வருமான வரி

பட மூலாதாரம், Getty Images

புதிய வருமான வரி முறையில் (New Tax Regime), ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன.

முதலில் இந்த புதிய வரம்புகள் 2025ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதலே அமலாகின்றன. அதாவது, 2024-2025 நிதியாண்டுக்கு இந்த புதிய வரம்புகள் பொருந்தாது.

மற்றொன்று, மத்திய அரசு அறிவித்துள்ள வரி வரம்புகள், புதிய வருமான வரி திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்களுக்கே பொருந்தும். ( ஏற்கெனவே நடைமுறையில் இருந்த வருமான வரித் திட்டத்துடன் சேர்த்து, புதிய வருமான வரி திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. வரி செலுத்துபவர்கள், தங்கள் நிதி ஆதாரத்துக்கு ஏற்ப தங்களுக்கு உகந்த வரி திட்டத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்)

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

புதிய வருமான வரித் திட்டத்துக்கான புதிய வரம்புகள்

மத்திய அரசு 2025-2026 நிதியாண்டுக்காக அறிவித்துள்ள புதிய வருமான வரித் திட்டத்துக்கான வரம்புகள் இவை :

ரூ.4,00,000 வரை : வரி இல்லை

ரூ. 4,00,001 முதல் ரூ. 8,00,000 வரை : 5%

ரூ. 8,00,001 முதல் ரூ. 12,00,000 வரை : 10%

ரூ. 12,00,001 முதல் ரூ. 16,00,000 வரை : 15%

ரூ. 16,00,001 முதல் ரூ. 20,00,000 வரை: 20%

ரூ. 20,00,001 முதல் ரூ.24,00,000 வரை: 25%

ரூ.24,00,000க்கும் மேல் : 30%

புதிய வருமான வரி வரம்புகள்

பட மூலாதாரம், Getty Images

2024-2025 நிதியாண்டுக்கான புதிய வருமான வரி வரம்புகள் என்ன?

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள, 2024-2025 நிதியாண்டுக்கு பொருந்தக் கூடிய புதிய வருமான வரித் திட்டத்துக்கான வரம்புகள்:

ரூ.3,00,000 வரை – வரி இல்லை

ரூ.3,00,001 முதல் ரூ.7,00,000 – 5%

ரூ.7,00,001 முதல் ரூ.10,00,000 – 10%

ரூ.10,00,001 முதல் ரூ.12,00,000 – 15%

ரூ.12,00,001 முதல் ரூ.15,00,000 – 20%

ரூ.15,00,000க்கும் மேல் – 30%

ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லையா?

மத்திய பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் கொண்டிருப்பவர்களுக்கு வரி கட்ட தேவையில்லை என்ற செய்திகளை பார்த்திருப்பீர்கள்.

அதே நேரம், நான்கு முதல் எட்டு லட்சத்துக்கு 5%, எட்டு முதல் 12 லட்சத்துக்கு 10% வரி விதிக்கப்பட்டிருப்பதையும் கவனித்திருப்பீர்கள். இது எப்படி சாத்தியம்?

அதாவது ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்துக்கு குறைவாக சம்பளம் பெறுபவர்கள் எல்லாரும் வரி செலுத்த தேவையில்லை என்ற ஒட்டுமொத்தமான அறிவிப்பாக மத்திய அரசு எதையும் வெளியிடவில்லை. ஆனால் ரூ.12 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வரி செலுத்த அவசியம் இல்லாத வகையில் சில விதிகள் மாற்றப்பட்டுள்ளன.

வருமான வரி சட்டம் பிரிவு 87A-ன் கீழ் தள்ளுபடி அல்லது திருப்பி தரப்படும் தொகைக்கான( Rebate ) விதிகள் உள்ளன. இதன்படி வருமான வரி விலக்கு உச்சவரம்பு 7 லட்ச ரூபாயில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன் படி கணக்கிட்டுப் பார்த்தால், ஆண்டு வருமானம்

ரூ.4,00, 000 வரை – வரி இல்லை,

ரூ.4,00,001 முதல் ரூ.8,00,00 வரை – 5% ( செலுத்த வேண்டிய வரி ரூ.20,000)

ரூ.8,00,001 முதல் ரூ.12,00,000 வரை – 10% (செலுத்த வேண்டிய வரி ரூ.40,000)

இதன் மூலம் ரூ.12 லட்சம் ஆண்டு வருமானம் கொண்டிருப்பவர் ரூ.60 ஆயிரம் வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்த தொகைக்கான தள்ளுபடியை தான் மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய வருமான வரி வரம்புகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

உங்கள் வருமானம் ரூ.12 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் வரி செலுத்த வேண்டுமா?

ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் கொண்ட ஒரு நபருக்கு வருமான வரி செலுத்த தேவை இருக்காது. ஆனால், அவரது அலுவலகத்தில் அவருக்கு சம்பள உயர்வு வழங்கி சம்பளம் 13 லட்சமாக மாறினால் என்ன நடக்கும்.

அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரித் திட்டத்தின் படி, அவர் ரூ. 63,750 வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும். (நிலையான கழிவுக்கு பிறகு)

ரூ.4 லட்சம் வரை – வரி இல்லை

ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை – 5% (ரூ.20ஆயிரம் வரி)

ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை – 10% (ரூ.40 ஆயிரம் வரி)

ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை – 15% ( நிலையான கழிவுக்கு பிறகு மூதமுள்ள 25,000 ரூபாய்க்கு 3750 ரூபாய் வரி

நிலையான கழிவு மூலம் ஆண்டுக்கு ரூ 75,000 குறைக்கப்படும். எனவே இந்த சலுகை மூலம் ஆண்டுக்கு ரூ.12.75 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.

வருமான வரித் திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் மாற்றிக் கொள்ள முடியுமா?

வரி செலுத்தும் நபர்கள் பழைய, புதிய வருமான வரி திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது.

மாத சம்பளம் பெறுபவர்கள், ஒவ்வொரு நிதியாண்டிலும் தங்களுக்கு உகந்த வரி திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது.

எனவே இந்த ஆண்டில், பழைய வருமான வரி திட்டத்தை தேர்ந்தெடுத்தவர்கள், அடுத்த ஆண்டு புதிய வரி திட்டத்துக்கு மாற வேண்டும் என்று நினைத்தால் அது சாத்தியமே.

ஆனால், மருத்துவர்கள், பொறியாளர்கள், பட்டய கணக்காளர்கள், வழக்கறிஞர்கள், கட்டட கலைஞர்கள் போன்ற பணிகளில் இருந்து வருமானம் (Professional income) பெறுபவர்களாக இருந்தால், அவர்கள் புதிய வருமான வரித் திட்டத்தை ஒரு முறை தேர்ந்தெடுத்து விட்டால், மீண்டும் பழைய திட்டத்துக்கு மாற முடியாது. தொழில் செய்பவர்களுக்கும் இதே விதி பொருந்தும்.

மேலும், எந்த வரித் திட்டம் என்று ஒருவர் தேர்ந்தெடுக்காவிட்டால், அவருக்கு கட்டாயமாக புதிய வரித் திட்டத்தின் கீழ் வருமான வரி கணக்கிடப்படும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு