டி20 தொடரை வென்ற இந்தியா; அபிஷேக் சர்மாவின் ரன்களை கூட எடுக்க முடியாமல் இங்கிலாந்து தோற்றது எப்படி?
- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
17 பந்துகளில் அரைசதம், 37 பந்துகளில் சதம், 13 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள், 54 பந்துகளில் 135 ரன்கள், 250 ஸ்ட்ரைக் ரேட் என, மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 02) நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டம் முழுவதும் அபிஷேக் சர்மாதான் நிரம்பியிருந்தார், அவரின் நாளாகவே நேற்று முடிந்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த கடைசி மற்றும் டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் சேர்த்தது. 248 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 10.3 ஓவர்களில் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
2வது அதிகபட்ச வெற்றி
இந்திய அணி டி20 போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் வென்ற 2வது போட்டி இதுவாகும். இதற்கு முன் 2023ல் நியூசிலாந்துக்கு எதிராக 168 ரன்களில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல், இங்கிலாந்துக்கு எதிராக இதற்குமுன் 2012ல் 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்ததே இந்திய அணியின் அதிகபட்ச ரன்கள் வித்தியாசமாக இருந்தநிலையில் அதையும் இந்திய அணி முறியடித்தது. இந்த வெற்றியோடு இந்திய அணி 8 முறை டி20 போட்டிகளில் 100 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வென்றுள்ளது. ஐசிசி முழுநேர உறுப்பு நாடுகளில் எந்த அணியும் செய்யாத சாதனையாகும்.
இங்கிலாந்தின் தேவையற்ற சாதனை
ஆடவருக்கான டி20 போட்டிகளிலேயே இதுதான் 3வது குறைந்தபட்ச ஸ்கோராகும், பில் சால்ட் 21 பந்துகளில் அரைசதம் அடித்தபோதும் 97 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்து போட்டி ஒரு தரப்பாகவே முடிந்தது. இங்கிலாந்து அணியின் 8 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
அதுமட்டுமல்லாமல், இதற்கு முன் 2012ம் ஆண்டில் இந்திய அணிக்கு எதிராக 14.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி ஆட்டமிழந்திருந்தநிலையில் நேற்று அந்த ஓவர்களைவிடக் குறைவாக 10.3 ஓவர்களிலேயே ஆட்டமிழந்தனர்.
ஐசிசி முழுநேர உறுப்பு நாடுகளில் ஒரு அணி குறைவான ஓவர்களில் ஆட்டமிழப்பது 2வது முறையாகும். இதற்கு முன் நியூசிலாந்துக்கு எதிராக வங்கதேசம் 9.3 ஓவர்களில் ஆட்டமிழந்திருந்தது, அதற்குப்பின் இங்கிலாந்து தற்போது 10.3 ஓவர்களில் ஆல்அவுட் ஆகியது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
வருண் சக்ரவரத்தி தொடர் நாயகன்
இந்த போட்டியில் 135 ரன்கள் சேர்த்த வெற்றியை உறுதி செய்த சாதனை நாயகன் அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாகவும், இந்தத் தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இருநாடுகளுக்கு இடையிலான டி20 தொடரில் ஒரு பந்துவீச்சாளர் எடுத்த 2வது அதிகபட்ச விக்கெட்டுகள் என்ற சாதனையை வருண் பதிவு செய்தார். இதற்கு முன் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் ஜேஸன் ஹோல்டர் 15 விக்கெட்டுகளை சேர்த்திருந்தார்.
சூர்யகுமார் கூறியது என்ன?
வெற்றிக்குப் பின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் “இந்த மைதானத்துக்கு வந்தாலே எனக்கு சிறிய அறிகுறி தெரிந்துவிடும். எந்த மாதிரியான கிரிக்கெட்டை ஆடுகறோம், அதை வெளிப்படுத்துகிறோம் என்பது குறித்துப் பேசியிருந்தோம், அதை சிறப்பாகச் செய்தோம்.
அதிக ரிஸ்க் உள்ள இந்த தொடரில் இறுதியாக எங்களுக்குரிய வெகுமதி கிடைத்துள்ளது. அபிஷேக் பேட்டிங் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, அற்புதமாக இருந்தது. கடினமான உழைப்புக்கு வருணுக்குக் கிடைத்த பரிசுதான் தொடர்நாயகன். எங்களின் ஃபீல்டிங் பயிற்சியாளருடன் சேர்ந்து வருண் கடினமாக செய்த பயிற்சிகளுக்குப் பலன் கிடைத்துள்ளது. எப்போதும் புதிதாக சிந்தித்து வித்தியாசமாகப் பந்துவீசுவார்” எனத் தெரிவித்தார்
மன உறுதியுடன் வெற்றி
பொதுவாக இதுபோன்ற இரு நாடுகளுக்கு இடையிலான டி20 தொடரில் இதுபோன்ற பெரிய ஸ்கோரை ஒரு அணி அடித்துவிட்டால், எதிரணி தார்மீக ரதியாக மன உறுதியை, நம்பிக்கையை இழந்துவிடும், பேட்டர்களும் மனது வைத்தால் மட்டுமே, ரன் ரேட்டை தொடர்ந்து குறையவிடாமல் கொண்டு சென்றால் மட்டுமே வெல்ல முடியும்.
‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற ரீதியில் இதுபோன்ற ஸ்கோரை எடுத்துவிட்டாலே ஒரு அணி ஏறக்குறைய வென்ற மாதிரிதான். அதேபோல், நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 247 ரன்களை எடுத்தபோதே வெற்றி உறுதியானது.
இறுதியாக அபிஷேக் சர்மா அடித்த 135 ரன்களைக் கூட இங்கிலாந்து அணியால் கடக்க முடியாமல் அபிஷேக் சர்மாவிடமே தோல்வி அடைந்துள்ளது.
அபிஷேக்கின் அசாத்திய சாதனைகள்
அபிஷேக் சர்மா நேற்று மும்பை மைதானத்தில் ஷாட்களை அடிக்காத இடமே இல்லை எனலாம். இடதுபுறம், வலதுபுறம், ஸ்ட்ரைட், மிட்ஆன், லாங்ஆன், கவர் டிரைவ், ரிவர்ஸ் ஸ்வீப், என அனைத்து ஷாட்களையும் ஆடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை மிரளவைத்தார்.
அபிஷேக் சர்மா நேற்று 54 பந்துளில் 135 ரன்கள் சேர்த்ததில் 13 சிக்ஸர்கள் அடங்கும். அதாவது, அபிஷேக் சர்மா இந்த ஆட்டத்தில் அவர் சந்தித்த ஒவ்வொரு 4 பந்துகளிலும் ஒரு சிக்ஸரை விளாசியுள்ளார்.
அபிஷேக் சர்மா மட்டுமே நேற்று ஏராளமான சாதனை செய்துள்ளார். அது குறித்த விவரம் வருமாறு
அபிஷேக் சர்மா 17 பந்துகளில் அரைசதம் அடித்து, அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய பேட்டர்களில் குருநாதர் யுவராஜ் சிங்(12பந்து) அடுத்தார்போல் 2வது இடத்தில் அபிஷேக் உள்ளார். பவர்ப்ளே முடிவதற்குள் அபிஷேக் 58 ரன்களைச் சேர்த்துவிட்டார்.
37 பந்துகளில் சதம் அடித்து அதிவேகமாக சதம் அடித்த இந்திய பேட்டர்களில் ரோஹித் சர்மாவுக்கு (35பந்துகள்) அடுத்தார்போல் 2வது இடத்தில் அபிஷேக் சர்மா உள்ளார்.
இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக 135 ரன்கள் சேர்த்த அபிஷேக் சர்மாவின் ஸ்கோர்தான் டி20 போட்டியில் இந்திய வீரர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் சுப்மான் கில் 126 ரன்களை நியூசிலாந்துக்கு எதிராகச் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் உலக டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் 156 ரன்களுக்கு அடுத்தார்போல் அபிஷேக் உள்ளார்.
அபிஷேக் சர்மா நேற்றைய ஆட்டத்தில் 13 சிக்ஸர்களை விளாசி, ஒரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்று சாதனை புரிந்தார். இதற்கு முன் 2017ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா 10 சிக்ஸர்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது, அதை அபிஷேக் முறியடித்தார்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் சேர்த்தது. இதுதான் பவர்ப்ளேயில் இந்திய அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் 2021ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக 82 ரன்கள் சேர்த்திருந்ததே இந்திய அணியின் அதிபட்சமாக இருந்தது.
அதுமட்டுமல்ல இந்திய அணி 100 ரன்களை 6.3 ஓவர்களில் நேற்று அதிவேகமாக அடைந்தது, இதற்கு முன் வங்கதேசத்துக்கு எதிராக 7.1 ஓவர்களில் அடைந்திருந்த நிலையி்ல் இப்போது அதைவிட வேகமாக எட்டியதற்கு அபிஷேக் சர்மாவே காரணம்.
டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சேர்க்கப்பட்ட 2வது அதிபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் ஆஸ்திரேலிய அணி 248 ரன்கள் சேர்த்திருந்தது, அதைவிட ஒரு ரன் குறைவாக இந்திய அணி சேர்த்தது. வான்ஹடே மைதானத்திலும் அடிக்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோராகும்.
திலக்வர்மா, அபிஷேக் கூட்டணி 7.1 ஓவர்களில் 115 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எட்டியது. இந்திய அணியில் எந்த விக்கெட்டுக்கும் இடையே சேர்க்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுதான்.
25 வயதுக்குள்ளாகவே அபிஷேக் சர்மா 6 சர்வதேச சதங்களை விளாசியுள்ளார், அதில் 2 டி20 போட்டியில் அடிக்கப்பட்டவை. இதில் 2 சதங்கள் 40 பந்துகளுக்குள்ளாகவே அடிக்கப்பட்டவை.
இப்படி நேற்றை ஆட்டம் முழுவதும் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் மட்டுமே நிரம்பியிருந்தது.
பந்துவீச்சாளர்களை பந்தாடிய அபிஷேக்
இங்கிலாந்து அணியின் எந்தப் பந்துவீச்சாளரையும் அபிஷேக் சர்மா நேற்று விட்டுவைக்கவில்லை. அதிவேகப் பந்துவீச்சாளர் என அறியப்படும் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 55 ரன்கள், ஓவன்டன் 3 ஓவர்களில் 48, லிவிங்ஸ்டோன் 2 ஓவர்களில் 29 ரன்கள், ரஷீத் 3 ஓவர்களில் 41 ரன்கள், பிரைடன் கார்ஸ் 3 ஓவர்களில் 48 என அனைவரின் ஓவர்களையும் அபிஷேக் சிக்ஸர், பவுண்டரி என சிதறிடித்தார். அபிஷேக் சர்மாவுக்கு எவ்வாறு பந்துவீசுவது எனத் தெரியாமல் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் வெறுத்துவிட்டனர்.
பட்லருக்கு பதிலடி கொடுத்த ஷிவம் துபே
இந்த ஆட்டத்தில் ஷிவம் துபே 2 ஓவர்கள் பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து கேப்டன் பட்லருக்கு பதிலடி கொடுத்தார். கடந்த ஆட்டத்தில் துபே கன்கசனில் வெளியேறியபோது அவருக்குப்பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா சேர்க்கப்பட்டது சர்ச்சைக்குள்ளானது. அவர் எடுத்த 3 விக்கெட்டுகளும் விமர்சிக்கப்பட்டது.
இங்கிலாந்து கேப்டன் பட்லரும், துபேவுக்கு சரியான மாற்று ராணா அல்ல. துபே ஒரு பேட்டர், ராணா பந்துவீச்சாளர். துபேயால் பந்துவீச முடியுமா, விக்கெட் வீழ்த்த முடியுமா எனக் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் ஷிவம் துபே பந்துவீசி பில் சால்ட், பெத்தெல் ஆகிய 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
அபிஷேக்கால் மறக்கடிக்கப்பட்ட பேட்டர்கள்
அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தால் இந்திய அணியின் சில பேட்டர்களின் செயல்பாடு மறக்கடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சஞ்சு சாம்ஸன், கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடர் முழுவதும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக கேப்டன் சூர்யகுமார் 2 டக்அவுட்கள் உள்பட ஒற்றை இலக்க ரன்களைக்கூட தொடரில் கடக்கவில்லை, ஒட்டுமொத்தமாக 28 ரன்கள்தான் இந்தத் தொடரில் சூர்யகுமார் சேர்த்துள்ளார்.
அதேபோல சாம்ஸன் இந்தத் தொடர் முழுவதும் ஒரு அரைசதம் கூடஅடிக்கவில்லை, பவர்ப்ளே ஓவர்கள்வரைகூட சாம்ஸன் நிலைத்து ஆடவில்லை. இந்தத் தொடர் முழுவதும் ஒரே மாதிரியாக பவுன்ஸரில் லெக்சைடில் ஷாட் அடித்துதான் ஆட்டமிழந்தார். 3 முறை ஆர்ச்சர் பந்துவீச்சிலும் நேற்று மார்க் உட் பந்திலும் சாம்ஸன் ஆட்டமிழந்தார்.
ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர்கள் தனிநபராக இருந்து அணிக்கு வெற்றி தேடித்தந்தால் இவர்களின் மோசமான ஆட்டமும் ஃபார்ம் இல்லாததும் மறைக்கப்பட்டது. திலக் வர்மா, அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்டியா, துபே, வருண் சக்ரவர்த்தி ஆகியோரின் தனித்துவமானஆட்டத்தால் 4 வெற்றிகள் கிடைத்தபோது சூர்யகுமார், சாம்ஸன் மோசமான ஃபார்ம் பெரிதாகத் தெரியவில்லை.
இந்திய அணியிலும் நேற்று அபிஷேக் சர்மா(135), திலக் வர்மா(24), துபே(30) ஆகியோரைத் தவிர நடுவரிசை வீரர்கள் ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் பெரிதாக ரன் சேர்க்கவில்லை, விக்கெட்டையும் விரைவாக இழந்தனர்.
இங்கிலாந்து மோசமான பேட்டிங்
இங்கிலாந்து அணி தரப்பில் பில் சால்ட் தவிர எந்த பேட்டரும் ஒற்றை இலக்க ரன்னைக்கூட கடக்கவில்லை.
பீல்டர்களை நிற்க வைத்த இடத்தில் கேட்சை கொடுத்து இங்கிலாந்து பேட்டர்கள் தோல்வியை தழுவினர். பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கலம் தலைமையில் ஆக்ரோஷமான பேஸ்பால் ஆட்டத்தை விளையாடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் இங்கிலாந்து பேட்டர்கள் வெளிப்படுத்தவில்லை.
இதில் விதிவிலக்காக பில் சால்ட் அரைசதம் அடித்து ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஃபார்முக்கு வந்துள்ளார்.
இந்தியத் தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண், துபே, அபிஷேக் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு