கனடா, சீனாவுக்கு எதிரான டிரம்பின் முடிவால் அமெரிக்காவுக்கு என்ன இழப்பு ஏற்படும்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 சதவீத வரியும், சீனா மீது 10 சதவீத வரியும் விதிக்கப்படும் என்ற அறிவிப்பில், கடந்த  சனிக்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  கையெழுத்திட்டார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கப் பொருட்களை வாங்க வேண்டாம் என கனடா மக்களுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்போவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததையடுத்து வர்த்தகப் போர் தொடங்கியுள்ளது.

கனடா மற்றும் மெக்ஸிகோ மீது 25 சதவீத வரியும், சீனா மீது 10 சதவீத வரியும் விதிக்கப்படும் என்ற அறிவிப்பில், கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.

இந்த வரிக் கட்டுப்பாடுகள் வரும் செவ்வாய்க்கிழமை (நாளை) முதல் அமலுக்கு வருகிறது.

இதற்கு பதிலடியாக, கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அறிவித்துள்ள நிலையில், மெக்ஸிகோ மற்றும் சீனாவும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளன.

வட அமெரிக்க நாடுகளாகிய கனடா மற்றும் மெக்ஸிகோ அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளன.

கனடாவும் மெக்ஸிகோவும் அமெரிக்காவுடன் நீண்ட எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இரு நாடுகளும் (கனடா மற்றும் மெக்ஸிகோ) தங்கள் எல்லைகளை வலுப்படுத்தவில்லை என்றும், சட்டவிரோதமாக குடியேறிகளை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கின்றன என்றும் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

அது மட்டுமன்றி, ஃபென்டனில் போதை மருந்து, கனடா மற்றும் மெக்ஸிகோ எல்லையில் இருந்து அமெரிக்காவிற்கு வருவதாகவும் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

அதனையடுத்து, அமெரிக்க மக்களின் பாதுகாப்பிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, ட்ரூத் சோசியலில் கடந்த சனிக்கிழமையன்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

என்ன வகையான அச்சுறுத்தல் எதிர்பார்க்கப்படுகிறது?

அமெரிக்காவின் இந்த வரி அறிவிப்புக்குப் பிறகு, சாமானிய அமெரிக்க மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்  என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, உள்நாட்டு பொருட்களை வாங்குமாறு கனடா பிரதமர் ட்ரூடோ வேண்டுகோள் விடுத்துள்ளார்

அமெரிக்காவின் வரி அறிவிப்புக்குப் பிறகு, சாமானிய அமெரிக்க மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இது பணவீக்கத்தை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் நம்பப்படுகிறது.

மறுபுறம், அத்தியாவசிய பொருட்கள், எரிவாயு, பெட்ரோல், வீடுகள், கார்கள் மற்றும் பிற பொருட்களின் விலைகளை குறைக்கும் வாக்குறுதியுடன் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார்.

இந்த வட அமெரிக்க நாடுகளுக்கிடையிலான வரிப் போர் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம், அதில் அமெரிக்கா மிகவும் பாதிக்கப்படலாம் என்றும் கருதப்படுகின்றது.

யேல் பல்கலைக்கழகத்தின் பட்ஜெட் ஆய்வகத்தின் புதிய பகுப்பாய்வின்படி, வரிகளால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு தீங்கு ஏற்படலாம். இந்த வரிகள், சராசரி அமெரிக்க குடும்பத்திற்கு ஆண்டுக்கு 1,170 டாலர் கூடுதல் செலவை ஏற்படுத்தும் என்று இந்த பகுப்பாய்வு மதிப்பிடுகிறது.

அதே போல், மற்ற நாடுகள் பதிலடி கொடுக்கத் தொடங்கினால், பொருளாதார வளர்ச்சி குறையும் என்றும், பணவீக்கம் மோசமாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மறுபுறம், ஜஸ்டின் ட்ரூடோ ஏற்கனவே 25 சதவீத வரியை அறிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், கனடா நாட்டு மக்களை உள்ளூர் தயாரிப்புகளை வாங்குமாறு வலியுறுத்தினார்.

“கனடாவில் தயாரிக்கப்படும் பொருட்களைத் தேர்வு செய்வதற்கான நேரம் இது. எனவே,பொருட்களை வாங்கும்போது, அது எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதை சரி பார்க்க வேண்டும். நமது பங்கை நாம் செய்ய வேண்டும். அதனால் முடிந்தவரை கனடாவைத் தேர்ந்தெடுப்போம்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

ஐந்து முதல் ஆறு மாதங்களில் இந்த வரி நீக்கப்படாவிட்டால், கனடாவின் பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்லக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர். ஏனெனில் கனடாவின் ஏற்றுமதியில் 75 சதவீதம் நேரடியாக அமெரிக்காவிற்கு செல்கிறது.

மறுபுறம், டிரம்பின் அரசியல் எதிரியான ஜனநாயகக் கட்சியும் டிரம்பின் முடிவுக்கு எதிராக தீவிரமாக உள்ளது.

“மளிகைப் பொருட்களின் விலைகளைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள். டிரம்ப் தனது வரிகளால் விலைகளை உயர்த்துகிறார்” என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சக் ஷுமர், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், “தக்காளி விலையைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? மெக்ஸிகோ மீது டிரம்ப் விதிக்கப்போகும் வரிகளுக்காகக் காத்திருங்கள் இது உங்கள் தக்காளி விலையையும் உயர்த்தும். கார் விலைகளைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? கனடா மீது டிரம்ப் விதிக்கப்போகும் வரிகளுக்காகக் காத்திருங்கள், அது உங்களின் கார் விலையையும் உயர்த்தும்” என தனது மற்ற பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் சக் ஷுமர்.

நிராகரித்த டிரம்ப்

 வரிகளை அதிகரிப்பதற்கான ஆவணங்களில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்ட பிறகு, வரிகள் பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் என்ற கருத்தைச் சுற்றி எழுந்துள்ள கவலைகள் குறித்து, அவரிடம் கேட்கப்பட்டது.  ஆனால் டிரம்ப் அவற்றை நிராகரித்தார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வரி, ‘வெற்றிக்கு வழிவகுக்கும், பணவீக்கத்திற்கு அல்ல’ என்று டிரம்ப் கூறுகிறார்

வரிகளை அதிகரிப்பதற்கான ஆவணங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட பிறகு, வரிகள் பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் என்ற கவலைகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. ஆனால் டிரம்ப் அவற்றை நிராகரித்தார்.

“நீங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைகளைக் குறைப்பதாக உறுதியளித்தீர்கள், ஆனால் வரிகள் விலைகளை அதிகரிக்கும். இப்போது விலைகளைக் குறைக்க உங்கள் திட்டம் என்ன?”என ஒரு பத்திரிகையாளர் டிரம்பிடம் கேட்டார்.

இதற்கு பதிலளித்த டிரம்ப், “எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் பணவீக்கம் இல்லாததால், இந்த முறை நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பல நாடுகளில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் வரி விதித்தேன். அதனால் மற்ற நாடுகளில் இருந்து 600 பில்லியன் டாலர்கள் சம்பாதித்தோம்.”என்றார்.

தொடர்ந்து பேசிய டிரம்ப், “பணவீக்கத்திற்கு வரி காரணம் அல்ல. மாறாக வரியே வெற்றிக்கு காரணம். சிறிது காலத்திற்கு தற்காலிக இடையூறுகள் ஏற்படலாம், அதனை மக்கள் புரிந்துகொள்வார்கள்” என்றார்.

ஆனால், செனட் சபை உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான பெர்னி சாண்டர்ஸ், டிரம்பின் முடிவு தீங்கானது என்று கூறியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கனடா மற்றும் மெக்ஸிகோ மீது 25 சதவீத வரி விதிக்கும் டிரம்பின் ஒருதலைப்பட்சமான முடிவு சட்டவிரோதமானது மற்றும் நிச்சயமாக தீங்கு விளைவிக்கும். இதனால் ஒரு சராசரி அமெரிக்க குடும்பத்தின் ஆண்டு செலவுகள் 1,200 டாலர் வரை அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

சார்லஸ் எலியட் பல்கலைக்கழக பேராசிரியரும் பொருளாதார ஆய்வாளருமான லாரன்ஸ் சம்மர்ஸ், கனடா மற்றும் மெக்சிகோவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆபத்தானது என்றும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது  என்றும் நம்புகிறார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அதிகப்படியான வரிகள், எல்லைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, சாமானிய மக்களைப் பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

சார்லஸ் எலியட் பல்கலைக்கழக பேராசிரியரும் பொருளாதார ஆய்வாளருமான லாரன்ஸ் சம்மர்ஸ், கனடா மற்றும் மெக்ஸிகோவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆபத்தானது என்று கூறுகிறார்

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் ஒரு நீண்ட பதிவை எழுதியுள்ளார். இந்த வரிகளால் முதலில் ஆட்டோமொபைல், எரிவாயு பெட்ரோல் மற்றும் சாமானிய மக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் என்று கூறியுள்ளார்.

மேலும், “நுகர்வோர் மற்றும் நிறுவனங்களுக்கு இந்த வரிகளின் தாக்கம் செல்லும்போது ​​அவர்கள் தங்கள் போட்டியாளர்களின் விலைக்கு ஏற்றவாறு தங்களுடைய பொருட்களின் விலையை அதிகரிப்பார்கள். இது அமெரிக்க நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியைக் குறைத்து, அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் உருவாவதற்கு எதிராக அமையும்” என்று விளக்கினார்.

“கூட்டாளிகள் பதிலடி கொடுக்கும்போது, ​​​​அவர்கள் தகுந்த முன்னேற்பாடோடு பதிலளிப்பார்கள், அது நமது பொருளாதாரச் சிக்கல்களை அதிகரிக்கும் ” என்றும் அவர் பகிர்ந்துள்ளார்.

மேலும், “புதிய நிர்வாகத்தின் தொடக்க கால வெளியுறவுக் கொள்கை நெருங்கிய கூட்டாளிகளை தண்டிப்பதும், எதிரிகளுக்கு வெகுமதி அளிப்பதுமாக உள்ளது. ஆனால் ராஜ்ஜீய உத்தியென்பது, கூட்டாளிகளை ஒன்றிணைத்து எதிரிகளை பிளவுபடுத்துவதாகும். நாம் ஏன் இதற்கு நேர்மாறாக செயல்படுகிறோம்?” என்று லாரன்ஸ் சம்மர்ஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

“இந்த நடவடிக்கை அமெரிக்க வணிக சமூகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க சோதனை. இது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வர்த்தக உத்தி அல்ல என்பதை அவர்கள் அறிவார்கள். வணிகத் தலைவர்கள் அதனைக் கூறுவதற்கு தைரியம் பெறுவார்கள் என நம்புகிறேன்.”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வர்த்தக சபையின் சர்வதேச தலைவரான ஜான் மர்பி, இந்த முடிவு அமெரிக்க குடும்பங்களுக்கு விலையை அதிகரிக்கும் என்று கூறினார்.

“எங்களது எல்லைப் பிரச்னைகள் மற்றும் ஃபென்டனில் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு அதிபர் தீர்வு காண்பது சரியானதுதான், ஆனால் இந்தப் பிரச்னைகளுக்கு வரிகள் தீர்வாகாது” எனத் தெரிவித்துள்ளார்.

“வரிகள், பொருட்களின் விலையை அதிகரித்து, அமெரிக்க குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் விநியோகச் சங்கிலியை சீர்குலைக்கும். இந்த நடவடிக்கையினால் நாட்டிற்கும் வணிகத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளை, எங்கள் வர்த்தக சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து நாங்கள் விவாதிப்போம். இதனால் அமெரிக்க மக்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சேதத்தை சமாளிக்க அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். “என்று ஜான் மர்பி குறிப்பிட்டுள்ளார்.

கனடாவுக்கு 25 சதவீத வரி விதித்தாலும், கனடாவில் இருந்து வரும் எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றுக்கு 10 சதவீத வரி விதித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கனடா தனது 75 சதவீத பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது.

டிரம்பின் உத்தி

டிரம்பின் இந்த முடிவால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில், டிரம்ப் வரிகளிலும் சில குளறுபடிகளைச் செய்துள்ளார்.

கனடாவுக்கு 25 சதவீத வரி விதித்தாலும், கனடாவில் இருந்து வரும் எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றுக்கு 10 சதவீத வரி விதித்துள்ளனர்.

இந்த முடிவு குறித்தும், பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது குறித்தும் டிரம்ப் பரிசீலித்து வருவதாக நம்பப்படுகிறது.

டிரம்ப், எரிசக்தி மீது 10 சதவீத வரி விதிப்பதன் மூலம், எரிவாயு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைவாக வைத்திருக்க விரும்புவதாகக் காட்டுகிறது. இதனால் சிக்கல்கள் குறையும்.

மறுபுறம், கனடாவில் இருந்து 800 டாலருக்கும் குறைவான மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்வதற்கு, சுங்க வரி விதித்துள்ளார் டிரம்ப்.

ஆனால், இதற்கு முன்பு, அதே மதிப்புடைய பொருட்கள் சுங்க வரியின்றி அமெரிக்காவிற்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் விதித்துள்ள வரிகள் கனடா மீது சுமத்தப்படவில்லை, ஆனால் கனடாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் அமெரிக்க நுகர்வோர் மற்றும் வணிக நிறுவனங்கள் தான் அந்த வரிகளைச் செலுத்துவார்கள் என்று கனடாவின் பீபில்ஸ் பொலிடிகல் பவர் கட்சியின் தலைவரான மாக்ஸிம் பெர்னியர் பதிவிட்டுள்ளார்.

மேலும், “அமெரிக்க மக்கள் எங்கள் தயாரிப்புகளை வாங்க வேண்டும் அல்லது வர்த்தகத்தைக் கைவிட வேண்டும். ஏனெனில் அவர்கள்தான் முதலில் பாதிக்கப்படுவார்கள். ஒப்பந்தங்கள் மற்றும் விற்பனையில் ஏற்படும் பாதிப்பைக் கண்டு, கனடா நாட்டு ஏற்றுமதியாளர்களும் இதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அதனால் அவர்களின் உற்பத்தியைக் குறைக்க வேண்டியிருக்கும். அதனைத் தொடர்ந்து, அதிக ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டியிருக்கும், அல்லது தங்களின் சந்தைப் பங்கைத் தக்கவைக்க அவற்றின் விலைகளை குறைக்க வேண்டும்” என்று விவரித்துள்ளார்.

பெர்னியர் தனது நீண்ட பதிவில், வர்த்தகப் போரை மோசமானது என்றும், அந்தப் போரில் கனடாவில் அமெரிக்காவை வெல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும், டிரம்புடன் மோதுவதற்குப் பதிலாக தனது பொருளாதாரத்தை வலுப்படுத்துமாறும் கனடாவை அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சீனாவுக்கு என்ன வகையான இழப்பு ஏற்படும்?

வல்லரசு நாடான அமெரிக்கா தற்போது சீனாவிடம் இருந்து வலுவான சவாலை எதிர்கொண்டு வருகின்றது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள சீனாவின் வர்த்தக அமைச்சகம், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

அதில், அமெரிக்காவின் ‘தவறான நடவடிக்கைக்கு’ எதிராக உலக வர்த்தக அமைப்பில் வழக்குத் தொடரப் போவதாகவும், ‘தனது உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க’ பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் சீனா கூறியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, டொனால்ட் டிரம்பின் வரி விதிக்கும் நடவடிக்கைகளை, ‘ஒரு கொடுமைப்படுத்தும் உத்தி’ என்று லாரன்ஸ் சம்மர்ஸ் கூறியுள்ளார்.

“கொடுமைப்படுத்துவதும் அச்சுறுத்துவதும் ஆடுகளத்திலோ அல்லது சர்வதேச அரங்கிலோ வெற்றிக்கு வழிவகுக்காது. ஜின்பிங்கிற்கு எதிரானது என்று நினைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையானது, உண்மையில் அவருக்கு பரிசாகக் கிடைத்துள்ள உத்தியாகும்” என்று அவர் அதில் பகிர்ந்துள்ளார்.

“பணவீக்கம், எண்ணெய், உணவு மற்றும் கார்களின் விலைகளை அதிகரிக்கச் செய்யும். பின்னர் அதனால் அமெரிக்காவின் மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும்” என விவரித்துள்ளார் லாரன்ஸ் சம்மர்ஸ்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.