உலகின் பல்வேறு நாடுகளால் இணக்கப்பாடு எட்டப்பட்ட நாணய நிதி ஒப்பந்தங்களை ஆராயும் போது, கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தங்களில் 59 சதவீதம் மீண்டுமொரு கடன் மறுசீரமைக்கு இட்டுச் சென்றுள்ளன.
இந்த உண்மைகள் மக்களிடமிருந்து மறைக்கின்றனர். மற்றொரு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு செல்வது என்பது மக்களை மேலும் சிக்கலில் தள்ளும் விடயமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குருநாகல், இப்பாகமுவ பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (03) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய அவர்,
சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை மூலம் பொருளாதார நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்தோடு புதியதொரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம் என்று ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போது கூறியது.
இப்போது முந்தைய அரசாங்கம் இணக்கப்பாடு கண்ட அதே ஒப்பந்தத்தை அதே வழியில் முன்னெடுத்து வருகின்றது. இவற்றுக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதா என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகிறேன். மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
நாணய நிதியம் வழங்கியுள்ள பல முக்கிய இலக்குகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதே யதார்த்தமாகும். அவற்றில் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் உயர் அரசாங்க வருவாயைப் பேணுதல் முக்கியமானதாகும். தவறும் பட்சத்தில், இன்னும் 2-3 வருடங்களில் மற்றொரு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு செல்ல வேண்டி ஏற்படும்.
நான் இந்த விடயத்தை உறுதியாகக் கூறுகின்றேன். கடந்த காலங்களிலும் இதுபோன்ற எதிர்வுகூறல்களை வெளிப்படுத்திய போது என் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் பின்னர் அவை அனைத்தும் நிஜத்தில் நிகழ்ந்தன. உலகின் பல்வேறு நாடுகளால் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்ட நாணய நிதி ஒப்பந்தங்களை ஆராயும் போது, கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தங்களில் 59 சதவீதம் மீண்டுமொரு கடன் மறுசீரமைக்கு இட்டுச் சென்றுள்ளன. இந்த உண்மைகள் மக்களிடமிருந்து மறைக்கின்றனர்.
இவற்றை யாரும் மக்களுக்கு கூறுவதில்லை. மற்றொரு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு செல்வது என்பது மக்களை மேலும் சிக்கலில் தள்ளும் விடயமாகும். இது சவாலானது.
முன்னோக்கிய பயணம் பல பிரச்சனைகளை கடந்து செல்ல உள்ளது. எனவே ஒரு நாடாக நாம் அந்த சவால்களை எதிர்கொண்டு நாட்டை பாதுகாக்க வேண்டும்.
எனவே எமது நாடு குறித்த விடயங்களில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த அஞ்ச வேண்டாம் என்றார்.