பிரபல நிறுவனமான நெஸ்ட்லே வாட்டர்ஸ் நிறுவனம், 92 நீச்சல் குளம் அளவுக்கு குப்பைகளை கொட்டியதாக பிரான்சில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்யும் நெஸ்ட்லே நிறுவனத்தின் மீது சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு முதல், 2024ஆம் ஆண்டுவரை, பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள், கண்ணாடி போத்தல்கள், பிளாஸ்டிக் போத்தல் மூடிகள் என எக்கச்சக்கமான குப்பையை வடகிழக்கு பிரான்சிலுள்ள பல இடங்களில் கொட்டியுள்ளது நெஸ்ட்லே வாட்டர்ஸ் நிறுவனம்.
தோராயமாக, ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சல் போட்டிகள் நடத்த பயன்படுத்தப்படும் குளங்களைப் போல 92 நீச்சல் குளங்கள் கட்டப்பட எவ்வளவு இடம் தேவையோ அவ்வளவு இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.
இந்த குப்பைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், நீர் நிலைகள் மற்றும் நிலத்தடி நீரில் மைக்ரோபிளாஸ்டிக் என்னும் நுண்துகள்கள் கலக்கும் அபாயமும் உள்ளதால் நெஸ்ட்லே நிறுவனம் அது தொடர்பான ஒரு வழக்கையும் எதிர்கொண்டுள்ளது.