வணிக பாதுகாப்புக்கு சோழன் அமைத்த நிழல்படை – ‘இராசகேசரி பெருவழி’ என்றால் என்ன?
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
கோவையில் காட்டுப் பகுதிக்குள் மறைந்திருக்கும் ஒரு கல்வெட்டு, முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் இருந்த ராசகேசரிப் பெருவழியையும், வணிகர்கள் மற்றும் மக்களுக்குப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டிருந்த சீருடையற்ற நிழல் படையையும் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கிறது. அது எந்தக் கல்வெட்டு?
கோவை மாவட்டத்தில் கோவைப் புதுார் என்ற மாநகர எல்லைப் பகுதிக்கு அருகிலேயே சில மலைப் பகுதிகள் இருக்கின்றன.
வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த காப்புக் காட்டுப் பகுதி, பாலக்காடு கணவாய்க்கு நேர் பாதையில் உள்ளது. அங்கு பாறைகள் சூழ்ந்த புதர்களுக்கு மத்தியில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. வட்டெழுத்துகளில் பொறிக்கப்பட்ட அந்தக் கல்வெட்டு, சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பிற்காலச் சோழ மன்னர்களின் வரிசையில் இரண்டாவது மன்னனாக இருந்த முதலாம் ஆதித்த சோழன் காலத்தைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு, இராஜகேசரிப் பெருவழி என்ற நெடுஞ்சாலையைப் பற்றிக் கூறுகிறது.
“இப்போது தொழில் மற்றும் வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் மேற்கு மண்டலப்பகுதி, அக்காலத்தில் இராசகேசரிப் பெருவழியின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. மேற்குக் கடற்கரைப் பகுதியையும் கிழக்குக் கடற்கரைப் பகுதியையும் இணைக்கின்ற பெருவழியாக இந்தப் பாதை இருந்துள்ளது. அந்த பெருவழியில், வணிகப் பண்டங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சோழமன்னனால் ஒரு நிழல்படை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்புப் பலகையாகத்தான் இந்த கல்வெட்டு காணப்படுகிறது” என்கிறார் யாக்கை மரபு அறக்கட்டளையின் செயலாளர் குமாரவேல் ராமசாமி.
சோழ மன்னரால் அமைக்கப்பட்ட நிழல் படை
கடந்த 1976ஆம் ஆண்டில் இந்த கல்வெட்டைப் பற்றிய தகவலறிந்து அதை நேரில் சென்று பார்த்து, அதிலுள்ள தகவல்களை பதிவு செய்தவர் தொல்லியல் ஆய்வாளர் அர.பூங்குன்றன்.
அப்போது கோவை மாவட்ட தொல்லியல் ஆய்வாளராக இருந்த பூங்குன்றன், பிறகு தமிழக தொல்லியல் துறையின் இணை இயக்குநராக இருந்து ஓய்வுபெற்றுவிட்டார்.
“காட்டுப் பகுதிக்குள் இருக்கும் இந்த கல்வெட்டைப் பார்த்த சிலர், புலவர் ராஜூவிடம் தெரிவித்துள்ளனர். அவர் இதைப் பற்றி என்னிடம் சொன்னார். அப்போது சுண்டக்காமுத்துாரிலிருந்து ஆறேழு கி.மீ. துாரம் நடந்து வந்து இந்த கல்வெட்டை பார்த்தேன். அதிலிருந்த எழுத்துக்கள் வட்டெழுத்துக்களாக இருந்தன. இராசகேசரிப் பெருவழி என்ற பெயர் மட்டும், வட்டெழுத்துடன் தமிழ் எழுத்துகளிலும் எழுதப்பட்டிருந்தது. அப்போதிருந்த தொல்லியல் துறை இயக்குநருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தேன்” என இந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதை விவரித்தார் பூங்குன்றன்.
அக்காலத்தில் இவ்வழியே வரும் பல நாட்டு வணிகர்கள் அனைவருக்கும் புரியும் வகையில், இரண்டு வரி வடிவங்களிலும் இது எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் பூங்குன்றன்.
“ஸ்வஸ்திஸ்ரீ கோ இராசகேசரிப் பெருவழி திருநிழலு மன்னுயிருஞ் சிறந்தமைப்ப ஒருநிழல் வெண்டிங்கள் போலோங்கி ஒருநிழல்போல் வாழியர் கோச்சோழன் வளங்காவிரி நாடன் கோழியர் கோக்கண்டன்குலவு” என இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
“சோழனின் குறியீடு சூரியன். பாண்டியர்களுக்கு சந்திரன். ஆனால் இந்த கல்வெட்டில் திங்கள் என்று குறிப்பிடுவதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை. அதேபோல இதில் 3 இடங்களில் குறிப்பிடப்படும் நிழல் என்பதற்கும் அர்த்தம் புரியாமலிருந்தது. கேரளாவைச் சேர்ந்த மொழியியல் அறிஞர் ஒருவர், இதை விளக்கினார். அதாவது அக்காலத்தில் மன்னர்கள் பயணம் செய்யும்போது, அவர்களுக்கு சீருடையில்லாமல் பாதுகாப்புக்குச் செல்லும் படையைக் குறிப்பதுதான் அந்த நிழல். மன்னரே இல்லாத இப்பகுதியில் எதற்கு இந்த நிழல் படை என்ற கேள்வி எழும். அது வணிகர்களையும், மக்களையும் காப்பதற்கு மன்னரால் உருவாக்கப்பட்ட படையைக் குறிக்கிறது” என்கிறார் பூங்குன்றன்.
‘கோ கண்டன்- ஆயிரம் வீரர்களைக் கொன்றவன்’
கொங்கு நாட்டையும் முதலாம் ஆதித்த சோழன் வென்றதற்கு இந்த கல்வெட்டும் ஒரு சான்று என்று கூறும் பூங்குன்றன், அந்த மன்னனைப் பற்றி மேற்கு மண்டலத்தில் வேறு எங்கும் கல்வெட்டு கிடைத்ததில்லை என்கிறார்.
இந்தக் கல்வெட்டில் கோ கண்டன் என்றொரு வார்த்தை இடம்பெற்றுள்ளது.
“ஆயிரம் வீரர்களைக் கொன்றவருக்குதான் கோ கண்டன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிற்காலச் சோழர்களில், முதலாம் ஆதித்தன், இரண்டாம் இராஜராஜன் இருவருக்கும்தான் இந்த கோ கண்டன் என்ற பெயர் தரப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அருகே தில்லை தானம் என்ற ஊரில் கிடைத்த கல்வெட்டின்படி, ‘தொண்டை நாட்டில் பாவிய இராசகேசரி’ என்பது முதலாம் ஆதித்தனை மட்டுமே குறிக்கும். அதனால் இது முதலாம் ஆதித்தனால் உருவாக்கப்பட்ட பெருவழிக் கல்வெட்டு என்பது உறுதி” என்றார் பூங்குன்றன்.
ஆனால், இந்த இராஜகேசரிப் பெருழியை உருவாக்கியது ஆதித்த சோழன் அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பெருவழி பயன்பாட்டில் இருந்தாலும், அந்தப் பாதையில் வணிகர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தன் பெயரைச் சூட்டியது முதலாம் ஆதித்த சோழன்தான் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் சி.ஆர். இளங்கோவன்.
“வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வாணிகம் செய்ய வந்தவர்கள், வெகுகாலமாக கேரள கடற்கரைக்கு வந்து, அங்கிருந்து கடல் வழியாகவே தஞ்சாவூர் கடற்கரைப் பகுதியை வந்தடைந்தனர். தரைவழியில் செல்வதற்கான பாதையின் நடுவே மேற்குத் தொடர்ச்சி மலை இருப்பதால், அது காடாக இருக்குமென்று கருதியுள்ளனர். பாலக்காடு கணவாய் வழியாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பழமையான ஒரு பாதை இருப்பதை பின்பே கண்டறிந்துள்ளனர். அந்த வழிதான் இராசகேசரிப் பெருவழி” என்கிறார் அவர்.
ரோமானிய நாணயங்கள்
“தஞ்சாவூர் பகுதியிலுள்ள பூம்புகார் போன்ற ஒரு துறைமுகத்திலிருந்து, கேரளாவின் கோழிக்கோடு போன்ற துறைமுக நகரத்தை இணைக்கின்ற பாதையாக இந்த இராசகேசரிப் பெருவழி இருந்திருக்கலாம். தோராயமாக 500 கி.மீ. துாரமுள்ள இந்த வழி, வணிகத்துக்கு பெரும் பங்காற்றியுள்ளது. அதனால் கொள்ளையர்களிடமிருந்து வணிகர்களையும், பொருட்களையும் காப்பாற்ற ஒவ்வொரு 50 கி.மீ. துாரத்துக்கும் நிழல் படை அமைத்து, பொருள் பாதுகாப்பு அறை போன்ற ஓர் அமைப்பை சோழ மன்னன் ஏற்படுத்தியதையே இந்த கல்வெட்டு சுட்டிக்காட்டுகிறது” என்கிறார் சி.ஆர். இளங்கோவன்.
மேற்கு பகுதியில் 20 பெருவழிகள் இருந்ததாகவும் அதில் இந்த இராசகேசரிப் பெருவழிதான் மிக முக்கியமானதாக இருந்தது என்று குறிப்பிடும் பூங்குன்றன், இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலிருந்து கிழக்குக் கடற்கரையை இணைக்கும் இந்தப் பெருவழியைப் பயன்படுத்தி, ரோமானியர்கள் வணிகம் செய்தனர் என்கிறார்.
இந்தியாவில் கிடைக்கும் ரோமானிய நாணயங்களில் 80 சதவீதம் மேற்கு பகுதியில்தான் கிடைத்தது என்கிறார் அவர்.
இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பெருவழிக்கு, ஓரிரு கி.மீ. துாரத்தில்தான், தற்போதுள்ள சேலம்– கொச்சி நெடுஞ்சாலையும் அமைந்துள்ளது.
புறவழிச்சாலை அமைக்கப்படுவதற்கு முன்பே, பல ஆண்டுகளாக அந்த சாலையே பிரதான சாலையாக பயன்பாட்டில் இருந்தது. கல்வெட்டு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் அறிவொளி நகர் என்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட வாரியக் குடியிருப்பு உள்ளது.
சற்று தொலைவில் மேற்குப் புறவழிச்சாலை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. அதனால் மனிதர்களாலோ, இயற்கையாலோ இந்த கல்வெட்டு அழியாமல் பாதுகாக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இராசகேசரிப் பெருவழி கல்வெட்டு குறித்து, கோவை மாவட்ட தொல்லியல் அலுவலர் (பொறுப்பு) சுரேஷிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, ”அந்த கல்வெட்டைப் பாதுகாப்பது குறித்து, இதுவரை எந்த கோரிக்கையும் தொல்லியல் துறைக்கு வரவில்லை. ஆனாலும் அதன் முக்கியத்துவம் கருதி, அந்த கல்வெட்டை ஆய்வு செய்து, தேவைப்படின் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.