பல வருடங்களாக வெளியாகாமல் இருக்கும் துருவ நட்சத்திரம் போன்ற படங்களுக்கு மதகஜராஜாவின் வெற்றி உதவுமா?
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
விஷால் நடிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில், 12 வருடங்கள் கழித்து வெளியான மதகஜராஜா திரைப்படம் பெற்றிருக்கும் வரவேற்பு மற்றும் வசூல் ரீதியிலான வெற்றி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
“மதகஜராஜாவின் வெற்றி எனக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் எனது ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை நிச்சயம் வெளியிடுவோம். எத்தனை வருடங்கள் கழித்து வெளியானாலும், ஒரு படத்திற்கு கிடைக்க வேண்டிய வரவேற்பு கிடைக்கும் என்பதை மதகஜராஜா உணர்த்தியுள்ளது”
சமீபத்தில் ஒரு தனியார் ஊடகத்தின் பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார் இயக்குநர் மற்றும் நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன்.
மதகஜராஜாவின் வெற்றி இயக்குநர் கௌதமுக்கு மட்டுமல்லாது, அனைத்துப் பணிகளும் முழுமையடைந்து, வெளியிடப்படாமல் முடங்கிக் கிடக்கும் பல தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு ஊக்கத்தை அளித்துள்ளது என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆனால், அதே சமயம் ‘மதகஜராஜா’ ஒரு விதிவிலக்கு என்றும், பல வருடங்கள் தாமதமாக வெளியாகும் அத்தனை திரைப்படங்களுக்கும் அது பொருந்தாது என்றும் சிலர் கூறுகிறார்கள்.
‘தமிழ் சினிமாவில் காமெடிக்கு இருக்கும் வெற்றிடம்’
“புதிய திரைப்படமோ அல்லது தாமதமாக வெளியாகும் திரைப்படமோ, அதன் கதை/திரைக்கதை, அது வெளியாகும் சமயம், அதனுடன் சேர்ந்து வெளியாகும் திரைப்படங்கள், அதற்கு ஒதுக்கப்படும் திரையரங்குகள், ஆகிய அம்சங்கள் தான் ஒரு படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.” என்கிறார் இயக்குநர் வசந்த பாலன்.
வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார் வசந்த பாலன்.
மதகஜராஜாவின் திரைப்படத்தின் வெற்றிக்கு, அப்படத்தில் நகைச்சுவைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதும் ஒரு முக்கிய காரணம் என்கிறார் அவர்.
“தமிழ் சினிமாவில் காமெடிக்கு என்று ஒரு வெற்றிடம் இருக்கிறது. வடிவேல், சூரி, யோகி பாபு போன்ற நடிகர்கள் தீவிரமான கதைகளங்களை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க பழைய சந்தானத்தை மீண்டும் திரையில் பார்க்க மக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை ‘மதகஜராஜா’ பூர்த்தி செய்தது” என்று அவர் கூறுகிறார்.
பொதுவாகவே தமிழ் சினிமாவில் ‘காமெடி’ என்பது நாயகனுக்கு துணையாக வரும் ஒரு கதாபாத்திரத்தை சுற்றியே பின்னப்படுவதால், கவுண்டமணி- செந்தில், விவேக், வடிவேல், சந்தானம் என நகைச்சுவை நடிகர்கள் பலரும் அதே மாதிரியான கதாபாத்திரங்களில் திரையில் தோன்றுவதையே மக்களும் ரசித்தார்கள் எனக் குறிப்பிடுகிறார் வசந்த பாலன்.
தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், நிதிப் பிரச்னைகளே முக்கியமான காரணமாக இருப்பதாகக் கூறும் வசந்த பாலன், தனது சொந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
“எனது திரைப்படம் அங்காடி தெரு, நிதிப் பிரச்னைகள் காரணமாக இரண்டு வருடங்கள் தாமதமாக வெளியானது. பணம் பிரதானமாக இருக்கும் ஒரு துறையில், இதைத் தவிர்க்க முடியாது. எனது ‘ஜெயில்’ திரைப்படம், 4 வருடங்கள் தாமதமாக வெளியானது. அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது.” என்கிறார்.
நிதிப் பிரச்னைகள் அல்லாது, சென்சார் பிரச்னை காரணமாக சுமார் 15 வருடங்கள் வெளியாகாமல் இருந்த திரைப்படம் ‘குற்றப்பத்திரிகை’. ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், ராம்கி, ரகுமான், ரம்யா கிருஷ்ணன், ரோஜா நடிப்பில் 1992இல் எடுக்கப்பட்ட திரைப்படம் இது.
2007இல் இப்படம் இறுதியாக வெளியான போது, எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
‘மதகஜராஜாவின் வெற்றி ஒரு விதிவிலக்கு’
முன்னணி நடிகர், நடிகைகள் நடித்த அல்லது பிரபலமான இயக்குநர்கள் இயக்கிய திரைப்படங்கள் பலவும் பல்வேறு காரணங்களால் வெளியிடப்படாமல் உள்ளன.
- சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்வர் சுந்தரம்’
- அரவிந்த் சாமி மற்றும் திரிஷா நடிப்பில், பிரபல இயக்குநர் ஹச்.வினோத்தின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவான ‘சதுரங்க வேட்டை – 2’ திரைப்படம்
- வெங்கட் பிரபு இயக்கத்தில், சத்யராஜ், ஜெய், ஜெயராம் நடித்துள்ள ‘பார்ட்டி’ திரைப்படம்
- விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘இடம் பொருள் ஏவல்’
- நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவான ‘பாரிஸ் பாரிஸ்’ திரைப்படம் (இந்தியில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘குயின்’ படத்தின் ரீமேக்)
- மிஷ்கின் இயக்கத்தில், ஆண்ட்ரியா நடித்துள்ள ‘பிசாசு- 2 திரைப்படம்
- நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாக்காலம்’
- அரவிந்த் சாமி, சந்தீப், ஸ்ரேயா சரண் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேனின் ‘நரகாசூரன்’ என இந்தப் பட்டியல் மிகவும் நீளம்.
‘மதகஜராஜா’ வெற்றி ஒரு விதிவிலக்கு என்றும், அதையே வெளியாகாமல் முடங்கி கிடைக்கும் பிற நட்சத்திரத் திரைப்படங்களுக்கும் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுகிறார் பத்திரிகையாளர் பிஸ்மி.
பத்து வருடங்களுக்கு முன்பு பொழுபோக்கு அம்சங்கள் கொண்ட பல திரைப்படங்கள் வெளியாகின என்றும், இப்போது அத்தகைய நகைச்சுவை கலந்த படங்களுக்கு இருக்கும் பஞ்சமே இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் என்றும் கூறும் பிஸ்மி, ஒரு திரைப்படம் வெளியாகாமல் முடங்குவதற்கான மற்றொரு காரணத்தையும் கூறுகிறார்.
“ஒரு திரைப்படம் படமாக்கப்படும்போதே, அது தொடர்பாக கோலிவுட்டில் பேச்சுகள் பரவும். படப்பிடிப்பு தளத்திலேயே நல்ல கைதட்டல் கிடைக்கிறது, இயக்குநர் எடுக்கும் காட்சிகள் சிறப்பாக உள்ளன போன்ற செய்திகள் பரவும்போது, விநியோகஸ்தர்கள் அதை வாங்க ஆர்வம் காட்டுவார்கள்” என்கிறார்.
மக்கள் எப்படி விமர்சனங்களைக் கேட்டு திரையரங்கிற்கு வருகிறார்களோ, அதுபோல விநியோகஸ்தர்களும் இத்தகைய கோலிவுட் வட்டாரப் பேச்சுகளை நம்பி படத்தை வாங்கவும் செய்வார்கள், தவிர்க்கவும் செய்வார்கள் என்கிறார் பிஸ்மி.
‘வெளியாகாமல் இருக்கும் திரைப்படங்களால் முடங்கிக் கிடக்கும் பல கோடி ரூபாய்’
இவ்வாறு வெளியாகாமல் இருக்கும் திரைப்படங்களால் பல கோடி ரூபாய்கள் முடங்கிக் கிடப்பதாகக் கூறுகிறார் பிஸ்மி.
“இங்கு பலரும் கடன் வாங்கியே படம் எடுக்கிறார்கள். அப்படியிருக்க ஒரு படம் வெளியாகவில்லை என்றால் பைனான்சியரின் பணம்தான் முடங்கும். மதகஜராஜாவின் வெற்றிச் சூழலைப் பயன்படுத்தி, அந்த பணத்தை மீட்டெடுக்கும் நோக்கில், முடங்கிக் கிடக்கும் திரைப்படங்களை வெளியிட பல பைனான்சியர்கள், விநியோகஸ்தர்கள் நினைக்கிறார்கள்.” என்கிறார் பிஸ்மி.
இதுகுறித்து பேசிய விநியோகஸ்தரும் திரையரங்க உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியம், “முடங்கிக் கிடக்கும் நல்ல படங்கள் வெளியானால் தமிழ் சினிமாவின் பொருளாதார நிலை உயரும். விநியோகஸ்தர்கள் மட்டுமல்லாது திரையரங்க உரிமையாளர்களுக்கும் லாபம் கிடைக்கும். மதகஜராஜா படத்தை வெளியிட்ட அனைத்து திரையரங்குகளும் நல்ல லாபத்தைக் கண்டன” என்று கூறுகிறார்.
ஆனால், இயக்குநர் வசந்த பாலன் மற்றொரு விமர்சனத்தை முன்வைக்கிறார்.
“தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் வெளியாகும் படங்களில், 15 முதல் 20 திரைப்படங்களே முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள். மீதமுள்ள 70 முதல் 80 சதவீத படங்கள், சிறு பட்ஜெட் அல்லது புதுமுகங்களின் திரைப்படங்கள். தமிழ் சினிமாவின் பொருளாதாரம், அதை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் இந்த 70-80 சதவீத படங்களைச் சார்ந்து உள்ளது.”
“ஒரு புது சிறு பட்ஜெட் திரைப்படம் வெளியானாலே திரையரங்கம் கிடைக்காத நிலை உள்ளது, வெளியாகாமல் முடங்கிக் கிடக்கும் சிறு பட்ஜெட் படங்களுக்கு எப்படி திரையரங்கம் கிடைக்கும்” என்று கேள்வி எழுப்புகிறார் இயக்குநர் வசந்த பாலன்.
“தாமதமாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து பேசும்போது, பெரிய நடிகர்கள் அல்லது இயக்குநர்களின் முடங்கிக் கிடக்கும் படங்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன, சிறு பட்ஜெட் படங்களுக்கு இடமில்லை என்பது உண்மைதான். ஏதேனும் பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே அவை வெளியிடப்படும்” என்கிறார் பிஸ்மி.
இதற்கு பதிலளித்த விநியோகஸ்தரும் திரையரங்க உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியம், “சமீபத்தில் வெளியான ‘குடும்பஸ்தன்’ உட்பட பல சிறு பட்ஜெட் படங்களுக்கு போதுமான அளவு திரையரங்கங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், பெரிய நடிகர்களின் படங்களுக்கு ஒதுக்கும் அளவுக்கு கொடுக்க வேண்டும் என நினைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.” என்று கூறுகிறார்.
மக்களே கூட எல்லா சிறு பட்ஜெட் படங்களையும் திரையில் பார்க்க ஆசைப்படுவதில்லை என்றும், பிரபலமான விமர்சகர்கள் கூட அனைத்து சிறு பட்ஜெட் படங்களையும் விமர்சனம் செய்வதில்லை என்றும் கூறுகிறார் அவர்
“ஊடகங்கள் கூட நட்சத்திரங்களின் படங்களின் மீதே அதிக கவனம் செலுத்துகின்றன. அப்படியிருக்க நாங்கள் மட்டும் வெளியாகும் அனைத்து சிறு பட்ஜெட் படங்களுக்கும் அதிகளவு திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என நினைப்பது எந்த வகையில் நியாயம்?” எனக் கூறுகிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.
ஆனால் இதை மறுக்கும் இயக்குநர் வசந்த பாலன், “திரைப்படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்குவதை முறைப்படுத்த வேண்டும் என்பது தான் திரையுலகில் பல நாளாக ஒலிக்கும் கோரிக்கை. உடனே வெளியாகும் படமோ அல்லது தாமதமாக வெளியாகும் படமோ, அதை மக்களிடம் கொண்டுசேர்க்க நட்சத்திர முகமோ அல்லது பெரிய தயாரிப்பு நிறுவனமோ தேவை என்ற நிலை மாறாத வரை இங்கு எதுவும் மாறாது” என்று கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு