இந்தியாவின் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிர்மலா சீதாராமன் தனது உரையைத் தொடங்கினார். அவர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சியினர் அமைதியாகினர்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார்.
“அனைத்து பெரிய பொருளாதார நாடுகளுள் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் கடந்த 10 ஆண்டு வளர்ச்சிப் பாதை மற்றும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் உலகளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் திறன் மீது நம்பிக்கை உயர்ந்துள்ளது” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வருமான வரி மசோதா
- வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ரூ. 12 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது.
- புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என, நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
- காப்பீட்டு துறையில் வெளிநாட்டு முதலீடு 74 சதவிகிதத்தில் இருந்து, 100 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது.
விவசாய துறை அறிவிப்புகள்
- பிகாரில் மக்கானா வாரியம் அமைக்கப்படும். வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனையில் இது உதவும். மக்கானா (தாவர விதைகள்) விவசாயிகளுக்கு இது பயனளிக்கும். உலகளவில் 85% மக்கானா உற்பத்தி இந்தியாவில் நடைபெறுகிறது. இதில், இந்தியாவில் 90% மக்கானா பிகாரில் உற்பத்தியாகிறது.
- பிகாரில் உணவு பதப்படுத்துதலுக்காக தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் நிர்வாக மையம் அமைக்கப்படும்.
- இந்த பட்ஜெட்டில் 10 முக்கிய பகுதிகள் உள்ளன. விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது இந்த பட்ஜெட் கவனம் செலுத்துகிறது.
- வேளாண் திட்டத்தில் 100 மாவட்டங்கள் ஊக்குவிக்கப்படும். பிரதம மந்திரி தன் தானியா எனும் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படும்.
- அதிக விளைச்சல் தரும் விதைகளுக்கென புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
- காய்கறிகள் மற்றும் பழங்களுக்கென ஒருங்கிணைந்த வகையில், மாநிலங்களுடன் இணைந்து புதிய திட்டம் தொடங்கப்படும்.
- உணவுத் துறையில் தன்னிறைவு அடைவதற்கு கவனம் செலுத்தப்படும்.
- எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளுக்கு என ஆறு ஆண்டுகளாக திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் துவரை, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.
- கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகள் கடன் பெறும் தொகையின் அளவு உயர்த்தப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதன்படி, ஏற்கெனவே உள்ள ரூ. 3 லட்சம் எனும் தொகையிலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொழில் துறை தொடர்பான அறிவிப்புகள்
- ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் அரசு வழங்கும் பங்காக ஏற்கெனவே உள்ள ரூ.10,000 கோடியுடன் கூடுதலாக ரூ.10,000 கோடி ஒதுக்கப்படும்.
- முதன்முறையாக ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்கும் 5 லட்சம் பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படும்.
- காலணிகள் மற்றும் தோல் துறையில் கவனம் செலுத்தும் வகையில் திட்டம் ஒன்று தொடங்கப்படும். இதன்மூலம், 22 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உலகளவில் பொம்மைகள் தயாரிப்பில் இந்தியா மையமாக உருவெடுக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
- தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கிரெடிட் அட்டை வழங்கப்படும். இது, யூபிஐயுடன் இணைக்கப்படும்.
- இ-ஷ்ரம் (e-shram) இணையதளத்தில் கிக் தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்துகொள்ளலாம் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்மூலம், அவர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்படும். மேலும், பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டத்தின் கீழ் அவர்களுக்கு சுகாதார காப்பீடு வழங்கப்படும். நிரந்தர, முழுநேர வேலைகளுக்குப் பதிலாக, குறுகிய கால அளவில், நேர நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும் வேலைவாய்ப்புகளைக் கொண்ட சந்தையே கிக் பொருளாதாரம் என அறியப்படுகிறது. இவை பெரும்பாலும், ஓலா, உபெர், ஸ்விக்கி, ஜொமாட்டோ, அர்பன் கம்பெனி போன்ற செயலி-சார் பணிகளாகச் சமீப காலங்களில் அடையாளப்படுத்தப்படுகின்றன.
கல்வி
- பள்ளிகளில் குழந்தைகளிடையே அறிவியல் சிந்தனையை வளர்க்கும் வகையில் அடல் டிங்கெரிங் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும். நாடு முழுதும் 50 ஆயிரம் ஆய்வு மையங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்படும்.
- ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளில் இணைய தொடர்பை ஏற்படுத்துவதற்கு பிராட்பேண்ட் வசதி ஏற்படுத்தப்படும்.
- கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி நிறுவனங்களில் மாணவர்களின் எண்ணிக்கை 100% அதாவது 65,000ல் இருந்து 1.35 லட்சம் எனும் அளவில் உயர்ந்துள்ளது. 2024ம் ஆண்டுக்குப் பிறகு அமைக்கப்பட்ட 5 ஐஐடி நிறுவனங்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும்.
மற்ற அறிவிப்புகள்
- இந்திய அரசின் வட்டார விமான நிலையங்களின் வளர்ச்சி தொடர்பான உடான் திட்டம் (UDAN), 120 பிராந்திய அளவில் புதிய பகுதிகளை இணைக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும். இதன்மூலம், அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி பயணிகள் விமானங்களில் பயணிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சக்ஷம் அங்கன்வாடி போஷன் 2.0 திட்டத்துக்கு உரிய நிதி ஒதுக்கப்படும். இதன்மூலம், 8 கோடி குழந்தைகள் பயன்பெறுவர். இதனுடன், 1 கோடி கர்ப்பிணிகளும் பயனடைவர்.
- புத்தரின் காலம் மற்றும் வாழ்க்கையுடன் தொடர்புடைய இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
- தனியார் துறையுடன் இணைந்து மருத்துவ சுற்றுலா மேம்படுத்தப்படும்.
- மாநிலங்களுடன் இணைந்து 50 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.
8வது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல்
தொடர்ச்சியாக, 8வது முறையாக நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய் 10 பட்ஜெட்டுகளை வெவ்வேறு காலகட்டங்களில் தாக்கல் செய்துள்ளார்.
மொரார்ஜி தேசாய் நிதியமைச்சராக 1959-64 காலகட்டத்தில் 6 பட்ஜெட்டுகளையும் பின்னர் 1967-69 காலகட்டத்தில் 4 பட்ஜெட்டுகளையும் தாக்கல் செய்திருக்கிறார். தற்போது, நிர்மலா சீதாராமன் அந்தச் சாதனையை நெருங்கி வந்துள்ளார்.
பொருளாதார ஆய்வறிக்கை
முன்னதாக, இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
அதில், 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3-6.8% என்ற விகிதத்தில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீண்ட கால தொழில் வளர்ச்சியை வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் அனைத்தும் வலுவாக இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து வலுவாக இருப்பதாகவும் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு