வியட்நாமில் பிறந்து திகார் சிறையில் ‘தனி ராஜ்ஜியம்’ நடத்திய சார்லஸ் ஷோப்ராஜ் யார்? தப்பித்தது எப்படி?

 சார்லஸ்  ஷோப்ராஜ் திகார் சிறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சார்லஸ் ஷோப்ராஜ்
  • எழுதியவர், ரெஹான் ஃபசல்
  • பதவி, பிபிசி ஹிந்தி

கடந்த 1981 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி அன்று, திகார் சிறையின் செய்தித் தொடர்பாளரும் சட்ட ஆலோசகருமான சுனில் குமார் குப்தா, தனக்கு கிடைத்த ஏஎஸ்பி பதவி நியமனக் கடிதத்துடன் சிறைக் கண்காணிப்பாளர் பி.எல்.விஜ் என்பவரின் அலுவலகத்தை அடைந்தார்.

திகார் சிறையில் வேலை கிடைத்தவுடனேயே, அவர் வடக்கு ரயில்வேயில் தனது வேலையை ராஜினாமா செய்தார். அப்போது அவருக்கு 24 வயது மட்டுமே ஆகியிருந்தது.

மே மாதம் 7 ஆம் தேதி அன்று அவர் ரயில்வே வேலையில் இருந்து விலகினார். அடுத்த நாளே புதிய வேலையில் சேர திகார் சிறைக்கு அவர் சென்றார்.

“சிறை கண்காணிப்பாளர் பி.எல்.விஜ் என்னைப் பார்த்து ‘இங்கு ஏஎஸ்பி என்ற பதவியே இல்லை’ என்று கூறினார். இதைக்கேட்டு நான் திகைத்துப் போனேன். ரயில்வே வேலையை விட்டுவிடுவதற்கு முன் என்னிடம் கேட்டிருக்க வேண்டும் என்றும் கூறினார். என்ன செய்வது என்று அறியாமல் அங்கிருந்து வெளியில் வந்து யோசித்துக்கொண்டிருந்தேன்”, என்று சுனில் குப்தா நினைவு கூர்ந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அப்போது அங்கு கோட் மற்றும் டை அணிந்திருந்த ஒருவர் மீது அவரது கவனம் சென்றதாக சுனில் குப்தா கூறினார். சுனில் குப்தாவுக்கு அவர் யார், அவரது பெயர் என்ன என்பது தெரியவில்லை, ஆனால் அவரது ஆளுமை மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது என்றும் அவரை பார்த்தவுடன் தான் எழுந்து நின்றதாகவும் அவர் தெரிவித்தார்.

“நான் அங்கு வந்ததன் நோக்கம் என்ன என்று அவர் ஆங்கிலத்தில் என்னிடம் கேட்டார். நான் அவரிடம் எல்லாவற்றையும் சொன்னேன். அவர், ‘கவலைப்பட வேண்டாம். நான் உங்களுக்கு உதவுகிறேன்’, என்று சொல்லிவிட்டு விஜின் அலுவலகத்திற்குள் சென்றார்” என்று சுனில் குப்தா இந்த நிகழ்வு குறித்து விவரித்தார்.

“ஒரு மணிநேரம் கழித்து அவர் ஒரு கடிதத்துடன் வெளியே வந்தார், அதில், நான் திகார் சிறையின் ஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதை என்னிடம் கொடுத்துவிட்டு அவர் சென்றார். இவ்வளவு செல்வாக்கு மிக்க நபர் யார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டிய ஆர்வம் எனக்கு இருந்தது. அதனால் அங்கிருந்த ஒரு நபரிடம் கேட்டேன். அவர் அதற்கு ‘அவர் சிறையின் சூப்பர் ஐ.ஜி’ என்று கூறினார்”, என்றார் சுனில் குப்தா.

சார்லஸ் ஷோப்ராஜ்

படக்குறிப்பு, சுனில் குமார் குப்தா

அசோகா ஹோட்டலில் இருந்த நகைக்கடையில் திருட்டு

கடந்த 1944 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று குர்முக் சார்லஸ் ஷோப்ராஜ் வியட்நாமின் சைகோன் நகரில் பிறந்தார். அவரது தாய் வியட்நாமை பூர்வீகமாக கொண்டவர். அவரது தந்தை ஒரு இந்திய சிந்தி ஆவார். சார்லஸையும் அவரது தாயையும் விட்டு அவரது தந்தை சென்றுவிட்டார்.

டேவிட் மோரிஸ்ஸி என்பவர் சார்லஸ் ஷோப்ராஜின் வாழ்க்கை வரலாற்றான ‘தி பிகினி கில்லர்’ என்ற புத்தகத்தில், “அருமையான ஒரு குழந்தைப் பருவத்தை கழித்த பிறகு, பாரிஸை சேர்ந்த பெண்ணான சாண்டல் காம்பாக்னனை சார்லஸ் சந்தித்தார். அவர் சாண்டலை திருமணம் செய்யவிருந்த நாளில், அவர் மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டது. திருடப்பட்ட ஒரு வாகனத்தை ஓட்டியதற்காக அவரை காவல்துறை கைது செய்தது”, என்று எழுதியுள்ளார்.

1971-ம் ஆண்டு, இந்தியாவில் முதன்முறையாக மும்பையில் சார்லஸ் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் இருந்த நகைக்கடையில் விலைமதிப்பற்ற ரத்தினங்களையும் அவர் திருடியுள்ளார்.

அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் இந்தியா வந்திருந்தபோது அசோகா ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது, அசோகா ஹோட்டலில் சார்லஸ் இந்தச் சம்பவத்தைச் செய்தார்.

“சார்லஸ் அங்குள்ள காபரே நடனக் கலைஞருடன் நட்பு கொண்டு, அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். நகைக் கடையின் உரிமையாளரிடம் அவர் நேபாள இளவரசர் என்று கூறினார். இதனால் தனது அறைக்கு வந்து ரத்தினங்களைக் காட்டும்படி உரிமையாளரிடம் சார்லஸ் கூறினார். இந்த ரத்தினங்களுடன் அங்கு வந்திருந்த நபருக்கு காபியில் போதைப்பொருள் கலந்துகொடுத்து அவரை மயக்கமடைய செய்துள்ளார்,” என்று சார்லஸை கைது செய்த மதுகர் ஜெண்டே கூறுகிறார்.

“அதன் பிறகு அந்த ரத்தினங்களை எல்லாம் அவர் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். வெகு நேரமாகியும் ஆள் திரும்பாததைக் கண்ட நகைக்கடை உரிமையாளர் மாடிக்கு வந்து பார்த்தார். அங்கு அறையின் கதவு பூட்டியிருப்பதை அவர் கண்டார். டூப்ளிகேட் சாவி கொண்டு அந்த அறைக்குள் அவர் நுழைந்தபோது, அங்கு ஒருவர் மயக்க நிலையில் இருப்பதை அவர் கண்டார். அங்கு சார்லஸ் தற்செயலாக தனது பாஸ்போர்ட்டை மறந்துவிட்டார், அதில் சார்லஸ் ஷோப்ராஜ் என்று எழுதப்பட்டிருந்தது”.

சார்லஸ் ஷோப்ராஜ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர்

திகார் சிறையில் ஷோப்ராஜின் செல்வாக்கு

சார்லஸ் விரைவில் கைது செய்யப்பட்டார். ஆனால், டெல்லி காவல்துறையால் சார்லஸை நீண்ட நாள் காவலில் வைக்க முடியவில்லை.

வயிற்று வலியை காரணம் காட்டி அப்போது டெல்லியில் உள்ள வெலிங்டன் மருத்துவமனையில் இருந்து காவல்துறையினரை ஏமாற்றி சார்லஸ் தப்பினார்.

1976 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள விக்ரம் ஹோட்டலில் பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகளின் பாஸ்போர்ட்டைப் பறிக்கும் நோக்கில் அவர்களுக்கு போதைப்பொருள் கலந்துகொடுத்த விவகாரத்தில் சார்லஸ் கைது செய்யப்பட்டார்.

ஆனால் அவரது இந்த திட்டம் பலனளிக்கவில்லை, பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் சரியான நேரத்தில் தங்கள் நினைவுக்கு வந்தனர். இதன் பிறகு, சார்லஸ் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தியாவின் மிகவும் பிரபலமான சிறைகளில் திகார் சிறை ஒன்றாகும். வெகு விரைவாக சார்லஸ் ஷோப்ராஜ் இந்த சிறையில் தனக்கென ஒரு பெரிய கட்டமைப்பை உருவாக்கினார்.

“சார்லஸ் ஒருபோதும் சிறையின் அறையில் வைக்கப்படவில்லை. அவர் அடிக்கடி நிர்வாக அலுவலகத்திலேயே அமர்ந்திருப்பார். அவரது செயல்பாடுகள் பற்றி எனது நண்பர்கள் அடிக்கடி என்னிடம் கூறுவார்கள். நானும் அவரது விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது”, என்று சுனில் குப்தா நினைவு கூர்ந்தார்.

“அவர் சிறையில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். சிறை கண்காணிப்பாளர் மற்றும் அவருக்குக் கீழ் பணிபுரியும் அதிகாரிகளை அவர் தனக்கு இணையாகக் கருதினார். அவரிடம் ஒரு டேப் ரெக்கார்டர் இருந்தது, அதில் அவர் சிறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டதை பதிவு செய்து வைத்திருந்தார்”. என்றும் அவர் தெரிவித்தார்.

‘சார்லஸ் சாஹேப்’ என்று அழைக்கப்பட்டவர்

“சார்லஸ் சிறையில் 10க்கு 12 அடி அளவிலான ஒரு அறையில் தனியாக வசித்து வந்தார். சிறையில் சி கிளாஸ் கைதிகளை அவர் வேலையாட்களாக வைத்திருந்தார், அவர்கள் அவருக்கு மசாஜ் செய்வார்கள், துணிகளை துவைப்பார்கள் மற்றும் அவருக்கு உணவு கூட சமைத்துக்கொடுப்பார்கள்”, என்று சுனில் குப்தா கூறுகிறார்.

“அவரது அறையில் புத்தகங்கள் நிறைந்த அலமாரி இருந்தது. அவருக்கு படுக்கை, மேஜை மற்றும் நாற்காலியும் வழங்கப்பட்டது. அவரது அறை ஒரு சிறிய வீடு போலவே இருந்தது. அவர் கைதிகள் மற்றும் சிறை ஊழியர்கள் சார்பாக மனுக்களை எழுதுவார். “

“உண்மையான வழக்கறிஞர்கள் எழுதிய மனுக்களை விட, அவர் எழுதிய மனுக்களின் தாக்கம் அதிகமாக இருந்தது. கைதிகளுக்கு பணம் தேவைப்பட்டால், சார்லஸ் ஷோப்ராஜ் அவர்களுக்கு பணம் வழங்குவார். அதனால்தான், கைதிகள் மற்றும் சிறை ஊழியர்களுக்கு அவர் தன்னை தலைவராகக் கருதிக்கொண்டார்”.

திகார் சிறையில் சார்லஸுக்கு பெரும் செல்வாக்கு இருந்தது, அங்குள்ளவர்கள் அவரை ‘சார்லஸ் சாஹேப்’ என்று அழைத்தனர்.

சார்லஸ் ஷோப்ராஜ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகேஷ் கௌஸிக் வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம், சார்லஸ் ஷோப்ராஜ் பெயரை குறிப்பிடாமல், இன்டர்போல் தேடும் வெளிநாட்டு கைதி என்று மட்டும் குறிப்பிட்டிருந்தது

சிறைக் கண்காணிப்பாளரின் தூண்டுதல்

திகார் சிறையில் சார்லஸ் ஷோப்ராஜின் ஆதிக்கம் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் 1981 செப்டம்பரில் செய்தி வெளியிட்டது.

அதே ஆண்டில், சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் (PUCL) அறிக்கையில், ஷோப்ராஜும் அவரது நண்பர்களும் சிறைக்குள் தங்களுக்கென ஒரு செல்வாக்கை உருவாக்கி, அங்கிருந்து தங்கள் தொழிலை நடத்துகிறார்கள் என்று கூறப்பட்டது.

“யாராவது எதிர்த்தால், ஷோப்ராஜும் அவருடைய நண்பர்களும் அவர்களை அடிக்கக்கூட யோசிக்க மாட்டார்கள். ஷோப்ராஜின் நண்பர்களில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட சுனில் பத்ரா, விபின் ஜக்கி மற்றும் ரவி கபூர் ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவரும் சிறப்பான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள், படித்தவர்கள்.”

ராகேஷ் கௌசிக் வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம், சார்லஸ் ஷோப்ராஜ் பெயரை குறிப்பிடாமல், இன்டர்போல் தேடும் வெளிநாட்டு கைதி ஒருவர் என்று மட்டும் குறிப்பிடடிருந்தது.

“இந்த வெளிநாட்டவருக்கு சிறை கண்காணிப்பாளர் மற்றும் துணை சிறை கண்காணிப்பாளரின் ஆதரவு உள்ளது. அவர் ஒவ்வொரு நாளும் வெளியாட்களை அவர்களின் அலுவலகத்துக்கு அருகிலுள்ள அறைகளில் சந்திப்பதைக் காணலாம். மேலும், துணை கண்காணிப்பாளர் இந்த கைதி சிறையில் தனது அறையில் பாலியல் உறவு கொள்ள அனுமதிக்கிறார்” என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.

“வெளிப்படையாக, சிறைக் கண்காணிப்பாளரும் அவருக்குக் கீழ் உள்ளவர்களும் இத்தகைய வசதிகளை வழங்குவதற்காக இந்தக் கைதியிடம் இருந்து பெரும் கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்த வெளிநாட்டுக் கைதி தனது இரண்டு புத்தகங்களை வெளியிட்ட பிறகு பெரும் பணக்காரர் ஆகிவிட்டார்.”

சார்லஸ் ஷோப்ராஜ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தனது மகள் முரியல் அனுக் உடன் சார்லஸ் ஷோப்ராஜ்

சிறையில் ஷோப்ராஜை சந்தித்த அமைச்சர்

அப்போது சார்லஸ் ஷோப்ராஜின் காதலியாக ஷிரின் வாக்கர் இருந்தார். அவரை சார்லஸ் இந்தியாவுக்கு அழைத்திருந்தார். அவர் டெல்லியில் இருந்தபோது, அங்கு ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார்.

‘தொடர்ச்சியாக ஆறு நாட்கள் காவல் கண்காணிப்பாளர் அறையில் சார்லஸ் ஷோப்ராஜை மணிக்கணக்கில் ஷிரின் வாக்கர் சந்தித்தார்’ என்று PUCL அறிக்கை குறிப்பிடுகிறது.

ஷோப்ராஜ் பற்றிய செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியானதும், அப்போதைய உள்துறை அமைச்சர் கியானி ஜைல் சிங், திடீரென இரவு திகார் சிறைக்குச் செல்ல முடிவு செய்தார்.

“செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று மாலை 7:30 மணியளவில், ஒரு காவலர் என்னிடம் ஓடி வந்து, ‘உள்துறை அமைச்சர் வந்திருக்கிறார். அவரை உள்ளே அனுமதிக்க வேண்டுமா?’ என்று கேட்டார் “, என சுனில் குப்தா நினைவு கூர்ந்தார்.

“இன்று இது கேலிக்குரியதாகத் தோன்றலாம் ஆனால், சிறை நிர்வாகத்தின் அனுமதியின்றி யாரையும் சிறைக்குள் செல்ல அனுமதி இல்லை என்பது திகார் சிறையின் ஒவ்வொரு காவலரிடமும் வேரூன்றியிருப்பதைக் காட்டுகிறது. அவர் இந்திய உள்துறை அமைச்சரை வெளியே காத்திருக்கச் சொன்னதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டேன்” என்று அவர் மேலும் கூறுகிறார்.

“நான் வாயிலுக்கு ஓடினேன். உள்துறை அமைச்சர் சார்லஸ் ஷோப்ராஜின் அறைக்கு அழைத்துச் செல்லும்படி என்னிடம் கேட்டார். சோப்ராஜை சந்தித்தவுடன், அவர் இந்தியில், ‘நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்கு இங்கே ஏதாவது பிரச்னையா?’ என்று கேட்டார். நான் அதை மொழிபெயர்த்து ஷோப்ராஜிடம் சொன்னேன். தான் முற்றிலும் நலமாக இருப்பதாகவும், அவருக்கு எந்த புகாரும் இல்லை என்றும் சார்லஸ் ஷோப்ராஜ் ஆங்கிலத்தில் பதிலளித்தார்.”

சார்லஸ் ஷோப்ராஜ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய முன்னாள் உள்துறை அமைச்சர் கியானி ஜைல் சிங்

சுனில் குப்தாவின் இடைநீக்கம்

கியானிஜியை சிறையில் அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றபோது, கைதிகளான பாஜ்ஜி மற்றும் தினா இருவரும் திடீரென ‘சாச்சா நேரு ஜிந்தாபாத்’ என்று கோஷமிட ஆரம்பித்தனர்” என்கிறார் சுனில் குப்தா.

“கியானிஜியின் செயலர் அவரைத் தனியாக அழைத்துச் சென்றபோது, ‘இங்கே போதைப்பொருள், சாராயம் மற்றும் அவர்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்கும்’ என்று சொன்னார். மறுநாள் செய்தித்தாளில், கைதிகள் ஒரு காலி மதுபான பாட்டிலை அமைச்சரின் செயலாளரிடம் காண்பித்தால், அதை இங்கு கொண்டு வருவது எவ்வளவு எளிது என்பதைக் காட்டுவதாக செய்தி வெளியானது”.

“இந்தச் சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு உள்துறை அமைச்சகம் திகார் சிறையின் ஆறு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தது. அவர்களில் நானும் ஒருவர். அமைச்சர் முன் ஆஜரான கைதிகளுக்கு நான் பொறுப்பல்ல என்று நான் எதிர்ப்பு தெரிவித்தபோது, ​​ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு நான் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டேன்.”

சுனில் குப்தாவின் இடைநீக்கத்தின்போது, ​​சார்லஸ் ஷோப்ராஜ் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். அவர் அவருக்கு நிதி உதவியும் வழங்கினார், ஆனால் குப்தா அதை ஏற்கவில்லை.

சார்லஸ் ஷோப்ராஜ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திகார் சிறையில் இருந்து சார்லஸ் ஷோப்ராஜ் தப்பிய நாளில், 900 கைதிகளில் 12 பேரும் தப்பினர்

திகார் சிறையில் இருந்து தப்பினார்

1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் தேதி, ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று எல்லா பாதுகாப்புப் பணியாளர்களின் கண்களிலும் மண்ணைத்தூவி சார்லஸ் ஷோப்ராஜ் திகார் சிறையிலிருந்து தப்பினார்.

இதுகுறித்து முதலில் குரல் கொடுத்தவர் காவலர் ஆனந்த் பிரகாஷ் ஆவார். றைச்சாலைக்கு அருகிலுள்ள குடியிருப்புகளை அடைந்தபோது, ​​அவர் முகத்தை ஒரு தடிமனான துணியால் மூடியிருந்தார். துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் மணியை அடித்தபோது, ​​அவரது வாயிலிருந்து எந்த வார்த்தைகளும் வெளிவரவில்லை.

இந்த வார்த்தைகள் மட்டுமே அவர் வாயிலிருந்து வந்தன – ‘உடனே ஓடிவிடுங்கள்’.

“சிறையின் எல்லா வாயில்களும் திறந்திருந்தன. கேட் கீப்பர், பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் அப்போது பணியில் இருந்த அதிகாரி சிவராஜ் யாதவ் உட்பட ஒட்டுமொத்த சிறை அதிகாரிகளும் தூங்கிக்கொண்டிருந்தனர் அல்லது திகைத்துப்போய் நின்று கொண்டிருந்தனர். சிறை வாயிலின் சாவிகள் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கவில்லை,” என்று சிறை எண் 3 இன் உதவி துணை ஆய்வாளர்வி.டி.புஷ்கர்ணா பின்னர் குறிப்பிட்டார்.

வடமாநில குற்றவாளிகளுடன் அதிகம் பழகக்கூடாது என்பதற்காக திகார் சிறையில் தமிழ்நாடு காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களும் மயக்க நிலையில் கிடந்தனர்.

திகார் சிறையில் இருந்த 900 கைதிகளில் 12 கைதிகள் அன்று சிறையிலிருந்து தப்பி ஓடினர்.

சார்லஸ் ஷோப்ராஜ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திகார் சிறை காவலர் கடத்தப்பட்டு தலைமறைவானார்

இனிப்புகளில் மயக்க மருந்து

“அன்றைய தினம் நான் வீட்டில் தூர்தர்ஷனில் படம் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது தூர்தர்ஷன் படத்தை நிறுத்திவிட்டு சார்லஸ் ஷோப்ராஜ் திகார் சிறையில் இருந்து தப்பித்துவிட்டார் என்ற அறிவிப்பு வந்தது. நான் உடனடியாக சிறைக்கு வந்தேன். மயக்க நிலையில் இருந்த ஒவ்வொரு காவலர்களின் கையிலும் 50 ரூபாய் நோட்டு இருந்தது”, என்று சுனில் குப்தா நினைவு கூர்ந்தார்.

“ஷோப்ராஜ் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதாகக்கூறி முதலில் கான்ஸ்டபிள்களிடம் 50 ரூபாய் பணம் கொடுத்து பின்னர் மயக்கமருந்து கலந்த இனிப்புகளை அவர்களுக்கு கொடுத்தார் என்று இதிலிருந்து ஊகிக்கப்பட்டது.”

“இரண்டு பேர் திகார் சிறைக்கு வந்து ஒரு கைதியின் பிறந்த நாளை முன்னிட்டு கைதிகளுக்கு பழங்கள் மற்றும் இனிப்புகளை விநியோகிக்க கோரிக்கை விடுத்தனர். இந்த அனுமதியை வார்டன் சிவராஜ் யாதவ் வழங்கியதும் அவர்கள் யாதவ் மற்றும் 5 காவலர்களுக்கு மருந்து கலந்த இனிப்புகளை அளித்தனர். அவர்கள் அனைவரும் இனிப்பு சாப்பிட்ட உடன் மயக்கமடைந்தனர். சில மணி நேரங்களுக்குப் பிறகுதான் அவர்களுக்கு சுயநினைவு திரும்பியது என்று டெல்லி துணை காவல்துறை ஆணையர் அஜய் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறினார்,” என்று சுனில் குப்தா குறிப்பிட்டார்.

“பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் ஹால், திகாரில் இருந்து சில நாட்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு ஷோப்ராஜுடன் நட்பு ஏற்பட்டது. ஏனெனில், அவரது ஜாமீன் மனுவை எழுத ஷோப்ராஜ் அவருக்கு உதவியிருந்தார்,” என்று அவர் மேலும் கூறினார்.

“பதிவுகளை சரிபார்த்தபோது, ​​ஹால் ஷோப்ராஜை தப்பிச் செல்வதற்கு முன்பு சந்தித்து ஒரு பாக்கெட்டை கொடுத்தது தெரியவந்தது. ஹால் வெறும் ரூ.12,000-க்கு ஜாமீன் பெற்றார். சாதாரண குற்றவாளிகள் ஜாமீன் பெற்ற பிறகு வீடு திரும்புகிறார்கள், ஆனால் ஹால் திகாருக்கு திரும்பி ஷோப்ராஜ் தப்பிக்க உதவினார்,” என்று சுனில் குப்தா தெரிவித்தார்.

“திகார் சிறைக்கு வெளியே ஷோப்ராஜுக்காக ஒரு கார் காத்திருந்தது. அவர் தன்னுடன் திகார் சிறைக் காவலரையும் கடத்திச் சென்றார். காவல்துறையின் சம்மதத்துடன் அவர் சிறையிலிருந்து வெளியே செல்கிறார் என்று அங்கு பணியில் இருந்த தமிழ்நாடு காவல்துறையினர் கருதவேண்டும் என்பதற்காக ஷோப்ராஜ் இவ்வாறு செய்தார்.”

ஷோப்ராஜ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷோப்ராஜ் 23 நாட்கள் மட்டுமே திகார் சிறைக்கு வெளியே இருக்க முடியும்

கோவாவில் கைது

ஷோப்ராஜ் இனிப்புகளில் கலக்க 820 ‘லார்போஸ்’ (தூக்க மருந்து) மாத்திரைகளை பயன்படுத்தினார் என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு டெல்லி துணைநிலை ஆளுனர் எச்.கே.எல்.கபூர் மற்றும் காவல்துறை ஆணையர் வேத் மார்வாவும் திகார் சிறைக்குச் சென்று வி.டி.புஷ்கர்ணா மற்றும் 5 அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிட்டனர்.

ஆனால், ஷோப்ராஜ் 23 நாட்கள் மட்டுமே திகார் சிறைக்கு வெளியே இருக்க முடிந்தது. கோவாவில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து பம்பாய் காவல் ஆய்வாளர் மதுகர் ஜெண்டே அவரை கைது செய்தார்.

அங்குள்ள ஒகோகேரா உணவகத்துக்கு ஷோப்ராஜ் வரக்கூடும் என்று டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் இருந்து துப்பு கிடைத்தது.

“ஏப்ரல் 6, இரவு 10.30 மணிக்கு, டி.வி.யில் இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி போட்டி நடந்து கொண்டிருந்தது. ஹோட்டலில் பெரிய முற்றம் இருந்தது. உள்ளே ஒரு உள் அறை இருந்தது. நாங்கள் உள் அறையில் அமர்ந்திருந்தோம்” என்று ஜெண்டே நினைவு கூர்ந்தார்.

“வாயிலுக்கு வெளியே இரண்டு பேர் டாக்ஸியிலிருந்து இறங்குவதை நான் பார்த்தேன், அவர்கள் தொப்பி அணிந்திருந்தார்கள். ஏன் இந்த இரவு நேரத்தில் அவர்கள் தொப்பி அணிந்திருக்கிறார்கள் என்று நான் நினைத்தேன். முன்னால் வந்தபோது அவர் சார்லஸ் ஷோப்ராஜ் போல இருப்பதைக் கண்டேன். அவரது நண்பர். டேவிட் ஹாலும் அவருடன் இருந்தார். சார்ல்ஸை பார்த்ததும் என் நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது,” என்று அவர் மேலும் கூறினார்.

“நான் உடனே என் இடத்தில் இருந்து எழுந்து பின்னால் இருந்து அவரை கட்டிப் பிடித்து, ‘சார்லஸ்’ என்று கத்தினேன். ஆமாம் சார்ல்ஸ் என்று அவர் பதில் சொன்னார். ‘யூ ஆர் ப்ளடி சார்லஸ் ஷோப்ராஜ்’ என்றேன் நான். அவர் ‘உங்களுக்கு பைத்தியமா?’ என்றார். ’71 இல் உங்களைப்பிடித்த அதே ஜெண்டே நான்’ என்றேன் நான். இதைச் சொன்னவுடன் அவர் பயந்துபோனார்,” என்று ஜெண்டே மேலும் தெரிவித்தார்.

“நாங்கள் கைவிலங்கை எடுத்துச் சென்றிருக்கவில்லை. எவ்வளவு கயிறு இருக்கிறதோ அவ்வளவையும் தரும்படி ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்டோம். அவரை கயிற்றால் கட்டிவிட்டு, சார்லஸைப் பிடித்துவிட்டோம் என்று கமிஷனரைக் அழைத்துச் சொன்னோம்.”

ஷோப்ராஜ்

பட மூலாதாரம், facebook

படக்குறிப்பு, கோவாவில் சார்லஸ் ஷோப்ராஜை மதுகர் ஜெண்டே கைது செய்தார்

சங்கிலி, கைவிலங்கால் பூட்டப்பட்ட ஷோப்ராஜ்

டெல்லி காவல் துறை துணை ஆணையர் அமோத் காந்த், ஷோப்ராஜை ஜெண்டேவிடமிருந்து காவலில் எடுத்து சிறப்பு விமானத்தில் டெல்லிக்கு அழைத்து வந்தார்.

ஷோப்ராஜ் சிறையில் இருந்து தப்பியதால் அவரது சிறை தண்டனை அதிகரிக்கப்பட்டது. தாய்லாந்துக்கு அவரை நாடு கடத்துவது தடுக்கப்பட்டது. அங்கு அவர் கொலை குற்றங்களுக்காக மரண தண்டனையை ஏறக்குறைய கட்டாயமாக பெற்றிருப்பார்.

மீண்டும் திகார் சிறைக்கு வந்த பிறகு அவரது சுதந்திரம் அனைத்தும் முடிவுக்கு வந்தது.

அவர் மற்ற கைதிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, கைவிலங்கு மற்றும் கால் சங்கிலியுடன் வைக்கப்பட்டார். மேலும் பாதுகாப்பு பணியாளர்கள் உடன் இல்லாமல் அவர் எங்கும் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால், அவர் நீதிமன்றத்துக்கு செல்லும்போது வெளியாட்களை சந்தித்து வந்தார்.

“சார்லஸ் முடிந்தவரை நீதிமன்றத்தில் நேரத்தை செலவிட விரும்பினார். ஏனென்றால் தளைகள் அணிவதிலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்கும். நீதிமன்ற காவலில் இருக்கும்போது தனக்கு பிடித்த உணவை சாப்பிடுவதற்கும் தனது வழக்கறிஞர் சினே செங்கரை சந்திக்கவும், வழக்கு தொடர்பான கோப்புகளை பார்ப்பதற்கும் அனுமதி கோருவார். அந்த அனுமதி அவருக்கு கிடைத்து வந்தது,” என்று இந்தியா டுடே தனது 1986 செப்டம்பர் இதழில் எழுதியது.

“பின்னர் அவருடைய கவனம் பாலிதீன் கவரில் கொண்டு வரப்பட்ட சிக்கன் பிரியாணி மீது திரும்பியது. பிறகு ஒரு நபரிடம் தனக்கு லிம்கா கொண்டு வரச் சொன்னார்,” என்று அந்தக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதிலும் அவரிடம் இருந்து குறைந்த அளவிலான ஹஷீஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அது இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கு இடையில் வைத்து கொண்டு வரப்பட்டது. இதற்காக முதலில் 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

திகார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிரண் பேடி சார்லஸை திகார் சிறையின் சட்டப் பிரிவில் இணைத்திருந்தார்

இடமாற்றம் செய்யப்பட்ட கிரண் பேடி

திகார் சிறையின் ஐஜி கிரண் பேடி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு சார்லஸ் ஷோப்ராஜ் காரணமாக ஆனார் என்று சுனில் குப்தா குறிப்பிட்டார்.

கிரண் பேடி அவரை திகார் சிறையின் சட்டப்பிரிவில் இணைத்திருந்தார். கைதிகளின் மனுக்களை தட்டச்சு செய்ய அவருக்கு தட்டச்சு இயந்திரம் வழங்கப்பட்டது.

இதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை. ஆனால், தட்டச்சுப் பொறி என்பது ஆடம்பரப் பொருள். அதன் உதவியுடன் புத்தகங்களை எழுதி ஷோப்ராஜ் தனது குற்றச்செயல்களை பிரபலப்படுத்தி வந்தார் என்பது கிரண் பேடியை இடமாற்றம் செய்வதற்கான காரணமாக கூறப்பட்டது.

இதன் காரணமாக, மகாசேசே விருது பெற்ற கிரண் பேடி வேறு இடத்துக்கு பதவி மாற்றப்பட்டார்.

திகார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தட்டச்சு இயந்திரத்தை சார்ல்ஸுக்கு அளித்தது, கிரண் பேடி இடமாற்றம் செய்யப்பட்டதற்கான காரணமாக சொல்லப்பட்டது

திகார் சிறையில் 20 ஆண்டுகள் கழித்த பிறகு, சார்லஸ் ஷோப்ராஜ் 1997 பிப்ரவரி 17 ஆம் தேதி திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அப்போது அவரது வயது 53.

ஆனால் அவருடைய கஷ்டங்கள் அப்போதும் தீரவில்லை. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2003 இல் அவர் நேபாளத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

2022 டிசம்பர் 21 ஆம் தேதி நேபாள உச்ச நீதிமன்றம் அவரை விடுவிக்க உத்தரவிட்டது.

அங்கிருந்து அவர் பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டார். தற்போது அவர் அங்கு வசித்து வருகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு