by wamdiness

வரி விதிப்பு விவகாரம்: ட்ரம்ப்பின் புதிய எச்சரிக்கையும், ட்ரூடோ ‘பதிலடி’ அறிவிப்பும் பாதிக்கப்பட்ட நாடுகளின் எதிர்ப்பு, பரந்த அளவிலான வர்த்தகப் போர் பற்றிய அச்சங்களுக்கு மத்தியில் மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அதிக அளவு வரி விதிக்கப்படும் என்பதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார். மேலும், இதற்கான காலக்கெடுவைத் தாமதப்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருள்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மெக்சிகோவும் கனடாவும் புலம்பெயர்வு மற்றும் ஃபெண்டனில் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நடவடிக்கைத் தொடரும் என்று தெரிவித்திருந்தார். பேச்சுவார்த்தைகளுக்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று அதிபரிடம் கேட்கப்பட்ட போது, அந்த யோசனையை அவர் நிராகரித்தார். “இல்லை… இல்லை… தற்போது அதற்கு வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.

இதனிடையே, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லேவிட், “வரிவிதிப்பு காலக்கெடுவில் எந்த மாற்றமும் இல்லை. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பல வாரங்களுக்கு முன்பு அறிவித்த வரிவிதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று நான் உறுதிப்படுத்த முடியும். வரி விதிப்புகள் எவ்வாறு அமல்படுத்தப்படும் என்ற விவரங்கள் அடுத்த 24 மணி நேரத்தில் மக்களின் பார்வைக்கு கிடைக்கும்” என்று தெரிவித்தார். கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு கூடுதல் விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் விளக்கம் அளிக்கவில்லை.

பிப்ரவரி 1-ம் தேதி முதல் வரிவிதிப்பு அமல்படுத்தப்படும் என்ற காலக்கெடுவுக்கு இன்னும் சில மணிநேரங்களே இருக்கும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “முன்மொழியப்பட்ட வரி விதிப்பை அமெரிக்கா முன்னெடுக்குமானால் வலுவாகவும் உடனடியாகவும் பதிலடி கொடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர், “எல்லையின் இருபுறமும் உள்ள மக்களும் கனடா பொருள்களுக்கு அமெரிக்கா வரி விதிப்பதை விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

கனடா – அமெரிக்கா இடையேயான உறவுகள் குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்பு பேசிய ட்ரூடோ, “இந்த வரி விதிப்புகளைத் தடுக்க நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். ஆனால், அமெரிக்கா தனது முடிவினை முன்னெடுக்குமானால் நாங்கள் வலுவான, உடனடியான பதிலடி கொடுக்க தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.

கூடுதல் வரிகள்: இதனிடையே இந்த வரி விதிப்புகள் பேரத்துக்கான ஒரு கருவி என்ற கூற்றை ட்ரம்ப் மறுத்துள்ளார். மேலும், ஐரோப்பிய பொருள்கள், இரும்பு, அலுமினியம், தாமிரம், மருந்துகள் மற்றும் சிப்கள் ஆகியவற்றுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் குறிப்பாக அவர் சொன்னார். அவர் கூறுகையில், “இது பேரத்துக்கான கருவியில்லை. அந்த மூன்று நாடுகளுக்கும் எங்களுக்கும் மிகப் பெரிய (வர்த்தகம்) பற்றாக்குறை உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இது நாங்கள் செய்துகொண்டிருக்கும் ஒன்று. இதை நாங்கள் படிப்படியாக அதிகரிப்போமா, இது எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். ஆனால் இது அமெரிக்காவுக்கு அதிக வருவாயைக் கொண்டுவரும்.

இறுதியில் நாங்கள் சிப்-களுக்கும் வரி விதிக்க இருக்கிறோம். கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுக்கும் நாங்கள் வரி விதிக்க இருக்கிறோம். அதேபோல், இரும்பு, அலுமினியம் மற்றும் தாமிரத்துக்கும் வரிவிதிக்க இருக்கிறோம். தாமிரத்துக்கான வரி விதிப்புக்கு கூடுதல் காலம் எடுக்கும். ஆனாலும் அது சீக்கிரத்தில் நடக்கும். மேலும் அமெரிக்காவுக்கு மீண்டும் மருந்துக்கள் உற்பத்தியைக்கொண்டு வர ஒரு வரிச்சுவரை ஏற்படுத்தப் போகிறோம்” என்றார்.

இதனிடையே, இறக்குமதி பொருள்களுக்கான அதிக வரி விதிப்பு என்பது வெளிநாடுகளை பேச்சுவார்த்தைக்கு வர வைக்கும் அழுத்தமே. வரி விதிப்பு என்பது ட்ரம்ப்பின் சூதாட்டம் என்றும், இதனால் நுகர்வோர் பொருள்களுக்கான விலை உயரும்போது இந்த நடவடிக்கைத் திரும்பப் பெறப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்