முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர், வனஇலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் மக்களுக்குரிய காணிகளை தொடர்ந்தும் அத்துமீறி அபகரிப்புச் செய்வதால், மக்கள் குடியிருப்பதற்கே காணிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு அரச இயந்திரங்கள் தொடர்ந்தும் மக்களின் காணிகளை ஆக்கிரமிப்புச்செய்தால் மக்கள் வீதிகளிலா குடியிருப்பது எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 03.02.2025 இன்று இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் துணுக்காய் பிரதேசசெயலர் பிரிவில் 255குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு காணியில்லை என முறையிடப்பட்டது. இந் நிலையில் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
துணுக்காய் பிரதேசசெயலர் பிரிவில் ஐயங்கன்குளத்தில் 21குடும்பங்களுக்கு, பழையமுறிகண்டியில் 04குடும்பங்ளுக்கும், புதுத்துவெட்டுவான் பகுதியில் 12குடும்பங்களுக்கும், கல்விளான் பகுதியில் 15குடும்பங்களுக்கும், தென்னியன்குளம் பகுதியில் 05குடும்பங்களுக்கும், கோட்டைகட்டியகுளம் பகுதியில் 05குடும்பங்களுக்கும், அம்பலப்பெருமாள் குளம் பகுதியில் 05குடும்பங்களுக்கும், அமதிபுரம் பகுதியில் 07குடும்பங்களுக்கும், துணுக்காய் பகுதியில் 08குடும்பங்களுக்குமாக மொத்தம் 255குடும்பங்கள் துணுக்காய் பிரதேசசெயலர்பிரிவிலே காணியற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.
இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் படையினராலும், வனஇலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச இயந்திரங்களால் மக்களினுடைய காணிகள் அதிகளவில் அபகரிக்கப்பட்டிருப்பதற்கான புள்ளிவிபரங்கள் எம்மிடமுள்ளன. இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள இந்த காணிகள் மீட்கப்பட்டு இவ்வாறு வலிந்து காணிகள் இல்லாமல் செய்யப்பட்ட மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.
குறிப்பாக வன இலாகா மக்களிடமோ, கிராமஅலுவலர், பிரதேசசெயலாளர், மாவட்டசெயலர் எவருடனும் தொடர்புகொள்ளாமல், அறிவித்தல் வழங்கப்படாமலேயே இவ்வாறு மகாகளின் காணிகளில் எல்லைக்கற்கள் இடுகின்ற செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். இனிஇவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும்.
எமது வன்னிப் பகுதிகளில் நீண்டகாலமாக்இடம்பெற்ற யுத்தம் காரணமாக தமது பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், நீண்ட காத்திற்குப் பின்னரே தமது இடங்களில் மீளக்குடியேறியுள்ளனர்.
இந் நிலையில் அந்த மக்கள் இடப்பெயர்விற்கு முன்னர் வாழ்ந்த குடியிருப்புக் காணிகள், நெற்செய்கைக்காணிகள், மேட்டுப் பயிர்ச்செய்கைக் காணிகள் உள்ளிட்ட அனைத்துக்காணிகளும் பற்றைக் காடுகளாகக் காணப்படுகின்றன.
இவ்வாறு பற்றைக்காடுகளாகக் காணப்படும் மக்களின் காணிகளையே வன இலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரசதிணைக்களங்கள் எந்த அறிவிப்புக்களையும் செய்யாது தமது எல்லைக்கற்களை இட்டு ஆக்கிரமிப்புச்செய்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவ்வாறு மக்களின் காணிகளை ஆக்கிரமிப்புச்செய்கின்ற திணைக்களங்களைச் சார்ந்தவர்கள் இவ்வாறான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு வருவதில்லை. இந்த அபகரிப்பாளர்கள் இந்த கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறானவர்களின் செயற்பாடுளை மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
இவ்வாறான அபகரிப்புச் செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றன. எனவே இந்த இந்தவிடயத்திற்கு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முறையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
ஏன் எனில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009இற்கு முன்னர் வனவளத் திணைக்களத்திடம் 2,22006ஏக்கர், 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் அடாவடித்தனமாக எமது மக்களின் காணிகளுக்கும் எல்லைக்கல்லிட்டு 4,35000ஏக்கர் காணிகள் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது.
அந்தவகையில் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது மக்களின் காணிகளை விடுதலைப் புலிகள் பாதுகாத்தனர். அவ்வாறு எமது மக்களின் காணிகளை விடுதலைப்புலிகள் பாதுகாத்ததால்தான் எமது மக்கள் நிறைவாகவும், சிறப்பாகவும் வாழ்ந்தார்கள்.
நிலம்தான் எமது உரிமை, நிலம் இல்லையேல் எதுவுமில்லை. அவ்வாறிருக்க எமது மக்களின் காணிகள் அனைத்தையும் அபகரிப்புச்செய்தால், எமது மக்கள் காணியின்றி தெருவிலா இருப்பது எனவும் கேள்வி எழுப்பினார்.