‘மருத்துவ உயர் கல்வியில் இருப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீடு கூடாது’: உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழ்நாட்டை எப்படி பாதிக்கும்?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
மருத்துவ முதுகலை பட்டப்படிப்புகளில் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கதல்ல என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தமிழக மருத்துவ உயர்கல்விப் படிப்பு ஒதுக்கீடுகளை எப்படி பாதிக்கும்?
மருத்துவ மேற்படிப்புகளில் இருப்பிடத்தை (Domicile/residence based) அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீடு செல்லாது என ஜனவரி 29ஆம் தேதி இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ள சமத்துவத்திற்கு எதிரானது எனவும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
நீதிபதிகள் ஹ்ரிஷிகேஷ் ராய், ஷுதான்ஷு தூலியா, எஸ்.வி.என். பாட்டி அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
சண்டீகரில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒன்று இயங்கிவருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் உள்ள முதுநிலைப் படிப்புகளில் 64 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கென வழங்கப்பட்டன.
அந்தக் கல்லூரியைப் பொறுத்தவரை இந்த 64 இடங்கள் சண்டீகரில் வசிப்பவர்களுக்கோ (Domicile) அதே கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தவர்களுக்கோதான் வழங்கப்படும் முறை அமலில் உள்ளது. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கில் இம்மாதிரியான இடஒதுக்கீடு தவறானது என பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல் முறையீட்டில்தான் இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது என்ன?
“எம்.பி.பி.எஸ். படிப்புகளைப் பொறுத்தவரை அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், முதுகலை மருத்துவப் படிப்புகளில் அதுபோலச் செய்வதை ஏற்க முடியாது என்பது பல தீர்ப்புகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.”
“முதுகலைப் படிப்புகளில் தகுதி மட்டுமே மிக முக்கியமானது. இருப்பிடம் சார்ந்து இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதை ஏற்க முடியாது. ஏனெனில், இது குடியுரிமை மற்றும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் சமத்துவத்திற்கு எதிராக இருக்கிறது.” என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், ‘ஒரே நாட்டில் வெவ்வேறு விதமான சட்டங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகள் இருந்தால், அப்போது வசிப்பிடம் பற்றி பேசலாம். இந்தியாவில் நிலைமை அப்படியல்ல. இந்தியாவில் ஒரே வசிப்பிடம்தான் உள்ளது. அது இந்தியாதான்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய ரீதியான, மாகாண ரீதியான வசிப்பிடம் என்பது இந்திய சட்ட அமைப்பிற்கு முரணானது என்று கூறிய உச்ச நீதிமன்றம், “வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக இடங்களை மறுக்கும் இது போன்ற ஒரு இட ஒதுக்கீட்டை அனுமதித்தால், அது பல மாணவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும்.” என சுட்டிக்காட்டியுள்ளது.
“ஆகவே மாநிலத்திற்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் குறிப்பிட்ட அளவு இடங்களை அந்தக் கல்லூரியில் படித்தவர்களுக்கு வைத்துக்கொண்டு, மீதமுள்ள இடங்களை அகில இந்திய அளவிலான தகுதித் தேர்வின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யவேண்டும். அதன்படி, 64 இடங்களில் 32 இடங்களை அந்தக் கல்லூரியில் படிப்பவர்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம். ஆகவே, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லத்தக்கது.ஆனால், ஏற்கனவே இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் படிப்பவர்கள், படித்து முடித்தவர்களை இந்தத் தீர்ப்பு பாதிக்காது” என்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அமலில் உள்ள இட ஒதுக்கீடு
“தமிழ்நாட்டில் இதுபோன்ற இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக அது போன்ற இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் தொடர்வது கேள்விக்குறியாகக்கூடும். இந்தத் தீர்ப்பின் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் குறையும் அபாயம் இருக்கிறது” என்கிறார் அரசு அனைத்து மருத்துவர் சங்கத்தின் மாநிலத் தலைவரான டாக்டர் சி. சுந்தரேசன்.
தொடர்ந்து பேசிய அவர், “மருத்துவம் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரக்கூடியது. ஆனால், கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது என்பதால்தான் மத்திய அரசு தொடர்ந்து இதில் தலையிடுகிறது. மருத்துவக் கல்வி இடங்களை மாநில அரசுதான் செலவு செய்து உருவாக்குகிறது. அதற்கான கட்டமைப்பு, கருவிகள், மருந்துகளை அளிப்பதும் மாநில அரசுதான். அப்படியிருக்கும்போது அகில இந்திய ரீதியில் ஒதுக்கீடு என்பது எப்படிச் சரி?” என்று கேள்வி எழுப்புகிறார்.
“பல மாநிலங்கள் மருத்துவக் கட்டமைப்பை உருவாக்குவதில் பின்தங்கியிருக்கின்றன, அவர்களுக்குத் தர வேண்டும் என இதற்கு காரணம் சொல்லப்படுகிறது. ஆனால், அந்த மாநிலங்கள் எவ்வளவு காலத்திற்கு தங்களுக்கு என மருத்துவக் கட்டமைப்பை உருவாக்காமல் இருப்பார்கள் என்ற கேள்வியும் இருக்கிறது. இருந்தாலும் மத்திய ஒதுக்கீட்டிற்கு 50 சதவீத இடங்களைக் கொடுப்பதை ஏற்றுக்கொண்டுவிட்டோம்.” எனக் கூறுகிறார் டாக்டர் சி. சுந்தரேசன்.
மீதமுள்ள 50 சதவீத இடத்தை தன் விருப்பப்படி நிரப்பும் உரிமை மாநிலத்திற்குத்தான் இருக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டும் அவர், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நிறைய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை உருவாக்க ஆரம்பித்துவிட்டோம். ஆகவே அதில் பணியாற்ற சூப்பர் ஸ்பெஷலிஸ்ட்களை உருவாக்க வேண்டிய தேவை உண்டு.” என்று கூறுகிறார்.
ஏற்கனவே பணியில் உள்ள மருத்துவர்களுக்கு அந்த இடங்களைக் கொடுத்தால்தான் நம்முடைய மருத்துவக் கட்டமைப்பில், அந்த மருத்துவர்களை ஓய்வுபெறும்வரை தக்க வைக்க முடியும் என்று கூறும் டாக்டர் சி. சுந்தரேசன், “தான் ஓய்வுபெறும்வரை, அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கிறேன் என்று ஒப்பந்தம் எழுதிக்கொடுத்து இந்த இடங்களை பெறுகிறார்கள். அது கூடாது என்றால் எப்படி?” என்கிறார்.
‘இது கூட்டாட்சித் தத்துவத்திற்கே எதிரானது’
‘மற்றொரு பக்கம், ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இத்தனை சிறப்பு மருத்துவர்கள் இருந்தால்தான் அந்த மருத்துவத்திற்கான சிறப்பு உயர்கல்வி இடங்களை உருவாக்க முடியும் என விதிகள் இருக்கின்றன’ என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் அவர்.
“இம்மாதிரி சூழலில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை அகில இந்திய ரீதியில் ஒதுக்கீடு செய்தால், அவர்கள் படித்துவிட்டு அவரவர் மாநிலத்திற்கோ தனியார் மருத்துவமனைகளுக்கோ போய்விடுவார்கள். இதனால், நம்முடைய மருத்துவமனையில் பணியாற்ற சூப்பர் ஸ்பெஷலிஸ்டுகள் இருக்க மாட்டார்கள்.
“ஆகவே, சுப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் குறைய ஆரம்பிக்கும். யார் செலவு செய்கிறார்களோ அவர்கள் எதையும் முடிவுசெய்ய முடியாது என்று சொல்வது சரியல்ல. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கே எதிரானது” எனக் கூறுகிறார் டாக்டர் சி. சுந்தரேசன்.
மற்றொரு முரண்பாடும் இந்தத் தீர்ப்பில் இருக்கிறது எனக்கூறும் அவர், “அந்தக் கல்லூரியிலேயே படித்த மாணவர்களுக்கு 50 சதவீத இடங்களைத் தரலாம் என்கிறார்கள். ஒரு பக்கம், மாநில இட ஒதுக்கீடு தரத்தின் அடிப்படையில் தர வேண்டும் எனக் கூறிவிட்டு, மற்றொரு பக்கம் அந்தக் கல்லூரியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று கூறுவது எப்படிச் சரியாக இருக்க முடியும்.” என கேள்வி எழுப்புகிறார்.
“மருத்துவத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு தேவை இருக்கும். எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான இடஒதுக்கீட்டு முறை என்பது நிச்சயம் சரியாக இருக்காது.” என்கிறார் டாக்டர் சி. சுந்தரேசன்.
தமிழக அரசு கூறுவது என்ன?
விரைவிலேயே இந்தத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரணியன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செயல்படுத்தப்பட்டால் மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதுடன், மாநிலத்தில் உள் ஒதுக்கீடுகளும் பாதிக்கப்படும். இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டில்தான் எம்டி, எம்எஸ், டிப்ளமோ போன்ற மருத்துவ பட்டமேற்படிப்புகளில் 2,294 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.”
“உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளில் 1200க்கும் மேற்பட்ட இடங்கள் பறிபோகும் அபாய நிலை உருவாகியிருக்கிறது. இந்த இடங்களில் இந்தியாவை சேர்ந்த எந்த ஒரு மாணவரும் சேரலாம் என்றால், தமிழ்நாடு உட்பட அந்தந்த மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படும். மிக விரைவில் இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்” எனக் கூறினார்.
தமிழ்நாட்டில் 2,294 மருத்துவ முதுகலை இடங்கள் உள்ளன. இதில் சுமார் 1200 இடங்கள் தமிழ்நாட்டு அரசின் நிரப்புதலுக்காக ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இந்த இடங்களில் 50 சதவீத இடங்கள் ஏற்கனவே அரசு மருத்துவமனையில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு