ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறையினர் (Royal Canadian Mounted Police) விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

கனடாவின் விமானப்படை விமானம், பயணிகளை சிகாகோவிற்கு அழைத்துச் சென்றதாக ஏர் இந்தியா நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது. ஏர் இந்தியா விமானம் எப்போது புறப்பட அனுமதிக்கப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு