by guasw2

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு முதலாவது மாரடைப்பு வந்தமைக்கு அவரது பேர்த்தியின் திருமண வைபவத்தின்போது அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அவர் அவமானப்படுத்தப்பட்டதே காரணமென பகிரங்கமாகக் கூறப்பட்டது. ரணசிங்க பிரேமதாச ஏற்படுத்திய அரசியல் துன்புறுத்தல்களும் அநாகரிக செயற்பாடுகளுமே முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்கவுக்கு மாரடைப்பு மரணத்தை ஏற்படுத்தியது என்று அவரது கட்சியினரே அன்று குற்றஞ்சாட்டியிருந்தனர். 

ஈழத்தமிழர் அரசியலில் மாவை என்ற ஈரெழுத்து அழிக்க முடியாத இடத்தைப் பெற்றது. சோமசுந்தரம் சேனாதிராஜா என்ற நெடிய மனிதரை அவரது பிறந்தகமான மாவிட்டபுரத்தின் சுருக்கப் பெயரால்தான் எல்லோரும் அழைப்பர். இதனால் மாவை என்பது மதிப்பார்ந்த பெயராக அனைவரது மனதிலும் பதிந்துள்ளது.

எப்போதும் எல்லோராலும் இலகுவாக அணுகக்கூடிய ஒருவராக மாவை சேனாதிராஜா இருந்தமையால் இவரை மாவை அண்ணன் என்று பலரும் பொதுவாக அழைப்பதும், இவர் அவர்களை தம்பி என்று பாசத்தோடு அழைப்பதும் தமிழ் உணர்வினது உரிமையான அடையாளமாக திகழ்கிறது.

தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களால் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு ஏழாண்டுகளுக்கு முன்னர், தந்தை செல்வா வசித்த கொல்லங்கலட்டி கிராமத்துக்கு அருகாமையிலுள்ள மாவிட்டபுரத்தில் பிறந்து, தந்தையின் கொள்கையை பற்றுறுதியாகக் கொண்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர் மாவை சேனாதிராஜா. 1961ல் தமிழ்மண்ணில் இடம்பெற்ற சத்தியாக்கிரகம் இவரது அரசியல் பயணத்துக்கான திறவுகோல். அடுத்தாண்டு தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து எட்டாண்டுகள் அதன் செயலாளராகவும், அதற்கடுத்த பதினான்கு ஆண்டுகள் (1969-1983) தமிழின விடுதலைக்காகப் போராடி எட்டுத் தடவைகள் – மொத்தமாக ஏழாண்டு சிறைவாசம் அனுபவித்தவர்.

தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலை முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்னும் தமிழர் தலைமைக் கட்சிகளில் அறாத்தொடராக மையப்புள்ளியில் நின்று செயலாற்றியவர் இவர். பதவி வேண்டி இவர் அரசியலுக்கு வரவில்லை. எதனையும் களத்தில் நின்று செயலாக்க வேண்டுமென்பதால் தன்னை அதற்குள் ஆகுதியாக்கியவர். இன்று தமிழரசிலும் அதனோடிணைந்த அமைப்புகளிலும் இருப்பவர்களில் எவரும் மாவைக்கு நிகரானவர் இல்லையென்று துணிந்து கூறலாம்.

இவர் விரும்பியிருந்தால் 1970களிலேயே ஏதாவதொது உள்ளூராட்சிச் சபையில் தலைவராகியிருக்க முடியும். அதற்கான தகுதியும் உரிமையும் இவருக்கு இருந்தன. அது எதனையும் எதிர்பாராது விடுதலை வேட்கையில் ஒரு தொண்டனாகவே தம்மை இணைத்துச் செயற்பட்டார். 1989க்குப் பின்னரே கட்சித் தலைவர்களின் வேண்டுதலுக்கு இணங்க தமிழ்த் தேசிய அரசியலில் போட்டியிட நேர்ந்தது. அப்போது இவருக்கு வயது 47. அன்றிலிருந்து சுமார் மூன்று தசாப்தங்களாக நாடாளுமன்ற பிரதிநிதியாக இருந்துள்ளார். விடுதலைப் போராட்டம் உக்கிரமாக இருந்த நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழரின் ஏக பிரதிநிதிகளாக ஏற்க வேண்டுமென்ற தீர்மானத்தை கட்சியின் நாடாளுமன்றக் குழு எடுப்பதற்கு முதற்காரணமாக இருந்தவரும் இவரே.

2014ம் ஆண்டில் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவி இவரை நாடி வந்தது. இப்பதவியை இவர் தேடிப்போகவில்லை. நீண்டகால அனுபவம், அரசியல் மூப்பு, கையாளும் தகுதி, கொள்கைப் பற்று போன்றவைகள் அனைத்தும் இவருக்கு இப்பதவியை பெற்றுக் கொடுத்தன.

2024ல் தமிழீழ அரசியல் காற்று திசை திரும்ப ஆரம்பித்தது. திறக்கப்பட்ட கதவால் உள்ளே வந்தவர்களின் குறி இவராகவே இருந்தது. பெருந்தலைவர் என்று அழைக்கப்பட்ட இரா.சம்பந்தனின் இயலாமை, பிணி போன்ற காரணங்களை முன்னிறுத்தி அவரை அரசியலிலிருந்து நீக்க முயற்சித்தவர்கள்இ சம்பந்தனின் மறைவுக்குப் பின்னர் மாவையை பதம் பார்க்க ஆரம்பித்தனர். அவர்களது உள்வரவின் அடிப்படை நோக்கமாக அதுவே இருந்தது.

மாவையர் தலைமை வகித்த பத்தாண்டுக் காலத்தில் ஒப்பேற்ற முடியாது போன அனைத்துக்கும் இவர் மீதே குறை கண்டனர். அந்தக் காய் நகர்த்தலில் புதிய தலைவர் தெரிவு இடம்பெற்றது. இத்தெரிவில் சிவஞானம் சிறீதரன் வெற்றி பெற்றதையும் தடுப்பதற்கு கட்சியை நீதிமன்றத்தின் படிகளில் ஏற்றினர். அனைவரையும் அணைத்துச் செல்ல வேண்டும், கட்சி பிளவுபடக் கூடாது என்ற மாவையரின் நல்லெண்ண முயற்சியை முறியடித்து அவர் மீது இயங்கு நிலையற்ற தலைவர் என்ற பட்டத்தையும் சூட்டி அவரை அகற்றும் நாடகம் ஆரம்பமானது.

கட்சி மிகவும் நெருக்கடிகளைச் சந்தித்த வேளையில் அதனை உடையாமல் பாதுகாப்பதற்காக இவர் மேற்கொண்ட மென்போக்கு இவரைப் பலவீனமானவராகக் காட்டியிருக்கலாம். அதற்காக அவரது கடந்த கால செயற்பாடுகளையும் அர்ப்பணிப்புகளையும் குறைத்து எடைபோட்டிருக்கக்கூடாது.

கருத்து முரண்பாடு உட்கட்சி மோதலாக முற்றிச் சென்றவேளையில் தலைவர் பதவியிலிருந்து விலகிஇ ஏற்கனவே அப்பதவிக்குத் தெரிவாகியிருந்து சிவஞானம் சிறீதரனிடம் தலைமைப் பதவியை கையளிக்கும் தமது விருப்பத்தை கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். அண்ணன் எப்போ போவான் – திண்ணை எப்போ காலியாகும் என்று காத்திருந்தவர்களுக்கு மாவையரின் இந்தக் கடிதம் பாலில் விழுந்த பழமானது. நிலைமையை சுமுகமாக்க விரும்பி தமது முன்னைய கடிதத்தை விலக்கிக் கொள்ள இவர் விரும்பியபோது அதற்கு கட்சியின் கட்டமைப்பில் இடமில்லையென்று கூறி இவரை தலைவர் பதவியிலிருந்து பிடித்துத் தள்ளாத குறையாக வெளியேற்றினர். தப்பித் தவறி மீண்டும் இவர் தலைவராகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் அந்தப் பதவி நிரப்பப்பட்டது.

ஏறத்தாழ 70 ஆண்டுகளாக அடிமட்டத் தொண்டனாகவிருந்து கட்சித் தலைவர் வரை மிகமிக நெருக்கடியான காலங்களில் கட்சியை உடையவோ அழியவோ விடாது காப்பாற்றிய மாவை சேனாதிராஜா அவர்களுக்கு வழங்கப்பட்ட உயரிய மரியாதை அவர் அமர்வதற்கு கதிரைகூட இல்லையென்று மறுக்கப்பட்டதுதான். அவ்வாறான அவமானங்களால் அவர் மனஉளைச்சல், மனஅழுத்தம் என்று வெளியே அடையாளம் காணமுடியாத உபாதைகளால் தடுமாற்றம் அடைந்திருந்தார். தமது வீட்டில் விழுந்ததால் தலையில் ஏற்பட்ட காயத்துக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அது பயனின்றி அவர் உயிர் நீத்தார் என்பது இப்போது செய்தியாகிவிட்டது.

தமிழரசுக் கட்சியை கொள்முதல் செய்ய நினைத்து, அதன் தலைவராகவிருந்த மாவையரை ஏளனப்படுத்தி அவமானத்துக்குள்ளாக்கியது யார் என்பதை குடும்ப உறவினர்களும் ஊடகங்களும் தெரியப்படுத்தி வருகின்றன. மாவையரின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தவே அவர்கள் போகமுடியாத நிலையிலிருப்பதாகவே ஊடகங்கள் ஊடாக அறிய முடிகிறது.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸநாயக்க தமது அமைச்சர்கள் சிலருடன் மாவையர் இல்லம் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார். இவரோடு இணைந்து அங்கு செல்வதற்கு முன்னாள் எம்.பி. சுமந்திரன் அணுகியபோதும் அது சாத்தியப்படவில்லை. தமிழரசுக் கட்சியின் வடபகுதி முக்கியஸ்தர்கள் பலரும் காணாமலாக்கப்பட்டவர்கள் போல் மாறியுள்ளனர். மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த முக்கியமானவர்கள் மாவையர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடனேயே யாழ்ப்பாணம் வந்து அவர் நலனில் அக்கறை காட்டியுள்ளனர். கட்சியின் தலையாக விளங்கியவரின் மறைவுக்கு அக்கட்சியினால் இதனை எழுதும்வரை ஓர் அனுதாப அறிக்கைகூட விட முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.

இவ்வேளையில் இருவேறு முன்னைய சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன:

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேர்த்தியை அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் ஒருவர் திருமணம் புரிந்தார். வெகு ஆடம்பரமாக நடைபெற்ற இத்திருமண வைபவத்தில் மணமகளின் பாட்டனாரான சிவாஜி கணேசன் மரியாதையீனமாக புறம்போக்காக நடத்தப்பட்டார். இது நடைபெற்று சில நாட்களில் அவருக்கு முதலாவது மாரடைப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா வீட்டுத் திருமணத்தில் அவமானப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட மனஅழுத்தமே சிவாஜி கணேசனின் மாரடைப்புக்கு காரணமென தமிழ்நாட்டு ஊடகங்கள் எழுதி வந்தன. இதனை இறுதிவரை எவருமே மறுக்கவில்லை.

இலங்கையின் பிரபலமான பிரதமராகவிருந்தவர் டட்லி சேனநாயக்க. 1973ம் ஆண்டு ஆரம்பத்தில் இவரது ஐக்கிய தேசிய கட்சியில் எம்.பி.யாகவிருந்த ரணசிங்க பிரேமதாசவுக்கும் இவருக்குமிடையில் மிக மோசமான மோதல் ஏற்பட்டது. டட்லியை விமர்சித்து பிரசுரங்களையும் பகிரங்கக் கூட்டங்களையும் பிரேமதாச நடத்தினார். அதுமட்டுமன்றி, கொழும்பு ஊடங்களிலும் இது தொடர்பான கட்டுரைகளை பிரேமதாச எழுதி வந்தார். ஏப்ரல் 13ம் திகதியிலன்று திடீர் மாரடைப்பு காரணமாக டட்லி சேனநாயக்க காலமானார். இவரது மரணச் சடங்குக்கு பிரேமதாச சென்றபோது ஐக்கிய தேசிய கட்சி அபமானிகள் கூக்குரலிட்டு கூச்சலடித்து பிரேமதாசவை மரணச் சடங்கில் கலந்து கொள்ள தடையாக நின்றனர்.

மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரணத்தை நினைக்கும்பொழுது மேற்குறிப்பிட்ட இரு நிகழ்வுகளும் நினைவலையில் மோதுகின்றன.

இறுதியாக, தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மாவையரின் மரணத்தையொட்டி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது, மாவையருக்கு மரியாதை வழங்கும் வகையில் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவுகளும் பிரிவுகளும் நீக்கப்பட்டு கட்சி மீண்டும் வளர்க்கப்பட வேண்டுமென்று தெரிவித்திருந்தார். மாவையரை கட்சித் தலைவர் பதவியிலிருந்து அப்புறப்படுத்தி அவரை வீட்டுக்கு அனுப்பியபோது இந்த வேண்டுகோளை திரு. சிவஞானம் அவர்கள் விடுத்திருந்தால் இன்னும் சிலகாலம் மாவையர் வாழ்ந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

பனங்காட்டான்

தொடர்புடைய செய்திகள்