இலங்கையின் சுதந்திர தினமான நாளைய தினத்தை கரிநாளாக அனுஸ்டிக்க வடகிழக்கு தமிழர் தாயகமெங்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மட்டக்களப்பில் சுதந்திர நிகழ்வுகளை பாதிக்கும் வகையில் எந்தவொரு ஆர்பாட்டங்களையும் மேற்கொள்வதற்கு எதிராக ஏழு நபர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தலைமை காவல்நிலைய பொறுப்பதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் பிரகாரம், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சுதந்திரதின நிகழ்வுகளை பாதிக்கும் வகையிலான எந்தவொரு ஆர்பாட்டத்தையோ சட்டவிரோத செயற்பாடுகளையோ மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நியாயாதிக எல்லைக்குட்பட்ட எந்தவொரு பகுதியிலும் மேற்கொள்ளக் கூடாதென உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தோடு, இலங்கை குடியரசின் தேசிய தினம் கொண்டாடப்படவேண்டியது என இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பின் 08 வது சரத்தில் கூறப்பட்டுள்ளமையும் தடையுத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தடை உத்தரவில் சபாரத்தினம் சிவயோகநாதன் அல்லது சீலன் (இணையம் அரச சார்பற்ற குழுவின் தலைவர்),ஞானமுத்து சிறிநேசன் (நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு),இராசமாணிக்கம் சாணக்கியன் (தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ),அமலன் அமலநாயகி (காணாமல் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி) ,இளையதம்பி சிறிநாத்,சகாயராசா சுகந்தினி மற்றும் இருதயம் செல்வக்குமார் அல்லது செல்வா ஆகிய நபர்களுடன் சேர்ந்து செயற்படும் வேறு எவரேனும் நபர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
நூளைய தினத்தை கரிநாளாக அனுஸ்டிக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது அமைப்பு மற்றும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரியக்கம் என்பவை அழைப்பு விடுத்துள்ளன.