சாம்சங் ஊழியர் பிரச்னை தேங்கி நிற்பதற்கு தி.மு.க – மார்க்சிஸ்ட் தொழில் சங்கங்களின் மோதல் காரணமா?

சாம்சங் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்

சாம்சங் ஊழியர்கள் போராட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், தி.மு.க தொழிற்சங்கமும் (தொ.மு.ச), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமும் (சி.ஐ.டி.யு) ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருப்பது, முடிவு எட்டப்படாத இந்த விவகாரத்தில் தேக்க நிலையை உருவாக்கியுள்ளது.

சாம்சங் இந்தியா நிறுவனத்தின் தொழிலாளர்கள், சி.ஐ.டி.யு ஆதரவு பெற்ற தங்கள் சங்கத்தை தொழிலாளர் நலத்துறை பதிவு செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், இரவுப்பணிக்கான தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த ஒரு மாத காலமாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியு (இந்திய தொழிற்சங்க மையம்) இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் சாம்சங் தொழிலாளர் பிரச்னை முடிவுக்கு வராத நிலையில், தி.மு.க-வின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் (தொ.மு.ச), அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு-வை குற்றம் சாட்டியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சாம்சங் போராட்டம்

தி.மு.க – மார்க்சிஸ்ட் எதிரெதிர் குற்றச்சாட்டுகள்

சி.ஐ.டி.யு இந்தப் பிரச்னையை ஊதிப் பெரிதாக்கக் கூடாது என்று கூறியுள்ள தொ.மு.ச பேரவை, இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில், தொழிற்சங்கம் பதிவு செய்வது தொடர்பாக நீதிமன்றத்துக்கு சென்று, இந்த விவகாரத்தில் ‘தேக்க நிலையை உருவாக்கி, தொழிலாளர் நலத்துறை பதிவெண் வழங்கவில்லை என்று அரசின் மீது குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது’ என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய சி.ஐ.டி.யு மாநிலச் தலைவர் அ.சவுந்தரராஜன் இதனை மறுத்தார். “நீதிமன்றத்துக்குச் ஏன் சென்றோம். சங்கத்தை தொழிலாளர் நலத்துறை உரிய காலத்தில் பதிவு செய்யவில்லை என்பதால் சென்றோம். தொழிலாளர் நலத்துறை சங்கத்தைப் பதிவு செய்கிறோம் என்று இப்போது கூறினால் கூட, நீதிமன்ற வழக்கு தானாக நீர்த்துப் போய்விடும். நீதிமன்றம் சொல்லி சங்கத்தைப் பதிவு செய்வது அரசுக்கு அவமானம் இல்லையா,” என்று கேள்வி எழுப்புகிறார்.

ஆனால் தொ.மு.ச பேரவை தனது அறிக்கையில், “சங்கத்தை அங்கீகரிக்க இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் சட்டம் இல்லை. சட்டம் இல்லாதபோது சட்டப்படி அரசு நடக்கவில்லை என்று குறை கூறுவது நியாயமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

“சங்க அங்கீகாரத்தையும் சங்கத்தை பதிவு செய்வதையும் மாற்றி மாற்றிச் சொல்லி மக்களையும் ஊடகங்களையும் குழப்புகிறார்கள். சாம்சங் தொழிலாளர் சங்கத்தை 45 நாட்களுக்குள் தொழிலாளர் நலத்துறை பதிவு செய்யவில்லை. அதைச் செய்யுங்கள் என்று தான் கூறுகிறோம். இதற்கு சாம்சங் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த எதிர்ப்பை மீறி அரசால் பதிவு செய்ய முடியும். அங்கீகாரம் பெற நாங்கள் அவசரப்படவே இல்லை. தொழிலாளர்கள் எங்களை அங்கீகரித்து விட்டனர். அது தான் எங்களுக்கான உண்மையான அங்கீகாரம்,” என்றார் சவுந்தரராஜன்.

சாம்சங் போராட்டம்

படக்குறிப்பு, சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன்

சங்கப் பதிவு, அங்கீகாரம் – என்ன வித்தியாசம்?

சங்கமாக இணையும் ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள், தங்கள் சங்கத்தைப் பதிவு செய்ய தொழிலாளர் நலத்துறையிடம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்து 45 நாட்களுக்குள் தொழிலாளர் நலத்துறை சங்கத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

ஒரு நிறுவனம் தனது ஊழியர்கள் உருவாக்கியுள்ள சங்கத்தை அங்கீகரிக்கலாம். அப்படி அங்கீகரிக்கும் சங்கத்துடன் தான் அந்த நிறுவனம் தொழிலாளர் நலன் குறித்து எழும் பிரச்னைகளைப் பேசித் தீர்க்கும்.

