by wamdiness

பிரச்சினைகளுக்கான பொறுப்பு கூறலைத் தவிர்க்கும் அரசாங்கம் எதற்கு? நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் நாம் என்ன செய்வது என்று அமைச்சர்கள் கேட்பார்களாயின், அவ்வாறான அமைச்சர்களைக் கொண்ட அரசாங்கம் எதற்கு? போராட்டத்தில் ஈடுபடும் போது அவர்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.

கடந்த அரசாங்கங்களுக்கு எதிராக சகல தொழிற்சங்கங்களையும் வீதிக்கிறக்கி போராடிய இந்த அரசாங்கம் தற்போது போராட்டங்களை முடக்க முற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று  திங்கட்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இதற்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் ஓரளவேனும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளன. ஆனால் இந்த அரசாங்கம் எந்தவொரு வாக்குறுதியையும் வழங்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

செல்லப்பிராணிகளுக்கு அதிக உணவு வழங்கப்பட்டால், மக்கள் அதிகளவில் தேங்காய்களை உபயோகித்தால், துறைமுகங்களில் கொள்கலன்கள் தேங்கினால் நாம் என்ன செய்வது என்று அரசாங்கம் கேள்வியெழுப்புகிறது.

அவ்வாறெனில் இந்த நாட்டுக்கு அரசாங்கம் என்ற ஒன்று எதற்கு? அரசாங்கம் பொறுப்பேற்று 4 மாதங்கள் நிறைவடைவதற்குள் 6 அரச நிறுவனத்தலைவர்கள் பதவி விலகிவிட்டனர்.

மறுபுறம் கூட்டுறவு சங்க தேர்தல்களில் அரசாங்கம் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்நிலையில் விரைவில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலும் இடம்பெறவுள்ளது.

அதனை மையமாகக் கொண்டு அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் கோபத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

ஆனால் எவ்வித பரிசோதனைகளும் இன்றி விடுவிக்கப்பட்ட அதிக அபாயம் மிக்க கொள்கலன்கள் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லை.

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும் போது அவர்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. கடந்த அரசாங்கங்களுக்கு எதிராக சகல தொழிற்சங்கங்களையும் வீதிக்கிறக்கி போராடிய இந்த அரசாங்கம் தற்போது போராட்டங்களை முடக்க முற்படுகின்றது என்றார்.

தொடர்புடைய செய்திகள்