மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் உரையில், விவசாயம்,தொழிற்துறை, கல்வி, பொருளாதாரம், வருமானவரி போன்ற துறைகள் சார்ந்து அவர் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதில் சாமானியர்கள் கவனிக்கவேண்டிய 10 முக்கிய அம்சங்கள் என்ன?
புதிய வருமான வரி (New Tax Regime) முறையில், வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முறையில் ஒரு வருடத்துக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள், வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மூத்த குடிமக்களுக்கான டிடிஎஸ் (Tax Deducted at Source) வரம்பு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து இரட்டிப்பாகி 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் வாடகைக்கு விடுவதன் மூலம் வருமானம் பெறுபவர்களுக்கான டிடிஎஸ் வரம்பும் 2.4 லட்சம் ரூபாயில் இருந்து 6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
LRS திட்டத்தின் கீழ் வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணத்துக்கான டிசிஎஸ் (Tax collected at source) வரி விலக்கு வரம்பு 7 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியால் கொண்டுவரப்பட்ட LRS திட்டத்தின்கீழ் இந்தியர்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்களின் கல்வி, மருத்துவ சிகிச்சை, முதலீடு ஆகிவற்றுக்காக பணம் அனுப்பலாம்.
இந்தியாவுக்கு வெளியே நிதி அனுப்பும் செயல்முறையை எளிமைப்படுத்துவதையும், நெறிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
ஓலா, உபெர், ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற செயலி சார்ந்து பணிபுரியும் கிக் தொழிலாளர்கள் தங்களை இ-ஷ்ரம் (e-shram) என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.
இதன் மூலம் அவர்களுக்கு அடையாள அட்டைகள், பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டத்தின் கீழ் சுகாதார காப்பீடு போன்றவை வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடி கிக் தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி வருவதைத்தாண்டி, இன்னும் கூடுதலாக 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
முதன்முறையாக ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்கும் 5 லட்சம் பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
பிரதம மந்திரி தன் தான்யா க்ரிஷி யோஜனா என்னும் வேளாண் திட்டத்தின் கீழ் மாநில அரசுடன் இணைந்து, குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட 100 மாவட்டங்கள் ஊக்குவிக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் 1.7 கோடி விவசாயிகள் பலன் பெறுவர்.
மேலும் கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகள் கடன் பெறும் தொகையின் அளவு உயர்த்தப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதன்படி, ஏற்கெனவே உள்ள 3 லட்சம் ரூபாய் எனும் தொகையிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வசதிகளின் மூலம் நாடு முழுவதும் 8 கோடி குழந்தைகளும், 1 கோடி கர்ப்பிணி பெண்களும், மற்றும் பாலூட்டும் தாய்மார்களும், மேலும் வளர்ச்சியடையாத இந்திய மாவட்டங்கள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் உள்ள சுமார் 20 லட்சம் வளரிளம் பெண்களும் ஊட்டச்சத்து பெறுகின்றனர்.
இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதி தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
சில உயிர்காக்கும் மருந்துகளின் விலை குறைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். புற்றுநோய் உள்ளிட்ட தீவிரமான நோய்களுக்கான மருந்துகளுக்கான சுங்க வரி குறைக்கப்படும் என்றும் ஆறு உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் புற்றுநோய் தொடர்பான 36 மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் மையங்களை (day care centre) அரசு அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்குள் 200 மையங்கள் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மாணவர்களிடையே ஆர்வத்தையும் புதுமையையும் வளர்க்கும் விதமாக அரசு பள்ளிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் அடல் டிங்கெரிங் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகள், கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் பாரத்நெட் மூலம் பிராட்பேண்ட் இணைய வசதியை ஏற்படுத்துதல், 500 கோடி ரூபாய் மதிப்பில் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையத்தை ஏற்படுத்துதல் போன்ற அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடியில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களை 2 மடங்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், 2014ஆம் ஆண்டுக்கு பின்னர் புதிதாக தொடங்கப்பட்ட 5 ஐஐடிகளில் கூடுதலாக 6500 மாணவர்கள் கல்வி பயிலும் விதமாக கட்டமைப்புகள் விரிவாக்கம் செய்யபடும் என்றும், பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஐஐடியில் தங்கும் விடுதி மற்றும் பிற கட்டமைப்புகள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
நாட்டின் முதன்மையான 50 சுற்றுலா தலங்கள் மாநில அரசுடன் இணைந்து மேம்படுத்தப்படும். முக்கிய உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான இடத்தை மாநில அரசு வழங்க வேண்டும். அந்த இடங்களில் ஹோட்டல்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.
அங்கு அதிக வேலைவாப்புகளை உருவாக்கி, வளர்ச்சியை அடைய பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- விருந்தோம்பல் மேலாண்மை (Hospitality Management) நிறுவனங்கள் உட்பட திறன் மேம்பாட்டு திட்டங்களை இளைஞர்களுக்காக உருவாக்குதல்
- தங்கும் விடுதிகளுக்கு முத்ரா கடன்களை வழங்குதல்.
- சுற்றுலா பயணத்தை எளிதாக்குதல் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பயண இணைப்பை மேம்படுத்துதல்.
- சில சுற்றுலா ஏற்பாடு செய்யும் குழுக்களுக்கு, விசா கட்டண தள்ளுபடியுடன் நெறிப்படுத்தப்பட்ட இ-விசா வசதிகளை அறிமுகப்படுத்துதல்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.