சாம்சங் விவகாரத்தில் சாம்சங் இந்தியா ஊழியர்கள் தொழிற்சங்கம் (SIWU) என்று ஊழியர்கள் உருவாக்கிய சங்கத்தைப் பதிவு செய்யக் கோரி தொழிலாளர் நலத்துறையிடம் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் 85 நாட்களாகியும் சங்கம் பதிவு செய்யப்படவில்லை. அதன் பிறகு, ஊழியர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

மறுபுறம் சாம்சங் நிர்வாகம், SIWU என்ற ஊழியர் சங்கத்தை அங்கீகரிக்க மறுத்து வருகிறது. மேலும், சாம்சங் இந்தியா ஊழியர்கள் சங்கம் என்று ‘சாம்சங்’ பெயரை பயன்படுத்தி சங்கம் பதிவு செய்யக் கூடாது என்று தொழிலாளர் நலத்துறையில் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மாறாக, Workers Committee என்ற பெயரில் சாம்சங் நிர்வாகம் தனது ஊழியர்கள் சிலரை ஒருங்கிணைத்து அவர்களுடன் மட்டுமே பேசுவோம் என்று கூறியது.

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பிடம் சி.ஐ.டி.யு புகார்

இதற்கிடையில் சி.ஐ.டி.யு அகில இந்தியப் பொதுச் செயலாளர் தபன் சென், இந்த விவகாரத்தில் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு தலையிடக் கோரிக் கடிதம் அனுப்பியுள்ளார். சங்க நடவடிக்கைகளை அனுமதிக்காத சாம்சங் நிர்வாகத்தின் மீதான தங்கள் புகாரை பதிவு செய்யக் கோரியுள்ளார்.

அதில் “இந்தியத் தொழிற்சங்கச் சட்டம் 1926-இன் படி, சாம்சங் இந்தியா ஊழியர்கள் தொழிற்சங்கம் விண்ணப்பித்து 45 நாட்களுக்குள் பதிவு செய்யப்படவில்லை. தொழிற்சங்கங்களின் பதிவாளர் சாம்சங் நிர்வாகத்தின் அழுத்தத்துக்கு பணிந்துவிட்டது,” என்று குறிப்பிட்டிருந்தார்.

சாம்சங் இந்தியா ஊழியர்கள் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது, தொழிற்சங்கத்தை ஏற்றுக்கொள்வதில்லை என்று நிர்வாகம் தெரிவித்துவிட்டது. “இந்தக் கொள்கை இந்தியாவின் தொழிலாளர் சட்டங்களுக்கு முரணானது. இது நிறுவனம் அமைந்திருக்கும் நாட்டின் சட்டங்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சட்டங்களுக்கும் முரணானது,” என்று குறிப்பிட்டிருந்தார்.

சாம்சங் போராட்டம்

முதல்வர் மீது தனிப்பட்ட விமர்சனமா?

இதற்கிடையில் போராட்டத்தின் போது தான் ஆற்றிய உரை ஒன்றில் அ.சவுந்தரராஜன் முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சித்தது இரு சங்கங்களுக்கு இடையே மேலும் கசப்பை உருவாக்கியது. தொ.மு.ச விடுத்த அறிக்கையில், “முதல்வரை தரம் தாழ்ந்து பேசுவதும் அவரை விமர்சிப்பதும் ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு சரியாக இருக்குமா என்பதை நீங்கள் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்,” என்றும் தொ.மு.ச கூறியுள்ளது.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அ.சவுந்தரராஜன், “போராட்டக் களத்தில் பேசும் போது வார்த்தை தவறாக வந்துவிட்டது. பேசும்போது, நாகரிகம் கடைப்பிடிக்க வேண்டும், அதை மீறக் கூடாது. அது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேசியாகிவிட்டது. அப்படியே நான் தவறு செய்ததாக இருந்தால் கூட நடவடிக்கை எடுக்க வேண்டியது என் மீது தானே. என்னை வைத்து, 1,800 குடும்பங்களின் நலன் கருதாமல் ஒரு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைப்பது சரியா?அரசு எப்படி இந்த இரண்டையும் இணைத்துப் பார்க்கமுடியும்?” என்கிறார்.

பெயர் குறிப்பிட விரும்பாத தொ.மு.ச-வின் மூத்த தலைவர் பிபிசியிடம் பேசும் போது, “இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முதல்வரை தான் நாட வேண்டும். அவரை விமர்சிப்பது சரியா? 2026-இல் தி.மு.க வாக்குகளை இழக்கும் என்று கூறுகிறார்கள். அரசியலில் இருப்பவர்கள் இதை எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்?” என்றார்.

சாம்சங் போராட்டம்

பட மூலாதாரம், Facebook/M.Shanmugam

படக்குறிப்பு, தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம்

நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தும் போராட்டம் தொடர்வது ஏன்?

மிகுந்த அழுத்தத்துக்கு பிறகு, சாம்சங் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தது. அக்டோபர் 7-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் 14 கோரிக்கைகளுக்கு சாம்சங் நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.

தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம், “சாம்சங் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழக்கமாக ஏப்ரல் மாதம் வழங்கப்படும். இப்போது நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இடைக்கால நிவாரணமாக ரூ.5,000 வழங்கப்படும் என்று ஒப்புக்கொண்டுள்ளது. ஏ.சி., பேருந்து உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்படும் என ஏற்றுக் கொண்டுள்ளது,” என்றார்.

இந்தப் பேச்சுவார்த்தை, அதிகபட்ச ஊழியர்களின் ஆதரவு கொண்டிருக்கும் தங்கள் சங்கத்துடன் நடத்தப்படவில்லை என்று சி.ஐ.டி.யு குற்றம் சாட்டுகிறது.

சாம்சங் இந்தியா ஊழியர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் முத்துக்குமார், “ஏ.சி., பேருந்தும் ஊக்கத்தொகையும் நாங்கள் கேட்கவே இல்லையே. கோரிக்கை வைத்தவர்கள் நாங்கள், எங்களிடம் பேசாமல் பேச்சுவார்த்தை முடிந்தது என்று எப்படி கூற முடியும்? பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறையில் அல்லாமல் சிறிய குழுவுடன் ஏன் அமைச்சர் அறையில் நடைபெற்றது? ஊதிய முரண்பாடுகளை களைவது குறித்தும், இரவுப்பணிக்கான தொகை குறித்தும் பேச்சுவார்த்தையில் ஏதும் பேசப்படவில்லையே,” என்று கேள்வி எழுப்புகிறார்.

சாம்சங் போராட்டம்

படக்குறிப்பு, சாம்சங் இந்தியா ஊழியர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் முத்துக்குமார்

மேலும் பேசிய முத்துக்குமார், “நிர்வாகம் சங்கத்துடன் பேசுவதற்கு, அந்த சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும். சங்கத்தை அங்கீகரிக்க, பதிவு செய்து ஓராண்டுக் காலமாகும். எம்.ஆர்.எஃப் நிறுவனத்தில் தொ.மு.ச-வுக்கு 1,000 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், 100 பேர் கொண்ட மற்றொரு சங்கத்தை தான் நிறுவனம் அங்கீகரித்துள்ளது. அவர்களுடன் தான் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இது சி ஐ டி யுவுக்கு தெரியாதா? ஒரு தொழிற்சங்கவாதி என்ற முறையிலும் கம்யூனிச உணர்வுடனும் தோழமை சங்கத்தை அரவணைத்துச் செல்ல முயன்று வருகிறேன்,” என்றார்.

போராட்டத்திற்குத் தீர்வு வருமா?

பண்டிகை காலம் தொடங்கி விட்ட நேரத்தில் நிறுவனத்தின் உற்பத்தி பாதித்து, தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு மாதச் சம்பளம் கிடைக்காமல் இருபக்கமும் இழப்பைச் சந்தித்து வருகின்றன.

போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அரசு ஒரு புறம் வலியுறுத்த, தான் ஒப்புக்கொண்ட கோரிக்கைகள் ஏற்றுக்கொண்டு தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு வர வேண்டும் என்று நிர்வாகம் மறுபுறம் தெரிவிக்க, மற்றொரு புறம் மேலும் போராட்டங்களை அறிவித்துள்ளது சி.ஐ.டி.யு.

அக்டோபர் 16-ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், 18-ஆம் தேதி சென்னையில் சாம்சங் ஊழியர்களின் ஒரு நாள் உண்ணாவிரதம், 21-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சி.ஐ.டி.யு தொழிற்சாலை ஊழியர்களின் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சங்கத்தைப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊழியர்கள் சார்பாகக் தொடுக்கப்பட்ட வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது

இந்தப் போராட்டத்துக்கு என்ன தான் தீர்வு என்று கேட்டபோது, “சங்கத்தைப் பதிவு செய்துவிட்டால், போராட்டத்தை எப்படி முடிக்க வேண்டும் என உடனடியாகப் பேசத் தயாராக இருக்கிறோம்.” என்கிறார் அ.சவுந்தரராஜன்.

ஆனால், தொ.மு.ச சண்முகம், “சங்கத்தைப் பதிவு செய்தால் மட்டும் போதுமா? மற்ற பிரச்னைகள் எல்லாம் தீர்ந்துவிடுமா?” என்று கேள்வி எழுப்புகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு