முழுமையாக பரிசோதிக்கப்பட வேண்டும் என்று சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்கள் எவ்விதமான பரிசோதனைகளுமில்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு அந்த குற்றச்சாட்டு எம்மீது சுமத்தப்பட்டால் அதன் பொறுப்பை எம்மால் ஏற்க முடியாது.
குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நிறுவனங்கள் மற்றும் நபர்களே இந்த கொள்கலன்களை இறக்குமதி செய்துள்ளனர் என சுங்க தொழிற்சங்க சங்க கூட்டணியின் தலைவர் அமல் சஞ்ஜீவ தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள சுங்கத் திணைக்கள தொழிற்சங்க கூட்டணியின் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சுங்கத்தில் கொள்கலன்களை பரிசோதனை செய்யும் முறைமையில் கணினி தரவு கட்டமைப்பின் ஊடாக தெரிவு செய்யப்படும் 35 சதவீதமளவிலான கொள்கலன்கள் மாத்திரமே பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
மிகுதி 65 சதவீதமளவிலான கொள்கலன்கள் பரிசோதிக்கப்படாமல் விடுவிக்கப்படுகின்றன.
பரிசோதனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 300 இற்கும் அதிகமான கொள்கலன்கள் எவ்விதமான பரிசோதனைகளுமில்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளமை பிரச்சினைக்குரியதாகும்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் பெரும்பாலானவை அதி அவதானத்துக்குரியதாக கருதப்பட்டு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று சிவப்பு முத்திரை பதிக்கப்பட்டதாகும்.
சுங்கத்தின் உள்ளக பரிசோதனை அலகுக்கு இவ்விடயம் தொடர்பான அனைத்து தரவு கட்டமைப்பின் தகவல்களையும் வழங்கியுள்ளோம்.
முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறோம். சுங்கத் திணைக்களத்தால் ஏனைய தரப்புக்கும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக பரிசோதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்ட நிலையில் இருந்த கொள்கலன்கள் எவ்விதமான பரிசோதனைகளுமில்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதனால் ஏதேனும் பாதிப்பு சமூக கட்டமைப்பில் ஏற்பட்டு அந்த குற்றச்சாட்டு எம்மீது சுமத்தப்பட்டால் அதன் பொறுப்பை எம்மால் ஏற்க முடியாது.
ஆகவே இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஒரு தனிபநருக்கு 300 இற்கும் அதிகமான கொள்கலன்களை இறக்குமதி செய்ய முடியாது. பரிசோதனைகள் ஏதுமில்லாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் பெரும்பாலானவை பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு சொந்தமானது.
சுங்கத்தில் அவதானத்துக்குரிய பட்டியலில் குறித்த நிறுவனம் மற்றும் நபர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றார்.