5

by admin

கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள் தங்களது பாடசாலைக்கு முன்பாக 50 மீற்றர் தொலைவில் உள்ள மைதானத்திற்கு சுமார் ஒரு கிலோ மீற்றர் நடந்து சென்று வரும் அவலத்தை தீர்த்து தருமாறு பாடசாலை சமூகம் புதிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாணவர்கள் பாடசாலையின் நிகழ்வுகளுக்கு மைதானத்திற்கு செல்ல வேண்டுமாயின் பாடசாலையின் வீதிக்கு வருகை தந்து அங்கிருந்து ஏ9 பிரதான் வீதி வழியாக மத்திய விளையாட்டு மைதானத்தை ஊடறுத்து கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்திற்கு செல்ல வேண்டும். இதற்காக மாணவர்கள் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டும். இது மாணவர்களுக்கு ஆபத்தான பயணம் என்பதோடு, அதிக நேரத்தையும் செலவிட வேண்டும்.

தினமும்  தற்போது பாடசாலைகளில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டிகள் இடம்பெறுவதனால் தினமும் மாணவர்கள் அதிக  நேரத்தை செலவு செய்து மைதானத்திற்கு சென்று வரவேண்டும். இதன் காரணமாக மைதானத்திற்கு சென்று வருவதிலேயே மாணவர்கள் களைத்துவிடுகின்றார்கள் எனத் தெரிவிக்கும் பாடசாலை சமூகம் பாடசாலைக்கு முன்பாக உள்ள மைதானத்திற்கு செல்லும் பாதையினை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளமையால் மாணவர்களுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பாதை விடுவிக்கப்படும் இடத்து பாடசாலைக்கும் மைதானத்திற்கும்  இடையில் சுமார் 50 மீற்றர் தூரமே  மாணவர்கள் பயணிக்க வேண்டும்.  நீண்ட காலமாக பல்வேறு தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்தபோதும்  இதுவரை குறித்த பாதையினை இராணுவம் விடுவிக்கவில்லை.

எனவே புதிய அரசு இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து 2000க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் இப் பாடசாலையின் நன்மை கருதி குறித்த பாதையினை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முக்கியமாக இந்த அரசின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி அவர்கள் இப் பாடசாலையின் பழைய மாணவன்  என்ற வகையில் இந்த விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தி தன்னுடைய பாடசாலை மாணவர்களின் அவலத்தை  தீர்க்க உதவ வேண்டும் எனவும் பாடசாலை சமூகம் கோரியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்