கர்நாடகாவில் குணப்படுத்த முடியாத நோயாளிகள் கண்ணியத்துடன் இறக்க அனுமதி – முக்கிய செய்திகள்
குணப்படுத்த முடியாத நிலையில், உயிர்காக்கும் சிகிச்சையில் உள்ள நோயாளிகள் ‘கண்ணியத்துடன் இறப்பதற்கான’ உரிமையை அனுமதிக்கும் வகையில், கர்நாடக அரசு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே, 2023இல் இத்தகைய நோயாளிகளுக்கு உயிர்காக்கும் சிகிச்சையை நிறுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து கர்நாடக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக, அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டம், 1994இன் கீழ் உரிய அதிகாரம் பெற்றவர்களால் ஒப்புதல் பெறப்பட்ட, மாவட்ட சுகாதார அதிகாரியால் பரிந்துரைக்கப்பட்ட நரம்பியல் வல்லுநர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அல்லது மயக்கவியல் நிபுணர்கள் இந்த இறப்புகளுக்கு முன்னதாகச் சான்றளிக்க வேண்டும் என, கர்நாடக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக” அச்செய்தி தெரிவிக்கிறது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி முதல் நிலையில் மருத்துவமனை அளவிலும், இரண்டாம் நிலையில் மாவட்ட அளவிலும் இந்த இறப்புகள் கண்காணிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இதேபோன்ற உத்தரவுகளை, கேரளா, கோவா, மகாராஷ்டிரா ஆகியவையும் இயற்றியுள்ளதாக,” மருத்துவர் ரூப் குர்சஹானி என்பவர் கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.
அந்தச் செய்தியின்படி, இது மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் குடும்பங்களுக்குப் பயனளிக்கும் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறியுள்ளார்.
மேலும், “இதை கருணைக் கொலையுடன் இணைத்து தவறாக புரிந்துகொள்ளக் கூடாது என்றும், உயிர்காக்கும் சிகிச்சையில் உள்ளவர்களுக்கும், சிகிச்சையால் எவ்வித பயனும் இல்லாமல், குணப்படுத்த முடியாதவர்களுக்கும் மட்டுமே இது பொருந்தும் என அவர் கூறியுள்ளார்” என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் குறித்த சோனியா காந்தி பேசுக்குக் கண்டனம்
நாடாளுமன்ற உரையின்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ சோர்வடைந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். அதற்கு பிரதமர் மோதி கண்டனம் தெரிவித்ததாக, தினத்தந்தி நாளிதழ் செய்தி கூறுகிறது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றினார். அதற்குப் பிறகு, சோனியா காந்தியிடம் குடியரசுத் தலைவர் உரை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர், “குடியரசுத் தலைவர் உரையின் இறுதிப் பகுதியை வாசிக்கும்போது மிகவும் சோர்வடைந்துவிட்டார். அவரால் பேச முடியவில்லை, பாவம்” எனக் கூறினார்.
இதற்கு, குஜராத் மாநிலத்தின் துவாரகா நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோதி சோனியாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
“காங்கிரஸ் கட்சியினர் தங்களை நாட்டின் எஜமானர்கள் என்று நினைக்கின்றனர். காங்கிரஸ் அரச குடும்பத்தின் ஆணவம் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரை அவர் இழிவுபடுத்தியுள்ளார். இது நாட்டின் 10 கோடி பழங்குடி சகோதர, சகோதரிகளுக்கு அவமானம்” என்று கூறினார்.
மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவும் சோனியா காந்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “குடியரசுத் தலைவர் இவ்வளவு நிண்ட உரையைப் படித்து சோர்வடைந்திருப்பார், பாவம் என்றுதான் சோனியா காந்தி கூறினார். ஊடகங்கள் அதைத் திரித்து வெளியிடுகின்றன,” என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “குடியரசுத் தலைவர் எந்த நிலையிலும் சோர்வடையவில்லை. விளிம்புநிலை மக்களுக்காக, பெண்களுக்காக, விவசாயிகளுக்காகப் பேசும்போது சோர்வு ஏற்படாது என்பதை குடியரசுத் தலைவர் உறுதியாக நம்புகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதார் விவரங்களை தனியார் பயன்படுத்த வழிவகுக்கும் சட்ட திருத்தம்
ஆதார் விவரங்களை தனியார் நிறுவனங்களும் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், ஆதார் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்திப்படி, இதுதொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ஆதார் சட்டம் 2016இன் கீழ் சிறந்த ஆளுகைக்கான ஆதார் விவரங்கள் சரிபார்ப்பு விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள் வழங்கும் இணையவழி வர்த்தகம், பயணம், சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் தடையின்றி சுமூகமாகப் பெற இந்தத் திருத்தம் உதவும் என்று அந்த அறிக்கை கூறுவதாக” தினமணி செய்தி கூறுகிறது.
மேலும், “ஆதார் விவரங்களைப் பயன்படுத்த விரும்பும் தனியார் நிறுவனங்கள், அதற்கான தேவை குறித்த விவரங்களுடன் மத்திய அல்லது மாநில அரசுகளின் சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
அந்த விண்ணப்பங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆராய்ந்து அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், அதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும்” என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடல், உயர்நீதிமன்ற உத்தரவின்படி நேற்று தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்கப்பட்டதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்திப்படி, “புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கனிமவளக் கொள்ளைக்கு எதிராகச் செயல்பட்ட வெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி, ஜனவரி 17ஆம் தேதி லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டார். மறுநாள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக கல் குவாரியின் உரிமையாளர்கள் ராசு, ராமையா உள்பட 5 பேரை திருமயம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.”
இந்நிலையில், ஜகபர் அலியின் உடல், முறையாக பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும், விபத்துk காயம் ஏற்பட்டதை உறுதி செய்யும் வகையில் எக்ஸ்ரே எடுக்கப்படவில்லை என்பதால் மீண்டும் உடலைt தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஜகபர் அலியின் மனைவி மரியம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்ததாக இந்து தமிழ் செய்தி கூறுகிறது.
“இந்த வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, வெங்களூரில் அடக்கம் செய்யப்பட்ட ஜகபர் அலியின் உடல் திருமயம் வட்டாட்சியர் ராமசாமி முன்னிலையில் நேற்று பிற்பகல் தோண்டி எடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மதன்ராஜ், நெடுங்கிள்ளி ஆகியோர் தலைமையான மருத்துவக் குழுவினர் ஜகபர் அலியின் உடலின் பல்வேறு இடங்களில் எக்ஸ்ரே எடுத்தனர். அப்போது, சிபிசிஐடி டிஎஸ்பி இளங்கோவன் ஜென்னிங்ஸ், ஆய்வாளர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சம்பவ இடத்தை யாரும் பார்க்க முடியாத வகையில் அடைக்கப்பட்டு இருந்தது. காவல்துறை சார்பில் மட்டுமே வீடியோ, புகைப்படம் எடுக்கப்பட்டது. வேறு யாரும் எடுக்கத் தடை விதிக்கப்பட்டது,” என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் அரிசி தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தல்
இந்தப் புதிய ஆண்டில் அனுஷ்டானங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதால் அரிசித் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நுகர்வோருக்கு மலிவு விலையில் அரிசி வழங்கும் வேலைத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக, வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இதைத் தெரிவித்த அவர், “தற்போது ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டால் மக்கள் அசௌகரியமடைந்துள்ளனர். புதிய ஆண்டின் காலப்பகுதியில் அனுஷ்டானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதால் அரிசித் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நுகர்வோருக்கு மலிவு விலையில் அரிசி வழங்கும் வேலைத் திட்டத்தை வகுக்க வேண்டும்” என்று கூறியுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
அதோடு, நாட்டு மக்கள் அரிசியின்றி இருக்கும் தருணத்தில், தமது விளைபொருட்களுக்கு நிலையான விலை கிடைக்காததால் விவசாயிகள் மேலுமொரு வகையில் நிர்க்கதிக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், “அரசாங்கம் இதுவரை எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. வாய்ப் பேச்சோடு நிற்கின்றனர். நடவடிக்கைகள் ஏதும் இல்லை. ஒரு பக்கம் விவசாயிகளைப் பாதுகாத்துக் கொண்டு மறுபக்கம் நுகர்வோரையும் பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை வெகுவாக எழுந்துள்ளது,” என்று சஜித் பிரேமதாச கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு