by sakana1

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில், வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று (01) ஒய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் நீதவானாக 9 ஆண்டுகள், வவுனியாவில் மேல் நீதிமன்ற நீதிபதியாக 3 ஆண்டுகள் கடமை புரிந்துள்ளேன்.

திருகோணமலையில் 200- 2010 இல் மேல் நீதமன்ற ஆணையாளராகவும், மீண்டும் 2012 – 2014இல் திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராகவும், 2018-2022 மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் 8 ஆண்டுகள் திருகோணமலையில் கடமை புரிந்துள்ளேன்.

கல்முனையில் ஒன்றரை ஆண்டுகள் மாவட்ட நீதிபதியாகவும், ஒன்றரை ஆண்டுகள் மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் என 3 ஆண்டுகள் கல்முனையில் கடமையாற்றியுள்ளேன்.

நான் பிறந்த மண் யாழ்ப்பாணத்தில்  2015-2018 வரை மூன்றரை ஆண்டுகள் மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றியுள்ளேன்.

மட்டக்களப்பில் சிவில் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஒராண்டு கடமை புரிந்துள்ளேன்.

எனது முதல் நியமனம் வவுனியா நீதவான் நீதிமன்றம். வவுனியாவில் மேல் நீதிமன்றம் அமைப்பதற்கான செயற்பாட்டில் ஈடுபட நீதிச்சேவை ஆணைக்குழுவால் 40 நாட்கள் நியமிக்கபட்டு, அதன் பின் மன்னார் மாவட்ட நிரந்த நீதவானாக சென்று 1997-2000 ஆண்டு வரை 3 ஆண்டுகள் கடமையாற்றி மீண்டும் வவுனியாவிற்கு  நீதவானாக வந்தேன்.

தீர்ப்புக்கள் பற்றி நான் பேச விரும்பவில்லை. அது என்னுடைய கடமை. இருப்பினும் வருகின்ற 05.02.2025 இல் எனது 28 ஆண்டுகள் நீதிச்சேவை சேவைகள் முடிவுறுத்தப்படவுள்ளது.

முதல் நிலை நீதிமன்ற நீதிபதியாக எனது நீதிச் சேவை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால், மேல் நீதிமன்ற நீதிபதிகள் 90 பேர் இருக்கிறார்கள். அதில் முதலாவது இலக்கத்தில் நான் இருக்கின்றேன். 12.12.2024 இல் உயர் நீதிமன்ற தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது.

அனைத்து தடைகளும் விலக்கப்பட்டன. 12.01.2025 இல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து 4 நீதிபதிகள் உயர் நீதிமன்றத்திற்காக பதிவி உயர்தப்பட்டார்கள். மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் 4 வெற்றிடங்கள் உள்ளன.

12.01.2025 இல் இருந்து அதற்கு தகமையானவன் நான். நான் தகமையாலும், இலக்கம் 1 இன்றில் இருப்பதாலும் நான் தகுதியானவன்.

எனது பிறந்த தினம் 20.01 ஆகும். மேல் நீதிமன்றம் 61 வயதை அடையும் போது முதல்நிலை நீதின்றம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

காலத்தின் சோதனை, முடிவு இறுதிப்படுத்தப்படவில்லை எனவும் கூறுகிறார்கள். இறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறுகிறார்கள்.
28 ஆண்டுகள் கடமை புரிந்தேன். புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுகிறது.

வேதனையா, சோதனையா, சாதனையா எதுவும் புரியவில்லை. அனைத்தும் நல்லதிற்கே என மனதை திருப்திப்படுத்தக் கூட முடியவில்லை.

ஆனால் இன்று பெருவிழாவை வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் ஒழுங்கமைத்து வடக்கு – கிழக்கு நீதிபதிகள், சட்டத்தரணிகள் இங்கு வருகை தந்ததையிட்டு உங்கள் நன்றி உணர்வை மதிக்கிறேன்.

நீங்கள் அருகில் நிற்கும் போது எனக்கு புத்துணர்வு வருகிறது. இன்னும் சாதிக்க வேண்டும். சாதனைகள் புரிய வேண்டு என்ற உணர்வு உள்ளுணர்வாக கிளம்புகின்றது.

இருப்பினும், சந்தோசமாக போவதற்கு நான் தயார். ஆனால் 2024 மே மாதம் 13 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிபதியாக நான் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

வழக்குகள், தடையுத்தரவுகள் காரணமாக பின்னுக்கு சென்று வீடு செல்வதற்கு 8 நாட்கள் இருக்கின்ற நிலையில், நமது தலைவர் சீனா புறப்பட்டார். ஞாயிறுக்கிழமை உயர் நீதிமன்ற சத்திய பிரமாணம் இடம்பெறுகிறது.

12.01.2025 ஞாயிற்றுக்கிழமை. 13 ஆம் திகதி திங்கள் போயா. 14 ஆம் திகதி செவ்வாய் பொங்கல். திங்கள் இரவு ஜனாதிபதி சீனா பயணம்.

வெள்ளிக்கிழமை இரவு சீனாவில் இருந்து திரும்பி வந்தார். 18,19 விடுமுறை நாள். 19.01.2025 அன்று எனது இறுதி நாள்.

காலதாமதத்திற்கு நான் காரணமல்ல. காலதாமதம் என்னை ஓய்வு எடுக்க அனுப்பியது. காலதாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்று நான் பல இடங்களில் பேசினேன்.

அந்த நீதி என் மீதும் தொடுக்கப்பட்டுள்ளது. எதையும் ஏற்றும் கொள்ளும் மனபாவம் வர வேண்டும்.

எனக்கு என்னை பற்றி பெரிதாக கவலையில்லை. எனது இரு குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்கள், அவர்கள் வேதனைப்படுவது தான் கவலை.

வீடு வேதனைப்படுகிறது. கண்முன்னே அனைத்தும் நடைபெறுவதை அனைவரும் பார்க்கிறார்கள். நீதி கேட்டு எங்கும் செல்ல முடியாத நிலைமை.

நீதிவான், மாவட்ட நீதிபதி, மேல் நீதிமன்ற நீதிபதி தலைவணங்காத ஒரு தொழில். அதற்கு மேல் செல்ல வேண்டுமானால் தலைகளும் ஒரு கணம் வணங்கும். அவைகளால் தான் இலக்குகள் தீர்மானிக்கப்படுகின்றன.

இதுவரை என்னுடன் ஒரு பாராளுன்ற உறுர்பினர்களோ, அமைச்சரோ கதைத்ததில்லை. இப்பொழுதும் அனைவரும் எனக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கிறார்கள் இது தான் நிலமை.

எனவே, இந்த நிகழ்வுக்கு வருகை தந்த நீதிபதிகள், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களை பிரதிநிதித்துவப் படுத்தி  கலந்து கொண்ட அனைத்து சட்டத்தரணிகளும் எனது நன்றிகனை தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்