வள்ளுவர் பிறந்தமையால் தமிழ் நாட்டுக்கு எவ்வாறு பெருமையோ அதேபோல திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணத்தில் அமைந்தால் யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
மாவிட்டபுரத்தில் திருக்குறள் வளாகம் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து, செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற மாலை நிகழ்வில்,வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிக்கையில் ,
ஏனையோரால் நினைத்துப்பார்க்க முடியாத விடயங்களை ஆறு.திருமுருகன் சாதித்து வருகிறார். தமிழுக்கும், சைவத்துக்கும் தனது வாழ்வையே அர்ப்பணித்து அரும்பணியாற்றி வருகின்றார்
இதேவேளை ஏனைய ஆலயங்களுக்கு முன்மாதிரியாக சமூகப்பணிகளை அவர் முன்னெடுத்து வருகின்றார். அதை ஏனைய ஆலயங்களும் பின்பற்றவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
இன்று பலர் கொடையளிக்க தயாராக இருந்தாலும் நிதி மீதான வெளிப்படைத்தன்மை இன்மையால் தயங்குகின்றனர். ஆறு.திருமுருகன் மீது கொண்ட நம்பிக்கையால்தான் பலர் நிதி கொடுக்கின்றனர். ஏமாற்றுபவர்கள் நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்க முடியாது அவர்கள் விரைவில் அழிவது இயற்கை.
மேலும் திருக்குறள் தமிழர்களுக்கு பெருமை, எந்தக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய நூலாக திருக்குறள் அமைந்துள்ளது. எந்தமொழி பேசுவோரும், எந்த மதத்தைப் பின்பற்றுவோரும் திருக்குறளை படிக்க முடியும், திருவள்ளுவர் தமிழராகப் பிறந்தமை எங்களுக்கும் பெருமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இதில் யாழ்ப்பாண மாவட்டச் செயலர் ம.பிரதீபன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன், மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், தமிழ்த்துறை பீடாதிபதி விசாகரூபன் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது