by guasw2

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை: ட்ரூடோ அதிரடி! அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. கனடாவின் நடவடிக்கையால் அமெரிக்கர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கனடா பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிப்.1-ம் தேதி கையெழுத்திட்ட சில மணிநேரங்களுக்கு பின்பு ட்ரூடோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஓட்டோவாவில் செய்தியாளர்களிடம் பேசிய கனடா பிரதமர் ட்ரூடோ இரு அண்டை நாடுகளின் முந்தைய வரலாற்றை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

ட்ரூடோ கூறுகையில், “நார்மண்டி கடற்கரை முதல் கொரிய தீபகற்பத்தின் மலைகள் வரை ஃப்ளாண்டர்ஸ் நிலப்பரப்பு முதல் காந்தஹார் தெருக்கள் வரை உங்களின் இருண்ட காலங்களில் உங்களுடன் நாங்களும் இணைந்து போராடி இறந்துள்ளோம்.

ஆம், கடந்த காலங்களில் நமக்குள் வேறுபாடுகள் இருந்தன.ஆனால் அவற்றைக் கடந்து செல்வதற்கான வழிகளை நாம் கண்டறிந்துள்ளோம். நான் முன்பே கூறியது போல, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்கு பொற்காலத்தை கொண்டு வர விரும்பினால், அதற்கு சிறந்த வழி கனடாவுடன் கூட்டு சேர்வதே தவிர எங்களைத் தண்டிப்பது இல்லை.

நாங்கள் எதனையும் அதிகரிக்க விரும்பவில்லை. ஆனால் கனடாவுக்காக, கனடா மக்களுக்காக, கன்னடியர்களின் வேலைவாய்ப்புகளுக்காக நாங்கள் போராடுவோம்.

கனடாவுக்கு எதிரான வரி விதிப்பு அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை ஆபத்தில் ஆழ்த்தும். அமெரிக்க வாகனங்கள் உருவாக்கும் ஆலைகள் மற்றும் பிற உற்பத்தி வசதிகளை மூடுவதற்கு வழி வகுக்கும். அவை மளிகைக் கடையில் உங்களின் உணவுப்பொருட்கள் மற்றும் எரிவாயுக்களின் விலைகளை அதிகரிக்கச் செய்யும்.” இவ்வாறு ட்ரூடோ தெரிவித்தார்.

ட்ரம்பின் வரிவிதிப்பு: அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதை பொருட்களின் பெரும் அச்சுறுத்தல்களை தடுக்கும் விதமாக கனடா மற்றும் மெக்சிகோ நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரியும் விதிக்க ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்