வருமான வரி: பட்ஜெட்டில் அறிவித்த மாற்றங்கள் மூலம் யார் பயனடைவார்கள்?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், வருமான வரி தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
சுமார் 75 நிமிடங்கள் வரை நீடித்த பட்ஜெட் உரையின் கடைசி நேரத்தில் தான் வருமான வரி தொடர்பான இந்த அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஆளுங்கட்சி எம்.பிக்கள் புன்னகையுடன் மேசையை தட்டி வரவேற்றனர். இந்த அறிவிப்பிலிருந்து நடுத்தர குடும்பத்தினர் பயனடைவார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதன்படி, புதிய வருமான வரி முறையில் (New Tax Regime), ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, ரூ.7 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு இந்த விலக்கு இருந்தது. இதற்கு முன்பு ரூ. 12.75 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரியிலிருந்து ரூ.75 ஆயிரம் என்பது நிலையான கழிவாக (Standard deduction) இருந்தது.
அதாவது, ரூ.75,000ஐ திரும்பி பெற்றுக்கொள்ள முடியும். தற்போது புதிய அறிவிப்பின் மூலம், ரூ.75,000 கழிவு என்பதே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்போது பேசிய நிர்மலா சீதாராமன், “ரூ.2.5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 2014இல் வருமான வரி விலக்கு அறிவிக்கப்பட்டது. இந்த வரம்பு 2019இல் ரூ.5 லட்சமாகவும் 2023இல் ரூ.7 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது” எனத் தெரிவித்தார்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு நடுத்தர மக்கள் பெரும் பங்கு அளிப்பதாகவும், அதைக் கருத்தில்கொண்டு வெவ்வேறு காலகட்டங்களில் அவர்களின் வருமான வரி சுமை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தனது உரையில் தெரிவித்தார்.
முந்தைய நடைமுறை என்ன?
கடந்த 2024 பட்ஜெட்டில், ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
அதேநேரம், ஆண்டு வருமானம் ரூ.3 முதல் 7 லட்சம் வரை 5% வரி விதிக்கப்பட்டது. இருப்பினும், வருமான வரி தாக்கல் செய்து, அந்தத் தொகையை திரும்பப் பெற முடியும்.
அதேநேரம், ரூ.7 முதல் 10 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10% வரை வரி விதிக்கப்பட்டது. ரூ. 10 முதல் 12 லட்சம் வரை பெறுபவர்களுக்கு 15% வரி விதிக்கப்பட்டது. அதற்கு மேல், ரூ.12-15 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 20% வருமான வரி விதிக்கப்பட்டது.
ரூ.15 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 30% வருமான வரி விதிக்கப்பட்டது.
சாமானியர்கள் எப்படிப் பயனடைவர்?
மத்திய அரசு அறிவித்துள்ள வருமான வரி விலக்கு உச்சவரம்பில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளதாகக் கூறுகிறார் வருமான வரி ஆலோசகர் கார்த்திகேயன்.
அவரது கூற்றுப்படி, 12 லட்சம் வரையில் வருமான வரி இல்லை என்றால், வரியே பிடிக்க மாட்டார்கள் என்று அர்த்தம் அல்ல. வருமான வரியைத் தாக்கல் செய்யும்போதுதான், 12 லட்சத்தில் பிடித்தம் செய்த வரிப் பணம் திரும்பக் (Refund) கிடைக்கும்.
எனவே, வருமான வரியைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ளக் கூடாது. அவ்வாறு தாக்கல் செய்யாவிட்டால் நான்கு லட்சத்துக்கு மேல் 5 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படும் என்கிறார் அவர்.
மத்திய அரசின் இந்த உத்தரவை நடுத்தர மக்களுக்கான நல்ல விஷயமாகப் பார்ப்பதாகக் கூறும் அவர், இதில் கவனிக்க வேண்டிய விஷயமும் உள்ளது என்கிறார்.
“பழைய வருமான வரித் திட்டத்தில் சுகாதார காப்பீடு, டெர்ம் காப்பீடு, மியூச்சுவல் பண்ட் ஆகியவற்றில் நடுத்தர மக்கள் முதலீடு செய்தனர். பழைய வருமான வரித் திட்டத்தில் இதற்கென 80 சி, 80 டி என வரிவிலக்கு என்பது முக்கிய அம்சமாக இருந்தது. இதனால் காப்பீடுகளில் முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
ஆனால், 12 லட்சம் வரை வருமான வரி இல்லை எனும்போது புதிய வருமான வரித் திட்டத்தில் எந்தவித முதலீட்டு ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.”
அந்த வகையில், காப்பீட்டில் பணத்தை முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும் எனக் கூறும் அவர், “காப்பீட்டில் முதலீடு செய்யும்போது, ஒரு குடும்பத் தலைவர் இறக்கும்போது மிகப்பெரிய தொகை கிடைக்கிறது. புதிய வருமான வரித் திட்டத்தால், முறையான சேமிப்புப் பழக்கமோ, காப்பீடு பழக்கமோ இல்லாமல் போய்விடும்” என்று கூறினார்.
மற்றபடி, நடுத்தர குடும்பங்களுக்கு வருமான வரியை மிச்சப்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்த அறிவிப்பு உள்ளதாகக் கூறுகிறார் கார்த்திகேயன்.
சந்தையில் வாங்கும் திறன் கூடுமா?
பொருளாதார ஆலோசகர் ராஜேஷ் இதுகுறித்துப் பேசும்போது, “ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்று வந்தவர்கள், 80 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி கட்டி வந்தனர். தற்போது விலக்கு அறிவிக்கப்பட்டுவிட்டதால், மாதம் ஆறாயிரம் ரூபாய் வரை மிச்சம் ஆகிறது,” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “இப்படியொரு கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தது. இதன் விளைவாக சந்தையில் பெரியளவில் வியாபாரம் இல்லாமல் போனதுதான் காரணம். மக்களிடம் வாங்குவதற்கான பணம் இல்லை. இதனால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
வியாபாரம் நடக்காவிட்டால் அரசுக்கு வரி வருவாய் வராது. பொருளாதாரம் வீழ்ச்சியடையும். இதைச் சரிசெய்வதற்கான உத்தியாக இந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர். 12 லட்சம் வரை வருமான வரி விலக்கு என்ற அறிவிப்பின் மூலம் இந்தப் பணம், சந்தைக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்றார்.
வருமான வரி விலக்கின் மூலம் அரசுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றாலும், இந்தப் பணம் அப்படியே சந்தைக்குச் செல்லும் என்கிறார் ரஜேஷ்.
அதுகுறித்துப் பேசியபோது, “வாகனம் வாங்குவது, பொருட்களை வாங்குவது என மக்கள் முதலீடு செய்யும்போது, இதன் வாயிலாக 15 சதவீத ரூபாய் ஜிஎஸ்டியாக செல்லும். அதுதவிர, நிறுவனங்களின் வருவாயில் 25 சதவீதம் வரையிலான வருவாய் அரசுக்குச் செல்லும். எனவே, சுமார் 40 சதவீத தொகை பல்வேறு வரிகளின் மூலமாக மத்திய அரசுக்கு வந்து சேரும்,” என்று விளக்கினார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு