தந்தை-மகள் மரணத்தில் கைதான மருத்துவர், திருமுல்லைவாயல், சென்னை

பட மூலாதாரம், Handout

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

ஆவடியில் தந்தை, மகள் மரணம் தொடர்பான வழக்கில் மருத்துவர் ஒருவரை திருமுல்லைவாயல் காவல்நிலைய போலீசார் வியாழக்கிழமையன்று (ஜனவரி 30) கைது செய்தனர்.

இருவரின் உடல்களையும் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக கைதான மருத்துவர் பதப்படுத்தி வைத்திருந்ததற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறுகிறார், ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர்.

இதுதொடர்பாக மேலதிக தகவல்களைத் திரட்டி வருவதாகவும் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

தந்தை, மகள் மரணத்தில் என்ன நடந்தது? இறந்துபோன உடல்களை நான்கு மாதங்களாகப் பதப்படுத்தி வைத்திருக்க வாய்ப்புகள் உள்ளதா?

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமையன்று (ஜனவரி 29) ஆஸ்பான் ஏபெல் என்பவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

அந்த மனுவில், “தனது உறவினர்களான 78 வயதான சாமுவேல் சங்கர் மற்றும் அவரது மகள் 37 வயதான சிந்தியா ஆகியோர் திருமுல்லைவாயலில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

மருத்துவர் சாமுவேல் எபனேசர் என்பவருக்குச் சொந்தமான அந்த வீட்டில் தனது சிகிச்சைக்காக சாமுவேல் சங்கர் தங்கியுள்ளார். ஆனால், கடந்த சில மாதங்களாக அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை” எனக் கூறியிருந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர், தனியார் குடியிருப்புப் பகுதியில் உள்ள கே பிளாக் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் கிடந்துள்ளன.

“அது தனது உறவினர்கள்தான்” என்று ஆஸ்பான் ஏபெல் அடையாளம் காட்டியதாக ஆவடி மாநகர காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தை இயற்கை மரணம் – மகள் கொலை

இரு சடலங்களையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமையன்று (ஜனவரி 30) நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இறந்துபோன பெண் தலையில் ஏற்பட்ட காயத்தால் மரணமடைந்ததாக, ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

அதேநேரம், ‘மற்றொரு நபரான சாமுவேல் சங்கரின் மரணம் இயற்கையானது’ என்று பிரேத பரிசோதனை முடிவு கூறுவதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மருத்துவர் சாமுவேல் எபனேசரிடம் திருமுல்லைவாயல் போலீசார் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.

தந்தை-மகள் மரணத்தில் கைதான மருத்துவர், திருமுல்லைவாயல், சென்னை

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, இந்தச் சம்பவம் தொடர்பாக திருமுல்லைவாயல் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

பெண்ணின் தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதால், “அவரைக் காப்பாற்ற முடியவில்லை” என்ற ஆதங்கத்தில் சிந்தியா, மருத்துவர் சாமுவேல் எபனேசரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இந்த வாக்குவாதத்தின்போது கீழே தள்ளிவிட்டதில் அந்தப் பெண் இறந்துவிட்டதாக காவல் துறை விசாரணையில் எபனேசர் கூறியதாக ஆவடி காவல் ஆணையரக செய்திக் குறிப்பு கூறுகிறது.

இந்தக் கொலைச் சம்பவம், கடந்த ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதியன்று நடந்ததாகக் கூறுகிறார், திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “நான்கு மாதங்களாக இருவரின் உடலையும் பதப்படுத்த அவர் பயன்படுத்திய ரசாயனங்கள் தொடர்பான விவரங்கள் எதுவும் தெரியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

காவல் ஆணையர் சொல்வது என்ன?

தந்தை-மகள் மரணத்தில் கைதான மருத்துவர், திருமுல்லைவாயல், சென்னை

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, இந்தக் கொலை தொடர்பாக, எபனேசர் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்

தந்தை, மகள் மரணம் தொடர்பான வழக்கில் மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கரிடம் பிபிசி தமிழ் பேசியது.

“இருவரின் உடல்களும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் இறந்து மூன்று மாதங்கள் ஆனதா… நான்கு மாதங்கள் ஆனதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இருவரும் இறந்து சில மாதங்கள் ஆகின்றன என்பது மட்டும் உறுதி” எனக் கூறினார்.

கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் மருத்துவர் என்பதால், உடலைப் பதப்படுத்தியதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறும் காவல் ஆணையர் சங்கர், “இருவரின் உடலில் இருந்தும் துர்நாற்றம் பெரிதாக வீசவில்லை. எனவே, அதற்கான வேலைகளை அவர் செய்திருக்கலாம்” எனக் கூறினார்.

“ஆஸ்திரியாவில் உள்ள வியன்னாவில் மருத்துவம் படித்துள்ள 34 வயதான சாமுவேல் எபனேசர் திருமணம் ஆகாதவர்” எனக் கூறுகிறார் காவல் ஆணையர் சங்கர்.

காவல் ஆணையர் சங்கர்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, இருவரது உடல்களையும் மருத்துவர் எபனேசர் பதப்படுத்தியிருக்கலாம் எனக் கூறுகிறார் காவல் ஆணையர் சங்கர்

சமூக ஊடகம் மூலமாக சிந்தியாவின் அறிமுகம் சாமுவேல் எபனேசருக்கு கிடைத்துள்ளது. கணவரை விட்டுப் பிரிந்திருந்த சிந்தியா, தனது தந்தையின் சிறுநீரக கோளாறுக்கு சிகிச்சை பெறுவதற்காக எபனேசரின் உதவியை நாடியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, சாமுவேல் எபனேசரின் வீட்டில் தனது தந்தையுடன் சிந்தியா தங்கியிருந்ததாக காவல்துறை கூறுகிறது.

குடியிருப்பில் இருந்து சடலங்களைக் கைப்பற்றிய பிறகு மருத்துவர் சாமுவேல் எபனேசரை திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் தொடர்பு கொண்டபோது, “கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கிறேன். நேரில் வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.

“ஆனால் அதன் பிறகு அவரிடம் இருந்து முறையான பதில் வராததால் குழு ஒன்றை அனுப்பி கைது செய்தோம்” எனக் கூறுகிறார் காவல் ஆணையர் சங்கர்.

தொடர்ந்து பேசிய அவர், “சிறுநீரக பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த சிந்தியாவின் தந்தை இயற்கையாக இறந்துள்ளார். அதேநாளில் வெளிநாட்டில் மருத்துவம் படிப்பதற்கான ஆயத்தப் பணிகளில் எபனேசர் ஈடுபட்டுள்ளார்.

இதன் காரணமாக அவருக்கும் சிந்தியாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவரைச் சுவற்றில் எபனேசர் தள்ளிவிட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. சிந்தியாவின் தலையில் உள்ள காயம் அதன் காரணமாக ஏற்பட்டிருக்கலாம்” என்கிறார்.

உடல்களைப் பல மாதங்களுக்கு பதப்படுத்த முடியுமா?

தந்தை-மகள் மரணத்தில் கைதான மருத்துவர், திருமுல்லைவாயல், சென்னை

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, சடலங்கள் கைப்பற்றப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி

“இருவரின் உடல்களையும் பாதுகாப்பதற்கு அவர் பயன்படுத்திய ரசானயங்கள் தொடர்பான விவரங்கள் எதுவும் தெரியவில்லை. மீண்டும் அவரை போலீஸ் காவலுக்கு உட்படுத்தும்போது இதுகுறித்த விவரங்கள் தெரிய வரும்,” எனக் கூறுகிறார் காவல் ஆணையர் சங்கர்.

தற்போது சாமுவேல் எபனேசர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் காவல் ஆணையர் சங்கர், “உடல்களை முறையாகப் பாதுகாக்காமல் இருந்திருந்தால் துர்நாற்றம் வெளிப்பட்டு முன்கூட்டியே விவகாரம் வெளியில் வந்திருக்கும்” எனவும் அவர் கூறினார்.

தடய அறிவியல் வல்லுநர் கூறுவது என்ன?

“நான்கு மாதங்களாக உடலைக் கெடாமல் வைத்திருக்க முடியுமா?” என்று மருத்துவரும் பேராசிரியருமான வி.டிகாலிடம் பிபிசி தமிழ் கேட்டது. இவர் காஞ்சிபுரத்தில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரியின் தடய அறிவியல் மருத்துவத் துறையின் தலைவராக இருக்கிறார்.

தந்தை-மகள் மரணத்தில் கைதான மருத்துவர், திருமுல்லைவாயல், சென்னை

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, மீனாட்சி மருத்துவக் கல்லூரியின் தடய அறிவியல் மருத்துவத் துறையின் தலைவர் வி.டிகால்

“இறந்த உடலைக் கெடாமல் பாதுகாப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று உடலை உறைநிலையில் வைத்திருப்பது. இதற்கு குளிர்சாதனப் பெட்டி வேண்டும். அதிலும் மிகத் துல்லியமான ஒரு வெப்பநிலையில் உடலை வைத்திருந்தால் மட்டுமே உறைநிலை கிடைக்கும்.

அடுத்து ஒரு குறிப்பிட்ட ரசாயனத்தை ஊசி மூலம் உடலில் உள்ள உறுப்புகளில் செலுத்தலாம். இதுதவிர, காலில் உள்ள ஃபெமோரல் நரம்பு மூலமாக ஒரு ரசயானத்தைச் செலுத்தினால் அது இதயத்துக்குச் சென்று அனைத்து இடங்களுக்கும் பரவும். இதன்மூலம் திசுக்கள் அழிவதற்கு வாய்ப்பில்லை” எனக் கூறுகிறார்.

ஆகையால், உடல்களை மாதக்கணக்கில் கெடாமல் பதப்படுத்த முடியும் என்கிறார் மருத்துவர் டிகால்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு