மகாராஷ்டிரா: பெண்ணின் கருவில் இருந்த குழந்தை வயிற்றில் ஒரு கரு உருவானது எப்படி?
- எழுதியவர், ஸ்ரீகாந்த் பங்களா
- பதவி, பிபிசி மராத்தி
மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்த ஒரு கருவை ஸ்கேன் செய்தபோது, அந்தக் கருவுக்குள் மற்றொரு கருவும் காணப்பட்டுள்ளது.
புல்தானா மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சோனோகிராஃபி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்தபோது இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
தற்போது, அந்தப் பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாக புல்தானா சுகாதாரத் துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
என்ன நடந்தது?
புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது பெண் கர்ப்பமான 8வது மாதத்தில் சோனோகிராஃபி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அவருக்கு அங்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவரது வயிற்றில் இருந்த கருவுக்குள் இன்னொரு கரு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் குழு மீண்டும் சோனோகிராஃபி செய்தபோதும், குழந்தையின் வயிற்றில் இருந்த கரு தெளிவாகத் தெரிந்தது.
புல்தானா மாவட்ட அரசு மருத்துவமனை மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணர் பகவத் புசாரி, இந்தச் சம்பவம் குறித்து பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.
அவர் அதுகுறித்துப் பேசுகையில், “சோனோகிராஃபி சோதனையில், பெண்ணின் வயிற்றில் ஒரு கரு இருப்பதும், அந்தக் கருவின் வயிற்றில் இன்னொரு கரு இருப்பது போன்றும் தெரிந்தது,” என்றார்.
இதை வளர்ச்சியடைந்த கரு எனச் சொல்ல முடியாது என்றும், ஏனெனில் அது தசைகளால் ஆன கட்டி போல இருந்ததாகவும் மருத்துவர் புசாரி குறிப்பிட்டார்.
“ஒரு கருவைப் போன்று அதற்கு இதயத் துடிப்பு இருக்காது. பார்ப்பதற்கு கருவைப் போன்று இருப்பதால் மட்டுமே அது கரு என்று அழைக்கப்படுவதாகவும்” அவர் விளக்கினார்.
மேலும், “கருவிடமிருந்து அதற்கு ரத்த ஓட்டம் கிடைப்பதால், அந்தக் கட்டி வளர்ந்து வருகிறது. மருத்துவ மொழியில் அதைக் கருவுக்குள் கரு என்று அழைப்போம்” என்றும் குறிப்பிடுகிறார்.
இத்தகைய சம்பவம் புல்தானா மாவட்டத்தில் நிகழ்வது இதுவே முதல் முறை என்றும் மருத்துவர் புசாரி சுட்டிக்காட்டினார்.
அதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் பிரசவம் இயல்பாக இருக்கும் என்றும், பிரசவத்திற்குப் பிறகுதான், குழந்தையின் வயிற்றில் உள்ள கட்டியை எப்படி அகற்றுவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார் மருத்துவர் புசாரி.
கருவின் உள்ளே கரு என்றால் என்ன?
ஒரு பெண்ணின் வயிற்றில் ஒரு கரு மற்றும் அந்தக் கருவின் வயிற்றில் இன்னொரு கரு இருப்பதை மருத்துவர்கள் கருவுக்குள் கரு( Fetus in Fetu) என்று அழைக்கிறார்கள்.
நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, கருவில் மற்றொரு கரு வளர்வதென்பது அரிதானது மற்றும் அதுவொரு பிறவிக் குறைபாடு என்று அறியப்படுகிறது. இதில், கருவின் உடலில் வளர்ச்சியடையாத இன்னொரு கரு உருவாகிறது.
ஒரு பெண்ணின் வயிற்றில் சாதாரணமாக வளரும் கருவின் வயிற்றுக்குள், இந்தக் கரு போன்ற கட்டி காணப்படுகிறது. ஆனால் அதன் வளர்ச்சி குழந்தை வளரும் விதத்தில் இருந்து வேறுபாடுகளைக் கொண்டது.
மகப்பேறு மருத்துவர். நந்திதா பால்ஷேட்கர் இதுகுறித்துக் கூறும்போது, “கருவுக்குள் கரு” என்பது இரட்டைக் குழந்தைகளைப் போன்றது. ஆனால் ஒரு கருவில் ஏற்படும் சிக்கலால், இன்னொரு கரு வளர்ச்சியடையாமல் மற்றொரு கருவின் வயிற்றுக்குள் சென்றுவிடுகிறது என்று விளக்குகிறார். இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. குழந்தை பிறந்த பிறகு, மருத்துவர்கள் வளர்ச்சியடையாத அந்த இன்னொரு கருவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடுவர்” என்று விவரித்தார்.
சத்ரபதி சாம்பாஜி நகரைச் சேர்ந்த, பிரபல மகப்பேறு மருத்துவர் மஞ்சு ஜில்லா கூறுகையில், “கருவின் வயிற்றுக்குள் மற்றொரு கரு உள்ளது. ஆனால் அது குழந்தையைப் போல வளரவில்லை. முடி, பற்கள், கண்கள் என குழந்தைக்கு இருப்பதைப் போன்ற திசுக்கள் அந்தக் கட்டியில் காணப்படுகின்றன. அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். இந்த சிகிச்சையின்போது குழந்தைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது,” என்று தெரிவித்தார்.
கருவுக்குள் கரு என்பது மிகவும் அரிதாக ஏற்படக்கூடிய குறைபாடு, அது ஐந்து லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் இணையதளத்தால் வெளியிடப்பட்ட ஆய்வில், உலகம் முழுவதும் 200க்கும் குறைவான பெண்களிடமே, கருவின் உள்ளே மற்றோரு கரு உருவாகும் நிலை பதிவாகியுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
என்ன சிகிச்சை அளிக்க வேண்டும்?
கருவுக்குள் இன்னொரு கரு இருக்கும் இந்த நிலையைக் குணப்படுத்த அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. அதன்மூலம் கரு போல் இருக்கும் கட்டியை அகற்றிய பிறகு நோயாளி குணமடைகிறார்.
“கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் குழந்தை இருந்தால், பொதுவாக அதை 14 வாரங்களுக்குப் பிறகு சோனோகிராஃபி பரிசோதனையில் பார்க்க முடியும்.
குழந்தை பிறந்த பிறகு அதற்கு வயிற்று வலி, குமட்டல் அல்லது வாந்தி இருந்தால், அது ஏதாவது சிக்கலாக இருக்கலாம். அப்போது குழந்தையை பரிசோதிக்க மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்” என்று மருத்துவர் நந்திதா பால்ஷேட்கர் அறிவுறுத்துகிறார்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மேற்கொள்ளப்படும் சோனோகிராஃபி சோதனையின் மூலம், கருவின் உள்ளே இருக்கும் கருவைப் பற்றி கவனிக்க முடியும். மேலும், குழந்தை பிறந்த பிறகு குழந்தையின் வயிறு வீங்கியிருந்தால், அப்போதும்கூட அதன் வயிற்றுக்குள் உள்ள கருவின் நிலையை சோனோகிராஃபி மூலம் கண்டறிய முடியும்.
இந்தியாவில் முன்பே பதிவாகியுள்ள வழக்குகள்
கருவின் வயிற்றுக்கு உள்ளே இன்னொரு கரு இருக்கும் நிலையில், அந்தக் கருவின் வயிற்றில், பொதுவாக ஒரு கரு மட்டுமே காணப்படும். ஆனால், சில நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதேபோல், இந்தியாவில் கருவுக்குள் கரு இருந்த சில நிகழ்வுகள் இதற்கு முன்பும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
கடந்த 2023ஆம் ஆண்டு,ஏப்ரல் மாதத்தில், பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் சர் சுந்தர்லால் மருத்துவமனையில் பிறந்த 14 நாட்களே ஆன குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தக் குழந்தையின் வயிற்றில் இருந்து 3 கருக்கள் அகற்றப்பட்டன.
பிறந்ததில் இருந்தே குழந்தைக்கு வயிற்று வலி, மஞ்சள் காமாலை மற்றும் சுவாசக் கோளாறு இருந்தது. குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த பிறகு, அல்ட்ராசோனோகிராஃபி, சிடி ஸ்கேன் மற்றும் பிற சோதனைகள் செய்யப்பட்டன. அப்போது, அது கருவுக்குள் கரு நிலை என்பது தெளிவானது.
இந்த மூன்று கருக்களும் குழந்தையின் சிறுநீரகங்கள் மற்றும் பித்த நாளங்களின் இடத்தில் மாறுபாடுகள் ஏற்படக் காரணமாயிருந்தன. அதைத் தொடர்ந்து, மூன்று மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பின் மூன்று கருக்களும் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, 2022ஆம் ஆண்டில், பிகாரில் உள்ள மோதிஹாரியில் பிறந்து 40 நாட்களே ஆன ஒரு குழந்தையின் வயிற்றில் கரு வளரத் தொடங்கியது. வயிறு வீங்கி, சரியாக சிறுநீர் கழிக்க முடியாததால், பெற்றோர் அந்தக் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில் குழந்தையின் வயிற்றில் கரு இருப்பது கண்டறியப்பட்டது.
அதன்பிறகு, புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அதன் உடல்நிலை சீரான பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்தில், 2024ஆம் ஆண்டு அக்டோபரில் மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவிலும் ஒரு பெண்ணின் கருவுக்குள் கரு இருப்பது தெரிய வந்தது.
பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் இரட்டைக் கரு இருப்பது தெரிய வந்தது. அந்த இரட்டைக் கருவை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சைக்கு மறுநாள் அந்தக் குழந்தை இறந்தது.
இதுவரை கருவின் உள்ளே மற்றொரு கரு இருந்த சில நிகழ்வுகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால், இம்முறை பிறந்த குழந்தையின் வயிற்றில் முதன்முறையாக இரட்டைக் குழந்தைகளைப் பார்த்தோம். இதனால் அறுவை சிகிச்சை செய்வதில் சிரமம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.