இலங்கையில் அவுஸ்திரேலிய முதலீடுகள், கூட்டு கல்வி முயற்சி வாய்ப்புக்களை அதிகரிக்க அழைப்பு இலங்கையில் அவுஸ்திரேலிய முதலீடுகள் மற்றும் கூட்டு கல்வி முயற்சிகளை அதிகரிக்க அழைப்பு விடுத்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் மூலோபாய கூட்டாண்மைகளின் முக்கியத்துவத்தையும் எதிரவலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற இலங்கை – அவுஸ்திரேலியா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் மறுமலர்ச்சிக் கூட்டத்தின் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது சுனாமி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் சமீபத்திய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட முக்கிய தருணங்களில் அவுஸ்திரேலியா வழங்கிய உதவிகளுக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.
இலங்கையின் வளர்ச்சியில் அவுஸ்திரேலியாவின் பங்களிப்பு மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்த எதிர்க்கட்சி தலைவர், கல்வி, வர்த்தகம், இடம்பெயர்வு மற்றும் சுற்றுலா போன்ற முக்கிய துறைகள் தொடர்பிலும் இதன் போது சுட்டிக்காட்டினார். அவுஸ்திரேலிய முதலீடுகள் மற்றும் கூட்டு கல்வி முயற்சிகளை அதிகரிக்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.
அவுஸ்திரேலியாவில் 145,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வசிக்கின்றனர். இலங்கை மாணவர்கள் அவுஸ்திரேலிய கல்வி முறையில் நுழைவதற்கான வாய்ப்பை நாம் ஆர்வத்துடன் எதிர்நோக்குகின்றோம்.
அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இலங்கையில் அதன் வளாகங்களை நிறுவ அனுமதிக்கும் கூட்டு முயற்சிகள் மற்றும் கூட்டுறவு கல்வி முயற்சிகளையும் நாம் ஊக்குவிக்கிறோம்.
மேலும் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் மூலோபாய கூட்டாண்மைகளின் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தினார்.
அவுஸ்திரேலியாவின் சட்டமன்ற நடைமுறைகள், அதன் பாராளுமன்ற பட்ஜெட் அலுவலகம் உட்பட பல விடயங்கள் இலங்கைக்கு சிறந்த முன்மாதிரியாகும் என்றார்.