குஜராத் கலவரத்தில் எரிக்கப்பட்ட குடியிருப்பு: நீண்ட காலம் நீதிக்காக போராடிய பெண் மரணம் – யார் அவர்?
குஜராத் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி சனிக்கிழமை (பிப்ரவரி 1) அன்று உயிரிழந்தார். இந்த தகவலை அவரது மகன் தன்வீர், உறுதிப்படுத்தினார்.
“என் சகோதரி நிஷ்ரினுடன் வசிப்பதற்காக எனது தாய் சூரத்திலிருந்து அகமதாபாத்திற்கு சென்றார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட நோய்களினால் அவர் அவதிப்பட்டு வந்தார். சனிக்கிழமை காலை அவரது உடல்நிலை மோசமடைந்தது. அதன் பிறகு வீட்டிற்கு வந்து பார்த்த மருத்துவர் அவர் காலை 11.30 மணி அளவில் இறந்துவிட்டதாக தெரிவித்தார்”, என்று தன்வீர் கூறினார்.
ஜாகியா ஜாஃப்ரியின் இறுதிச் சடங்கு அவரது குடும்பத்தினர் முன்னிலையில் அகமதாபாத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
யார் இந்த ஜாகியா ஜாஃப்ரி?
2002-ம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைக்கப்பட்டதை அடுத்து குஜராத்தில் மதக் கலவரம் வெடித்தது.
இந்த நேரத்தில், அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் சொசைட்டி என்று அழைக்கப்பட்ட அதிக எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் வாழ்ந்து வந்த பகுதியில் நடந்த கலவரத்தில் ஜாகியா ஜாஃப்ரியும் அவரது குடும்பத்தினரும் சிக்கினர்.
இந்த படுகொலையில், ஜாகியாவின் கணவர் எஹ்சான் ஜாஃப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறை சம்பவத்தில் ஜாகியா உயிர் பிழைத்தார். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரது கணவர் அவரை வீட்டிலிருந்து மாடிக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார். இதனால் இந்த படுகொலையில் உயிர் தப்பிய சிலரில் இவரும் ஒருவர் ஆனார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு வசதியான குடும்பத்தில் ஜாகியா பிறந்தார். பின்னர் அவர் புர்ஹான்பூர் நகரை சேர்ந்த வழக்கறிஞரான எஹ்சான் ஜாஃப்ரியை மணந்தார்.
மத்திய பிரதேசத்தில் இருந்து குஜராத்துக்கு வந்த பிறகு ஜாகியாவும், அவரது குடும்பத்தினரும் சாமன்புரா என்னும் ஒரு கிராமத்தில் குடிசை ஒன்றில் நீண்ட காலம் வசித்து வந்தனர். ஆனால் 1969 கலவரத்தில் அவர்களது குடிசை அழிக்கப்பட்டது.
அந்த நேரத்தில் குல்பர்க் சொசைட்டி என்னும் பகுதி உருவாக்கப்பட்டது, இதனால் அவரது குடும்பம் குல்பர்க் சொசைட்டிக்கு இடம்பெயர்ந்தனர்.
குல்பர்க் சொசைட்டியில் என்ன நடந்தது?
2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று, ஒரு கும்பல் இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் குல்பர்க் சொசைட்டியைத் தாக்கினர். இந்த வன்முறையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சான் ஜாஃப்ரி உட்பட மொத்தம் 69 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க பல இஸ்லாமியர்கள் எஹ்சான் ஜாஃப்ரியின் வீட்டில் தஞ்சம் புகுந்தனர்.
ஆனால், குல்பர்க் சொசைட்டியை சுற்றி வளைத்து எல்லா பக்கங்களிலிருந்தும் அந்த கும்பல் தாக்கியது. இதில் பலர் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
அப்போது குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி மற்றும் பலரை, அவரது கணவர் எஹ்சான் ஜாஃப்ரி தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் யாரும் அவருக்கு உதவவில்லை என்றும் ஜாகியா ஜாஃப்ரி தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 2006 ஜூன் மாதம், அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி உட்பட 63 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய குஜராத் காவல்துறை தலைமை இயக்குநரிடம் ஜாகியா ஜாஃப்ரி மனு அளித்தார். இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க நரேந்திர மோதி உட்பட அனைவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
ஜாகியாவின் மனுவை மாநில காவல்துறையின் டிஜிபி நிராகரித்தார். இதையடுத்து இந்த விஷயத்தை சட்ட ரீதியாக தொடர்ந்த ஜாகியா, குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
2007-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றமும் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
குல்பர்க் சொசைட்டி வழக்கு – எப்போது என்ன நடந்தது?
- 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம், , ஜாகியா ஜாஃப்ரியும் ‘சிட்டிசென் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ்’ என்னும் ஒரு அரசு சாரா அமைப்பும் கூட்டாக உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
- இந்த வழக்கில் அமிகஸ் கியூரியாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் நியமிக்கப்பட்டார். அமிகஸ் கியூரி என்பது வழக்கு விசாரணையில் கூடுதல் தகவல்களை வழங்குவதன் மூலம் நீதிமன்றத்திற்கு உதவக்கூடிய ஒரு நபர் அல்லது அமைப்பு ஆகும்.
- கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், குஜராத் கலவரங்களை விசாரிக்க ஏற்கனவே அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
- 2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், விசாரணைக் குழு நரேந்திர மோதியை விசாரணைக்காக அழைத்தது.
- 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார், உச்ச நீதிமன்றம் ராஜு ராமச்சந்திரனை அமிகஸ் கியூரியாக நியமித்தது.
- 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ராஜு ராமச்சந்திரன் தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
- 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழு முன்வைத்த ஆதாரங்களுக்கும் அது எட்டிய முடிவுகளுக்கும் இடையே பொருத்தமின்மை இருப்பதாக கூறியது. இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
- 2012 ஆம் ஆண்டு மே மாதத்தில் உச்ச நீதிமன்றம் அமிகஸ் கியூரியை சிறப்பு புலனாய்வுக் குழுவின் சாட்சிகள் மற்றும் அதிகாரிகளை சந்திக்குமாறு கேட்டுக்கொண்டது.
- 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், மோதிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. மேலும் சிறப்பு புலனாய்வுக் குழு தனது அறிக்கையை கீழ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது.
- மோதியும் ஜாகியா ஜாஃப்ரியும் இந்த முடிவை தங்கள் வெற்றி என்று வர்ணித்தனர்.
- 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று, ஜாகியா ஜாஃப்ரி அதற்கு எதிராக ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
- 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், இந்த வழக்கில் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோதி மற்றும் பிற அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என்று பெருநகர நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது
- இதற்குப் பிறகு, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி அன்று ஜாகியா ஜாஃப்ரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
- ஜாஃப்ரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 2022 ஆம் ஆண்டு நிராகரித்த உச்சநீதிமன்றம், இந்த கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோதி உட்பட 60க்கும் மேற்பட்டோர் குற்றமற்றவர்கள் என கூறியது
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.