தைவானை சுற்றி வளைத்த சீனா, ராணுவத்தை தயார்படுத்தும் தைவான் – அமெரிக்கா என்ன சொல்கிறது?

சீனா - தைவான்

படக்குறிப்பு, கோப்புப் படம்

சீனா திடீரென தைவானை சுற்றி வளைத்து போர் ஒத்திகையை நடத்தி வருவது அந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. தைவானைச் சுற்றிலும் 9 இடங்களில் போர் ஒத்திகையை சீனா நடத்துகிறது.

சீனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தைவான், ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் உறுதி செய்ய தேவையான படைகளை அனுப்பியிருப்பதாக கூறியுள்ளது.

தைவான் தீவு ஒன்றுக்குள் ஊடுருவ முயன்ற சீனர் ஒருவர் பிடிபட்டுள்ளார்.

தைவான் தனது படைகள் தயார் நிலையில் இருப்பது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

சீனா – தைவான் இடையே என்ன நடக்கிறது? அமெரிக்கா என்ன சொல்கிறது?

சீனா - தைவான்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தைவானைச் சுற்றிலும் சீனா போர் ஒத்திகை

தைவானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் ஜாயின்ட் ஸ்வார்ட் 2024பி என்ற பெயரில் போர் ஒத்திகையை சீனா தொடங்கியுள்ளது. தைவான் மீது தாக்குதல் நடத்துவதை உருவகப்படுத்தி, 9 இடங்களில் ஒத்திகை நடத்தப்படுவதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

தைவான் தீவைச் சுற்றிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட சீன கடலோர காவல்படையும் சில கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது.

7 கடற்படை போர்க் கப்பல்கள், 25 போர் விமானங்கள் மற்றும் 4 கப்பல்கள் இருப்பதை கண்டுபிடித்திருப்பதாக தைவான் தெரிவித்துள்ளது.

சீன ராணுவம் கூறுவது என்ன?

தைவானைச் சுற்றிலும் போர் ஒத்திகை நடப்பதை சீன ராணுவம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஒத்திகையில் தரைப்படை, கடற்படை, விமானப்படை, ராக்கெட் படை மற்றும் பிற படையினரும் பங்கேற்றுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. சீன கடலோர காவல்படையும் இந்த ஒத்திகையில் பங்கேற்றுள்ளது.

போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் பல முனைகளில் இருந்தும் கூட்டு தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போருக்கான தயார் நிலை, முக்கிய துறைமுகங்களை முற்றுகையிடுவது, கடல் மற்றும் தரைவழித் தாக்குதல்கள் போன்றவற்றை முன்னிறுத்தி இந்த ஒத்திகை நடப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த பயிற்சிகளை “பிரிவினைவாத சக்திகளுக்கு எதிரான வலுவான தடுப்பு” மற்றும் “தேசிய இறையாண்மையை பாதுகாக்க மற்றும் தேசிய ஒற்றுமையை பேணுவதற்கான சட்டபூர்வமான மற்றும் தேவையான நடவடிக்கை” என்று சீன ராணுவம் விவரிக்கிறது.

அத்துடன், சீன ராணுவத்தின் கிழக்கு படைப் பிரிவு, தைவானை சுற்றிலும் செய்யப்படும் போர் ஒத்திகை குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

தைவானின் இறையாண்மையை சீனா அங்கீகரிக்கவில்லை என்பதும், தைவான் தனக்கு சொந்தமானது என்று சீனா கூறுகிறது என்பதும் நினைவு கூரத்தக்கது.

சீனா - தைவான்

பட மூலாதாரம், People’s Liberation Army social media

படக்குறிப்பு, தைவானைச் சுற்றி வளைத்து சீனா போர் ஒத்திகை செய்யும் இடங்களை காட்டும் வரைபடம்

தைவான் பாதுகாப்புத்துறை பதில்

சீனாவின் ஆத்திரமூட்டும் செயலைக் கண்டிப்பதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜனநாயகத்தையும், இறையாண்மையையும் பாதுகாக்க தேவையான படைகளை அனுப்பியிருப்பதாகவும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் பேணுவது குறித்து கடந்த வாரம் பேசிய அதிபர் லாயின் உறுதிப்பாட்டை அது சுட்டிக்காட்டியுள்ளது.

அச்சுறுத்தலை எதிர்கொள்ள போருக்கு தயாராவோம் என்றும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவுக்குப் பதிலடியாக, தைவானும் தனது தயார் நிலையை வெளிப்படுத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளது.

சீனா - தைவான்

பட மூலாதாரம், Taiwan Ministry of Defence

படக்குறிப்பு, சின்ச்சு விமானப்படை தளத்தில் தயார் நிலையை உறுதிப்படுத்தும் தைவானின் மிராஜ்-2000 போர் விமானம்

தைவான் ராணுவம் தயார் நிலையில் இருக்க உத்தரவு

சீனாவின் நடவடிக்கையை கண்டித்திருந்த தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சீனா இந்த பிராந்தியத்தின் பாதுகாப்புச் சூழலை பலவீனப்படுத்துவதாகவும், சர்வதேச விதிகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நேரடியாக மோதல் ஏற்படும் வராமல் இருக்கும் வகையில் செயல்படுமாறும் அதன் படைகளை கேட்டுக் கொண்டுள்ளது.

சீன ஏவுகணைகளின் நகர்வை ராணுவ புலனாய்வுப் பிரிவு உன்னிப்பாக கண்காணித்து வரும் நிலையில், அனைத்து படைப் பிரிவுகளும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தைவானின் பாதுகாப்பு மண்டலங்கள் உச்சபட்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், போர்க் கப்பல்களும் போர் விமானங்களும் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவிடம் இருந்து வர வாய்ப்புள்ள எந்தவொரு தவறான தகவல் குறித்தும் விழிப்புடன் இருக்குமாறு குடிமக்களை தைவான் கேட்டுக் கொண்டுள்ளது.

சீனா - தைவான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (கோப்புப் படம்)

அமெரிக்கா என்ன சொல்கிறது?

தைவானைச் சுற்றி சீனா மேற்கொண்டுள்ள ராணுவ ஒத்திகையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது.

தைவான் அதிபர் லாயின் வழக்கமான பேச்சுக்குப் பிறகான சீனாவின் இந்த ஒத்திகையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும், அந்த பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் சீர்கெடும் வகையில் சீனா நடந்து கொள்ளக் கூடாது என்று பைடன் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

“தைவான் நீரிணை மற்றும் அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்கெடச் செய்யும் எந்தவொரு நடவடிக்கைகளையும் சீனா தவிர்க்க வேண்டும். அதுவே, பிராந்திய அமைதி மற்றும் வளத்திற்கு அத்தியாவசியமானது” அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்தார்.

ஊடுருவ முயன்ற சீனர் பிடிபட்டார்

தைவானுக்குரிய சிறிய தீவுக்குள் ஊடுருவ முயன்ற சீனாவைச் சேர்ந்த ஒருவர் பிடிபட்டிருப்பதாக தைவான் கடலோர காவல்படையை மேற்கோள் காட்டி ஏ.எஃப்.பி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

தைவானைச் சுற்றிலும் சீனா மிகப்பெரிய போர் ஒத்திகையை நடத்தி வரும் சூழலில், மெங்கு என்ற சிறிய தீவில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீன கடற்கரையில் இருந்து சில மைல் தொலைவில் உள்ள மெங்கு தீவுக்குள் அந்த நபர் ரப்பர் படகு மூலம் ஊடுருவ முயன்றதாக தைவான் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

“சிறிய படகின் ஊடுருவல் முயற்சியானது ராணுவப் பயிற்சியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை” என்று அதன் அறிக்கையை சுட்டிக்காட்டி ஏஜென்சி செய்தி கூறுகிறது.

சீனா - தைவான்

பட மூலாதாரம், Taiwan Ministry of Defence

சீனா - தைவான்

பட மூலாதாரம், Taiwan Ministry of Defence

தைவான் ராணுவத்தின் தயார் நிலை வீடியோ வெளியீடு

சீனாவின் ராணுவ ஒத்திகைக்கு நடுவே தைவானும் தனது படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. இதுதொடர்பாக தைவான் அதிபர் வில்லியம் லாய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணுவம் மற்றும் கடலோர காவல் படை ஆகியவை கடல் மற்றும் வான் பகுதியில் தத்தமது நிலைகளில் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

சீனாவின் போர் ஒத்திகை பிராந்திய அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் குந்தகம் விளைவிப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும் அண்டை நாடுகளை சீனா தனது வலிமையைப் பயன்படுத்தி வற்புறுத்தும் செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிப்புற அச்சுறுத்தல்களில் இருந்து தைவானின் ஜனநாயக அமைப்பையும், தேசிய பாதுகாப்பையும் அரசு பாதுகாக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தைவான் ராணுவத்தின் தயார் நிலை குறித்த வீடியோவை தைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வான் பாதுகாப்பு அமைப்பு, ராணுவ வாகனங்கள், கடற்கடைக் கப்பல்கள் தயார் நிலையில் இருப்பதை அந்த வீடியோ காட்டுகிறது.

சீனா - தைவான்

பட மூலாதாரம், Taiwan Ministry of Defence

சீனாவின் கோபத்திற்கு என்ன காரணம்?

தைவான் அதிபராக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதவியேற்ற லாய், அண்மையில் மக்களுக்கு ஆற்றிய உரையில், தைவானின் தன்னாட்சி அந்தஸ்தை கட்டிக் காக்க உறுதியளித்தார்.

தைவானுக்கு உரிமை கோரும் சீனாவை மறைமுகமாக சாடும் வகையில், “இணைப்பு முயற்சியையோ, நமது இறையாண்மை மீதான ஆக்கிரமிப்பையோ தடுப்பதில் உறுதியாக” இருப்பதாக அவர் சூளுரைத்தார்.

லாய் பதவியேற்றதுமே செய்தது போன்ற போர் ஒத்திகையை இம்முறையும் சீனா செய்யும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சீனா - தைவான்

பட மூலாதாரம், EPA

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு