இலங்கையுடன் இணைந்து மோசடி எதிர்ப்பு சட்டங்களை அமுலாக்குவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஆழ்ந்த கரிசனைகளைக் கொண்டுள்ளதாக சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் சீனத் தூதரகம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சீனப் பிரஜைகள் உட்பட பல வெளிநாட்டு சந்தேக நபர்களை இலங்கை பொலிஸார் கைது செய்ததாக அண்மையில் வெளியான செய்திகளை சீனா உன்னிப்பாக அவதானித்து வருகிறது. இச்சம்பவங்கள் இரு நாட்டு மக்களின் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமல்லாமல், சீனாவின் அபிமானத்தையும் கடுமையாக சேதப்படுத்துகிறது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்பையும் பாதிப்பதாகவுள்ளது.
சந்தேக நபர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் அதேவேளையில் சட்டத்திற்கு உட்பட்டு சந்தேக நபர்கள் மீதான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை சட்ட அமுலாக்க முகவர் நிறுவனங்களுக்கு சீனத் தூதரகம் முழு ஆதரவையும் வழங்குகிறது.
தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிகள் 1990 களில் சீனாவில் ஆரம்பமாகியிருந்தன. அதன் பின்னர் பெருமளவில் பரவலடைந்து நாட்டின் ஏராளமான குடிமக்களை பாதித்தது. சீன அரசாங்கம் மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது, தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிக் குற்றங்களைத் தடுக்கும் பாதையைத் தொடர்ந்து ஆராய்ந்து, முன்னோடியான பல முயற்சிகளை முன்னெடுத்துச் செல்கின்றது
இந்த நடவடிக்கைகள் மூலமாக 2021ஆம் ஆண்டில் சீனாவில் தீர்க்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட ஐந்து மடங்கு அதிகமாகவுள்ளது. சீனாவில் இதுபோன்ற நிகழ்வுகள் ஜூன் 2021 முதல் கடந்த 17 மாதங்களில் வெகுவாகக் குறைந்துள்ளது.
உலகில், தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிக் குற்றங்கள் பல்வேறு நாடுகளில் வேகமாக வளர்ந்து பரவி, உலகளாவிய பொதுவான ஆபத்தாகவும், தீர்க்க வேண்டிய உலகளாவிய பிரச்சினையாகவும் மாறியுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் இத்தகைய மோசடிகளை எதிர்த்துப் போராட மியான்மர், கம்போடியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுடன் சீனா பலனளிக்கும் ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது.
அதனடிப்படையில் மிகப்பெரிய குற்றக் கும்பல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் சில குற்றவியல் குழுக்கள் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிறநாடுகளுக்குச் சென்றுள்ளமைக்கான தகவல்கள் உள்ளன.
தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு, புவியியல் அமைவிடம், சீனாவுடனான நட்புறவு போன்றவற்றில் இலங்கைக்கு உள்ள நன்மைகள் காணப்படுகின்றன. இதனை மையப்படுத்தியும் இலங்கை மக்களிடத்தில் இணையத்தள மோசடி தொடர்பில் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும் சில இலத்திரனியல் மோசடி குற்றக் கும்பல்கள் இலங்கைக்குள் உட்புகுந்து மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இலங்கையில் அதிகரித்துள்ள இந்தப்போக்குக்கு சீன அரசாங்கம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது, மேலும் இலங்கையில் இணையவழி மோசடி எதிர்ப்பு சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை சீனா ஆழமான கரிசனையுடன் ஊக்குவிக்கிறது.
தொலைத்தொடர்பு மோசடிகளை திறம்பட முறியடிப்பதற்கும் வலுவான தடுப்பை உருவாக்குவதற்கும், சீனாவின் பொதுப்பாதுகாப்பு அமைச்சு இலங்கை பொலிஸாருடன் இணைந்து விசேட நடவடிக்கையை மேற்கொள்வதற்காக கடந்த செப்டெம்பர் மாதம் ஒரு செயற்குழுவை அனுப்பியிருந்தது.
அதனையடுத்து ஏராளமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். சீனாவின் இணையவழி குற்றங்களைத் தடுப்பதற்கான ஒத்துழைப்பு இப்போது தான் ஆரம்பித்துள்ள நிலையில் அது முழுமை பெறுவதற்கான செயற்பாடுகள் இன்னமும் வெகு தொலைவில் உள்ளன.
உலகமயமாக்கல் காலத்தில், எந்த நாடும் தனிமைப்படுத்தப்பட்டிருக்க முடியாது. சீனாவும் இலங்கையும் பாரம்பரிய நட்புறவைக் கொண்டிருக்கின்றன. பல்வேறு துறைகளில் மிக நெருக்கமான ஒத்துழைப்புக்களைக் கொண்டுள்ளன.
இரு நாட்டு மக்களுக்கு நன்மைகளைக் கொண்டு வருவதற்காக இரு நாடுகளும் எப்போதும் பரஸ்பரம் ஆதரவளித்து வருகின்றன. இலங்கையுடனான சட்ட அமலாக்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், இந்தப் பிரச்சினையைக் கூட்டாகக் கையாள்வதற்கும் விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவும் சீனா தயாராக உள்ளது.
இலங்கை அரசாங்கம், பொலிஸார் மற்றும் மக்களிடத்தில் சீனா புரிந்துணர்வையும் ஆதரவையும் பெறுவதற்கு எதிர்பார்க்கின்றது. – என்றுள்ளது.