சென்னையில் கணிப்புக்கு மாறாக மழை குறைய என்ன காரணம்? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே?
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணிநேரத்தில் 12 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது சென்னையிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 360 கிலோமீட்டர் தொலைவிலும் புதுச்சேரியிலிருந்து கிழக்கே 390 கிலோமீட்டர் தொலைவிலும் ஆந்திர மாநிலத்தின் நல்லூரிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 450 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து வடதமிழ்நாடு தெற்கு ஆந்திர கடற்கரையோரம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே நாளை (அக். 17) காலை கரையை கடக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரையிலும் அவ்வாறான கனமழை பெய்யவில்லை. ஆங்காங்கே லேசான மழையே பெய்தது.
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் 70 நிவாரண முகாம்களில் 2 ஆயிரத்து 789 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை – எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 8 விமான சேவைகள் ரத்து
தொடர் மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில் இதுவரையில் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பயணிகள், தாங்கள் பயணிக்கும் விமான நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்களின் நிலையை கேட்டு தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற் போல் பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏரிகள் வேகமாக நிரம்புகின்றன
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 38 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 30 ஏரிகளும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
130 ஏரிகள் 75 சதவீதத்தை தாண்டியும் 120 ஏரிகள் 50 சதவீதத்தை தாண்டியும் நிரம்பி உள்ளது ஆக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை குறைந்தது ஏன்?
இந்நிலையில், மிக கனமழைக்கான வாய்ப்பு சென்னைக்கு குறைந்துள்ளதாக தனியார் வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கனமழை பெய்வதற்கான மேகத்திரள்கள் சற்று மேல்நோக்கி சென்றுவிட்டதால் கனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் தன் சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கனமழை பெய்வதற்கான மேகத்திரள்கள் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை மட்டுமல்லாமல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழையே பெய்யும் என அவர் கணித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு