by sakana1

கொள்கலன்களை விடுவிக்க அனுமதி வழங்கியது யார்? கொள்கலன் பரிசோதனை நடவடிக்கையில்  தாமதம் காரணமாக ஏற்பட்ட நெரிசலுக்கு மத்தியில் தவறான செயல்பாடொன்று இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி, இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் கட்டாயம் பரிசீலனை செய்யப்பட வேண்டியவை என குறிக்கப்பட்டிருக்கும் 80% கொள்கலன்கள் கூட அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் இடைவிடாது விடுவிக்கப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மைய நாட்களாக எழுந்துள்ள துறைமுக கொள்கலன் நெரிசல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று (31) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில்,

“இந்த விடுவிப்புகள் குறித்து சுங்கச் தொழிற்சங்கங்கள் கூட தற்போது கேள்வி எழுப்பி வருகின்றன.

“இதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இவ்வாறு விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் ஆயுதங்கள், தங்கம், போதைப்பொருள் மற்றும் தரக்குறைவான மருந்துகள் இல்லை என அரசாங்கத்தால் எவ்வாறு கூற முடியும்?

“இது பிரச்சினைக்குரிய விடயம். இந்த செயல்முறை நாட்டுக்கு தீங்கு விளைவித்துள்ளது. வரி வருவாயில் இழப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத பொருட்கள் நுகர்வோருக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஸ்கேன் கூட செய்யாது அரசாங்கம் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்.

“அரசின் மத்திய நரம்பு மண்டலம் செயலிழந்துபோயுள்ளது. இது குறித்து அரசுக்கு எந்த புரிதலும் இல்லை. இந்த விவகாரத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பொறுப்பான பதில் தேவை. இந்த கொள்கலன்களை விடுவிக்க உத்தரவிட்டவர்கள் குறித்து அரசாங்கம் தகவல்களை வெளியிட வேண்டும்” என்றார்

தொடர்புடைய செய்திகள்