வெளிநாட்டுப் பெண்ணின் உயிரிழப்பு ; விஷ வாயு காரணம் என சந்தேகம் ! on Sunday, February 02, 2025
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் திடீரென சுகயீனமுற்று மர்மமான முறையில் உயிரிழந்தார்.
விஷ வாயுவை சுவாசித்ததே மரணத்திற்கான காரணம் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது.
கொள்ளுப்பிட்டி, முஹன்திரம் வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் 30 வயதுடைய ஜேர்மன் நாட்டு ஆணொருவரும், 27 வயதுடைய ஜேர்மன் பெண் ஒருவர் மற்றும் 24 வயதுடைய இங்கிலாந்து நாட்டு பெண் ஒருவரும் தங்கியிருந்தனர்.
அதற்கமைய குறித்த மூவருக்கும் நேற்று (01) திடீரென வாந்தி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து, ஜேர்மன் தம்பதியினர் நேற்று (01) காலை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை, நேற்று மாலை 7.30 மணியளவில், 24 வயதான இங்கிலாந்துப் பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததால், அம்பியூலன்ஸ் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜேர்மன் தம்பதியினரும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி 30 ஆம் திகதி, குறித்த வௌிநாட்டு பிரஜைகள் மூவரும் தங்கியிருந்த அறையில், 3 தினங்களுக்கு முன்னதாக மூட்டைப்பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் Phosphine என்ற வாயுவைப் பயன்படுத்தி புகைபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பெண் விஷ வாயுவால் உயிரிழந்திருப்பாரா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த 24 வயதுடைய இங்கிலாந்து பெண்ணின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணைக்காக அரச தடயவியல் மற்றும் தடயவியல் மருத்துவ அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, குறித்த விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டினர் குழு ஒன்று அங்கிருந்து வெளியேறுவதைக் காண முடிந்தது.