காவல்துறை தேர்வில் முறைகேட்டை வெளிப்படுத்தியதால் ஏடிஜிபியின் அறை எரிக்கப்பட்டதா?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
காவல்துறையினர் தேர்வில் இருந்த முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியதால், தனது உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் வகையில் தனது அறை எரிக்கப்பட்டதாக தமிழக ஏடிஜிபி ஒருவர் குற்றம்சாட்டிய கடிதம் ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.
ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை காவல் துறை மறுத்திருக்கிறது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் ஏடிஜிபி மற்றும் உறுப்பினராக இருந்தவர் கல்பனா நாயக்.
சென்னை எழும்பூரில் உள்ள அவரது அலுவலக அறை, கடந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில் தீ பிடித்து எரிந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதியன்று அவர் தமிழக காவல்துறை தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
காவல்துறையினருக்கான தேர்வில் நடந்த குளறுபடிகளைத் தான் சுட்டிக்காட்டியதாலேயே தனது உயிருக்குக் குறி வைக்கப்பட்டதாக அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடிதத்தில் உள்ள தகவல்கள் என கூறி ஆங்கில நாளிதழ் ஒன்றில் இன்று செய்தி ஒன்று வெளியானது.
என்ன நடந்தது?
தமிழ்நாடு காவல்துறையின் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், சிறையின் வார்டன்கள், தீயணைப்புத் துறையினர் ஆகியோரை தமிழ்நாடு சீருடைப் பணியார் தேர்வு வாரியம் தேர்வுசெய்து வருகிறது.
‘அப்படி தேர்வுசெய்வதில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும்போது பல முறைகேடுகளைத் தான் சுட்டிக்காட்டியதாகவும் அதன் காரணமாக, அவை சரிசெய்யப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்தை தவிர்த்ததாகவும் அதன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஏற்படவிருந்த சங்கடம் தவிர்க்கப்பட்டதாகவும்’ கல்பனா நாயக் தனது கடிதத்தில் கூறியுள்ளார் என அந்த நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இதன் காரணமாகவே தனது உயிருக்கு ஆபத்து விளைந்ததாகவும் அரசு சொத்துக்கு சேதம் ஏற்பட்டதாகவும் அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.
‘துணை ஆய்வாளர்களையும் மற்றவர்களையும் தேர்வுசெய்யும்போது இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் மிகப் பெரிய குளறுபடிகள் இருந்ததை தான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுட்டிக்காட்டியபோதும் அவை கண்டுகொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்’ என அந்த நாளிதழ் செய்தி குறிப்பிட்டது.
கருகிப்போன அறை
“நான் என் அறையைச் சென்று பார்த்தபோது, எனது நாற்காலி எரிந்து, கருகிப் போயிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். நான் எனது அலுவலகத்திற்கு சற்று முன்பாக வந்திருந்தால் நான் என் உயிரைக் கூட இழந்திருப்பேன். காவல்துறையினரைத் தேர்வுசெய்வதில் அந்த ஆண்டு மட்டுமல்லாமல் அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் இருந்த மிகப் பெரிய தவறுகளைச் சுட்டிக்காட்டியதே என் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்குச் சென்றுவிட்டது” என்று கல்பனா நாயக் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக அந்த நாளிதழ் கூறியது.
இந்தச் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டுமெனக் கோரி ஆகஸ்ட் 15ஆம் தேதி காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலுக்கு இது குறித்து கல்பனா நாயக் இந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்.
மேலும் அந்த செய்தியின்படி அவர் இந்தக் கடிதத்தில், “தீ விபத்து நடந்ததற்கு அடுத்த நாள், தன்னை பரிசீலிக்காமலும் தன்னுடைய ஒப்புதல் இல்லாமலும் தேர்வுசெய்யப்பட்டவர்களின் புதிய பட்டியல் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் வெளியானது. மற்ற காவலர்கள் சூழ்ந்திருக்கும்போதே ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாதது காவல்துறையின் மீதே களங்கத்தை ஏற்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
காவல்துறை கூறுவதென்ன?
இந்தச் செய்தி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காவல்துறை இது தொடர்பாக விளக்கம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, தேர்வு வாரியத்தில் நடந்ததாகக் கூறப்படும் குளறுபடி சரிசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
”750 காவல்துறை துணை ஆய்வாளர்கள், தீயணைப்புத் துறையின் நிலைய அதிகாரிகளைத் தேர்வுசெய்து, தற்காலிகப் பட்டியல் கடந்த ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் கடைபிடிக்கப்பட்டிருந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஐந்து விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றம் 2020ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பின்படி பட்டியலை வெளியிட வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இட ஒதுக்கீட்டு முறை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது என்றும் அதனைச் சரிசெய்து, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி புதிய பட்டியல் வெளியிடப்படும் என்றும் நீதிமன்றத்தில் தேர்வு வாரியம் ஒப்புக்கொண்டது.
இதனை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் தேவையான மாற்றங்களைச் செய்து புதிய பட்டியலை வெளியிடும்படி கூறியது.
அதன்படி புதிய பட்டியல் கடந்த ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆகவே, பட்டியலில் இருந்த குளறுபடி, உயர் நீதிமன்றம் கூறியிருந்தபடி சரிசெய்யப்பட்டுவிட்டது. ஆகவே ஏடிஜிபியின் பரிந்துரைகள் முழுமையாக பரிசீலிக்கப்பட்டன. இது தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மையானவை அல்ல” என அந்த விளக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது.
ஏடிஜிபியின் அலுவலகம் தீ பிடித்த விவகாரம் தொடர்பாக, உடனடியாக அவரது புகார் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்டு, முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டதாக விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
”தீ பிடித்த விவகாரம் தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் அதே நாளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு புலனாய்வு துவங்கியது. மின்துறை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள், தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், தனியார் ஏசி நிறுவனத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப பணியார்களை உள்ளடக்கிய குழு திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையர் தலைமையில் சம்பவ இடத்திற்குச் சென்று விரிவான விசாரணையை நடத்தினர்.
தொடர்ந்து இந்த விவகாரம் சென்னை நகர மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு 31 சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன. தீ எப்படி ஏற்பட்டது என்பதைத் தீர்மானிக்க தடயவியல், தீயணைப்புத் துறை, மின்வாரியத்தைச் சேர்ந்தவர்கள் கலந்தாலோசிக்கப்பட்டனர்.
நிபுணர்களின் அறிக்கைகள் தற்போது பெறப்பட்டிருக்கின்றன. தடயவியல் நிபுணர்களின் கருத்துப்படி, மின்சார வயர்களில் short circuit ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. பெட்ரோல், டீசல் போன்ற எந்த ஒரு எரியத் தக்க பொருளும் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை என்றும் தடயவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, ஏடிஜிபி கல்பனா நாயக்கின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் யாரும் வேண்டுமென்றே தீ வைக்கவில்லை எனத் தெரிகிறது” என இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் கூறியுள்ளது.
அரசியல் தலைவர்கள் விமர்சனம்
எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை முன்வைத்து அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளன.
எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி கே. பழனிச்சாமி, “ஒரு ஏடிஜிபி, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதாக சொல்வதும், காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதும்தான் (வேறொரு சம்பவத்தில்) சட்டம் – ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா?” என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையும் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
“காவல்துறை உயர் அதிகாரிகள் இதை மின்சாரப் பழுது காரணமாக ஏற்பட்ட தீ விபத்து என்று கூறி மறைக்க முயன்றாலும், தீ விபத்துக்கு முந்தைய நிகழ்வுகள், காவல்துறையின் இந்தக் கூற்றை நம்பமுடியாததாக ஆக்குகிறது. ஏனெனில், ஏடிஜிபி கல்பனா நாயக் , முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதோடு, துணை ஆய்வாளர்களின் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுவதற்கு முன்பு அவரது ஒப்புதலும் பெறப்படவில்லை” என்று கூறியிருக்கிறார்.
ஏடிஜிபி கல்பனா நாயக் தற்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக இருந்து வருகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.