கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டால் விளையாட்டுத் துறையில் இந்தியாவின் வெற்றிகள் அதிகரிக்குமா? வீராங்கனைகளுக்கு இது உதவுமா?

கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டால் விளையாட்டுத் துறையில் இந்தியாவின் வெற்றிகள் அதிகரிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ஜானவி மூலே
  • பதவி, பிபிசி மராத்தி

இந்தியாவின் விளையாட்டுத் துறையில் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் பணம் செலவிடுவது, கடந்த இருபது ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இந்தியா ஒலிம்பிக் போட்டிகளிலும் கூடுதல் பதக்கங்களை பெற்றுள்ளது. ஆனால், இது போதுமானதா?

கடந்த 2004-ல் ஒரு ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியா 2024-ல் 6 பதக்கங்களை வென்றுள்ளது, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆசிய பாரா போட்டிகளில் இதுவரை இல்லாத அளவு பதங்கங்களை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவில் விளையாட்டு துறை பெரும் முன்னேற்றம் கண்டிருப்பதுடன், மேலும் சிறப்பாக செயல்பட தயாராக உள்ளது.

இந்தாண்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.3,443 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்துடன், குரூப்எம்-இன் அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டில் விளையாட்டுகளுக்காக தனியார் செலவிட்ட தொகை ரூ.15,766 கோடியாக அதிகரித்திருந்தது. இதில் பெரும்பாலும் கிரிக்கெட்டே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

உதவித்தொகை குறித்து அதிதி ஸ்வாமி கூறியது என்ன?

அதிதி ஸ்வாமி

பட மூலாதாரம், Getty Images

விளையாட்டுகளுக்கு அதிகரித்திருக்கும் ஆதரவும், ஒலிம்பிக் போட்டியில் பெற்ற வெற்றியும், 2023ஆம் ஆண்டில் 17 வயதிலேயே உலக சாம்பியன்ஷிப்பை வென்ற உலகிலேயே இளமையான வில்வித்தை வீராங்கனையான அதிதி ஸ்வாமி போன்ற புதிய தலைமுறை விளையாட்டு வீரர்களின் பேரார்வத்தைத் தூண்டியுள்ளது.

“உரிய நேரத்தில் எனக்கு உதவித் தொகைகள் கிடைத்ததால்தான் என்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது, இல்லாவிட்டால் விளையாட்டை ஒரு தொழிலாக எடுப்பதே மிகவும் கடினமானதாக இருந்திருக்கும்,” என தமது பயணம் குறித்து அவர் நம்மிடம் சொல்கிறார்.

அவர் 9 வயதில் விளையாட தொடங்கியபோது, மகாராஷ்டிராவில் ஒரு சிறிய நகரான சடாராவில் ஒரு கரும்புத் தோட்டத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக களத்தில்தான் பயிற்சி மேற்கொண்டார்.

அவரது தந்தை கோபிசந்த் ஒரு பள்ளி ஆசிரியர், அவரது தாய் சைலா உள்ளூர் அரசு ஊழியராக உள்ளார்.

அவர்களது ஊதியம் மிகக்குறைவாக இருந்ததால், அதிதியின் விளையாட்டுக்குத் தேவையான நிதிக்கு தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. அதனால் அவரது தேவைகளுக்காக அவர்கள் பல கடன்களை வாங்கினர்.

“அவருக்கு ஒவ்வொரு 2-3 மாதங்களுக்கு ஒருமுறை புதிய அம்புகள் வாங்க வேண்டியிருக்கும், அவரது உயரம் அதிகரித்தபோது வில்லையும் மாற்ற வேண்டியிருந்தது.”

ஒவ்வொரு முறையும் அம்புகளுக்கு சுமார் ரூ.40,000 செலவாகும், ஒவ்வொரு வில்லும் ரூ.2 முதல் ரூ.3 லட்சம் வரை ஆகும். அதைத் தவிர, அவரது உணவு மற்றும் போட்டிகளில் பங்கேற்க மேற்கொண்ட பயணங்களுக்கான செலவுகள் இருந்தன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அவர் 2022ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் வரை இந்த நிலையே நீடித்தது. அந்த வெற்றிக்குப் பிறகு, இந்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அதிதிக்கு ரூ.10,000 மாதாந்திர உதவித் தொகையாக கிடைத்தது. இதைத் தவிர, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் ரூ.20,000 மாதாந்திர உதவித்தொகையும் கிடைத்தது.

இது பெரிய அளவில் உதவியதாக அவர் கூறுகிறார். “நீங்கள் முன்னேறும்போது, செலவுகள் அதிகரிக்கின்றன. எப்போதும் புதிய கருவிகளை வாங்குவதற்கு குடும்பத்துக்கு வசதி இருக்காது. நிதி வசதி கிடைக்காததால், விளையாட்டையே விட்டுச் சென்ற நன்கு விளையாடக்கூடிய வீரர்கள் பலரை எனக்குத் தெரியும்.”

அதிதியின் கதை இந்தியாவில் இதேபோன்ற மேலும் பல கதைகளை ஒத்திருக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர் அவினாஷ் சேபல் தனது பயணத்தின் ஆரம்ப காலத்தில் கட்டுமானத் தொழிலாளியாக பணியாற்ற வேண்டியிருந்தது. உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற தீபக் போரியா, நல்ல உணவு கிடைக்காததால் ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட விளையாட்டை விட்டே செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இருப்பினும், அவர்கள் விடாமுயற்சியுடன் போராடி, இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று இந்திய விளையாட்டுத் துறையை மறுவரையறை செய்துகொண்டிருக்கின்றனர்.

விளையாட்டுகளில் அதிகரிக்கும் இந்தியாவின் வெற்றி

விளையாட்டுத் துறைக்கு இந்தியா செலவிடும் தனிநபர் பொதுச்செலவு, சீனா செலவிடுவதைவிட 5 மடங்கு குறைவானது

படக்குறிப்பு, விளையாட்டுத் துறைக்கு இந்தியா செலவிடும் தனிநபர் பொதுச் செலவு, சீனா செலவிடுவதை விட 5 மடங்கு குறைவானது

2024, செப்டம்பரில் டெல்லியில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் சிறப்பான பயிற்சியளிப்பது குறித்துப் பேசினார்.

விளையாட்டுகளில் இந்தியாவுக்கு இருக்கும் வாய்ப்புகளை அங்கீகரிக்கும் அதேநேரம், பாரிஸ் ஒலிம்பிக் 2024-இன் பதக்கப் பட்டியலை பார்க்கும்போது இன்னமும் நிறைய செய்ய வேண்டியிருப்பது தெரிவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தியா 6 பதக்கங்களை வென்று 71ஆவது இடத்தைப் பிடித்தது. அதேநேரம், இந்தியாவின் அண்டை நாடும், அதே அளவு மக்கள்தொகையை கொண்டதுமான சீனா, 91 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இது, விளையாட்டுத்துறைக்கு இந்தியா செலவிடும் தனிநபர் பொதுச் செலவு, சீனா செலவிடுவதை விட 5 மடங்கு குறைவானது என்ற ஒப்பீட்டை எழுப்பியது.

இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் சிலரின் மேலாண்மையை கவனித்துக்கொள்ளும் ‘பேஸ்லைன் வெஞ்சர்ஸ்’ என்ற விளையாட்டு மேலாண்மை நிறுவனத்தின் துஹின் மிஸ்ரா இதுகுறித்து விளக்குகிறார்.

“ஒரு வளரும் பொருளாதாரத்தில் மற்ற அத்தியாவசிய விஷயங்களைவிட விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. ஆனால், ஜிடிபி ஒரு குறிப்பிட்ட அளவை எட்டிய பின்னர், விளையாட்டு முக்கியமானதாக மாறுகிறது. அதைத்தான் இப்போது இந்தியாவில் பார்க்கிறோம். அடுத்த 15-20 ஆண்டுகளில் இது இன்னும் அதிகமாக வளரும்,”

ஒலிம்பிக்கை ஒப்பிடுகையில் பாராலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வென்றது.

2004-ல் இரண்டு பதக்கங்களை மட்டுமே வென்ற நிலையிலிருந்து, 2024-ல் 29 பதக்கங்களை வென்று பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா முத்திரை பதித்தது.

மாற்றுத்திறன் குறித்த அணுகுமுறையில் மாற்றம் மற்றும் பாரா விளையாட்டுப் போட்டிகளில் முதலீடு செய்ய தயார்நிலை ஆகியவை இந்த மாற்றத்துக்குக் காரணம் என பலர் சொல்கின்றனர்.

நிதியளிப்பில் முன்னேற்றம்

காமன்வெல்த் போட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2009-2010இல் காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்தியது, இதில் இந்தியா 38 தங்கம் உட்பட 101 பதக்கங்களை வென்றது

இந்தியாவை பொருத்தவரை விளையாட்டுகளுக்கு நிதியளிப்பதில் 2009-2010இல் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை டெல்லி நடத்தியது. இதில், இந்தியா 38 தங்கம் உட்பட 101 பதக்கங்களை வென்றது.

இது ஒலிம்பிக் போட்டிகள் குறித்த ஆர்வத்தையும், விழிப்புணர்வையும் அதிகரித்து, ஒரு புதிய சகாப்தத்துக்கு வித்திட்டதுடன், நிதியளிப்பு அதிகரிக்கவும் வழிவகுத்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதன் பின்னர் இரண்டு அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 2014-ல் TOPS என அறியப்பட்ட ‘டார்கெட் ஒலிம்பிக் போடியம் ஸ்கீம்’ தொடங்கப்பட்டது. ‘கேலோ இந்தியா’ திட்டம் 2017-18ல் தொடங்கப்பட்டது.

சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்ல நினைக்கும் முன்னணி வீரர்களுக்கு உதவுவதில், டாப்ஸ் கவனம் செலுத்தும் நிலையில், குழந்தைகளின் திறமையை ஊக்குவிப்பது, முன்னாள் வீரர்களுக்கு உதவுவது, மற்றும் அடிமட்ட விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்துவதில் கேலோ இந்தியா கவனம் செலுத்துகிறது.

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் 2,781 வீரர்களுக்கு பயிற்சி, உபகரணங்கள், மருத்துவ வசதி மற்றும் மாதாந்திர நிதி உதவி வழங்கப்படுவதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒரு வீரரின் ஆரம்ப காலத்தில் அரசின் நிதியுதவி முக்கிய பங்காற்றுகிறது என்பதால் இந்த திட்டங்கள் முக்கியமானவை. சிறப்பாக விளையாடிய வீரர்கள் விளையாடும் காலம் முடிந்த பிறகும் அவர்களது நிதி நிலைமை சீராக இருப்பதற்காக பல்வேறு அரசுப் பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

2014ஆம் ஆண்டு செலவிட்டதைவிட விளையாட்டுகளுக்கு செலவிடப்படும் தொகை மும்மடங்கு அதிகரிக்கப்பட்டிருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்டவியா கூறினார்,

இந்தியாவின் வருடாந்திர நிதிநிலை அறிக்கையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகையையே அவர் குறிப்பிட்டார்.

முந்தைய நிதிநிலை அறிக்கைகளில் இருந்த தொகைகளை பார்க்கும்போது, 2009-10ஆம் ஆண்டில் காமன்வெல்த் போட்டிகள் காரணமாக விளையாட்டுக்கு கணிசமாக அதிகத் தொகை ஒதுக்கப்பட்டிருப்பது தெரிகிறது. அண்மைக் காலத்தில் ஒதுக்கப்படும் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தோன்றுகிறது.

ஆண்டு நிதி திட்டமிடலில் விளையாட்டுக்கான பங்கு, வருடந்தோறும் ஒரே அளவில்தான் இருந்துவருகிறது. ஆனாலும், அந்த நிதி செலவிடப்படும் விதம் முன்னேற்றம் கண்டிருப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இத்துடன், தங்கள் பகுதிகளில் விளையாட்டு மேம்பாட்டுக்காக மாநில அரசுகள் தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றன. ஆனால், அந்தத் தொகை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

ஹரியாணா போன்ற மாநிலங்கள் மற்ற சில பகுதிகளை விட சிறப்பாக செயல்பட்டிருப்பதற்கு இதுவே காரணம்.

மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் செளரப் துகல் கூறுகையில், “ஹரியாணா விளையாட்டில் முதலீடு செய்தது, பாரா விளையாட்டுகள் உட்பட விளையாட்டுகளை ஊக்குவிக்க பெரிய பரிசுத் தொகைகள், அரசு பணிகள் மற்றும் விருதுகளை அறிவித்தது. இது விளையாட்டுகளுக்கு உகந்த சூழலை உருவாக்க உதவியதுடன், வீரர்களுக்கு அங்கீகாரமும் கிடைத்தது.” என்றார்.

கடந்த 24 ஆண்டுகளில் இந்தியா வென்ற 26 ஒலிம்பிக் பதக்கங்களில், 10 பதக்கங்கள் வீராங்கனைகளால் வெல்லப்பட்டுள்ளன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 24 ஆண்டுகளில் இந்தியா வென்ற 26 ஒலிம்பிக் பதக்கங்களில், 10 பதக்கங்கள் வீராங்கனைகளால் வெல்லப்பட்டுள்ளன

தனியார் துறையின் பங்களிப்பு

துப்பாக்கி சுடும் வீரர் தீபாலி தேஷ்பாண்டே 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் விளையாடியதுடன், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வனில் குசேலுக்கு பயிற்சியும் அளித்தார்.

“எங்கள் காலத்தில் நிறுவனங்களிடமிருந்து எங்களுக்கு அதிக நிதி கிடைக்கவில்லை. குறிப்பிட்ட சிலருக்கு சில நேரங்களில் உதவி கிடைக்கும். ஆனால், உபகரணாங்கள் மற்றும் பிற தேவைகளின் விலை மிக அதிகமாக இருந்தது. அந்த நிலை இப்போது பெரிய அளவில் மாறியுள்ளது.”

2010 காமன்வெல்த் போட்டிகளை தொடர்ந்த மாதங்களில், ஒலிம்பிக் கோல்ட் குவெஸ்ட், ரிலையன்ஸ் பவுண்டேசன், ஜேஎஸ்டபிள்யு ஸ்போர்ட்ஸ், கோஸ்போர்ட்ஸ் போன்ற பல அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் தோன்றின. இவை இளம் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்களித்து வருகின்றன.

தற்போது நிறுவனங்கள் ஒரு அணியுடன் தொடர்புப்படுத்திக்கொள்ளவும், வீரர்களுக்கு மிக இளம் வயதிலேயே உதவுவதற்கும் தயாராக உள்ளன.

“ஒரு வீரர் சிறப்பாக விளையாடும்போது, அவருக்கு உதவும் நிறுவனங்களின் முயற்சிகளுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது. ஒரு வீரரின் பிரபலம் பிராண்டுக்குக் கூடுதல் சிறப்பு சேர்த்து இருவருக்கும் ஆதாயம் என்ற நிலையை ஏற்படுத்துகிறது. விளையாட்டுக்கு ஆதரவளிக்க பல்வேறு பிராண்டுகள் முன் வருகின்றன.” என்கிறார் துஹின்.

ஆனால், இந்த பணத்தால் விளையாட்டுத் துறையில் இருக்கும் பெண்கள் எந்த அளவு பயன்பெறுகின்றனர்?

“அது நிச்சயம் குறைவுதான். ஆனால் அந்நிலை மாறி வருகிறது” என்கிறார் துஹின்.

“பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்களின் தரப்பிலிருந்து பார்க்கும்போது, செயல்பாட்டை பார்ப்பார்கள். கடந்த சில ஒலிம்பிக் போட்டிகளில் நமது வீராங்கனைகள் பி.வி. சிந்துவிலிருந்து, மிராபாய் சானு, லவ்லினா, மனு பாக்கர் வரை சிறப்பாக விளையாடியுள்ளனர். எனவே அது அவர்களுக்கு கூடுதல் கவனத்தை ஈர்த்துக் கொடுத்துள்ளது.”

கிரிக்கெட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு

அடில் சுமாரிவாலா

கடந்த 24 ஆண்டுகளில் இந்தியா வென்ற 26 ஒலிம்பிக் பதக்கங்களில், 10 பதக்கங்கள் வீராங்கனைகளால் வெல்லப்பட்டுள்ளன.

‘இந்தியா ஸ்போர்ட்ஸ் ஸ்பான்சர்ஷிப் ரிப்போர்ட்’ என்ற குரூப்எம்-இன் அறிக்கையின் கூற்றின்படி, விளையாட்டுகளில் அதிக பெண்கள் பங்கேற்று பாலினம் பற்றிய பொதுநம்பிக்கையை உடைத்துக்கொண்டிருக்கின்றனர். குரூப்எம் நிறுவனம் ஒரு ஊடக முதலீட்டுக் குழுவாகும்.

‘பெண்களை மையப்படுத்தி நடத்தப்படும் போட்டிகள் போன்ற முன்னெடுப்புகள் விளையாட்டில் பெண்களின் பங்கேற்பு அதிகரிப்பதற்கு உதவுகின்றன’, என்கிறது அந்த அறிக்கை.

இந்தியாவில் விளையாட்டு துறையின் செலவு 2016-ல் 941 மில்லியன் டாலரில் இருந்து 2023-ல் 1.9 பில்லியன் டாலராக கடந்த எட்டு வருடங்களில் இரட்டிப்பாகியிருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஆனால், 87% பணம் இந்தியாவில் அதிகம் விளையாடப்படும் கிரிக்கெட்டில் செலவிடப்படுகிறது. அதிலும் பெரும்பகுதி லாபம் தரும் இந்திய பிரிமியர் லீக்கில் செலவிடப்படுகிறது.

இதனால்தான் ஸ்பான்சர்ஷிப்பை கடந்து பார்க்க வேண்டும் என சிலர் நம்புகின்றனர்.

“ஸ்பான்சர்ஷிப் என்பது ஒரு பொறுப்பற்ற சொல், நமக்கு தேவை முதலீடு” என்கிறார் இந்திய தடகள கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் ஒலிம்பிக் வீரருமான அடில் சுமாரிவாலா.

பெரும்பாலான தனியார் நிதியளிப்பவர்கள் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன்தான் பணத்தை தருவதாக அவர் வாதிடுகிறார். பயிற்சியாளர்கள், மேலாளர்கள், மருத்துவர்கள், விளையாட்டு ஆய்வாளர்கள், பிசியோதெரபிஸ்டுகள், தன்னார்வலர்கள் என விளையாட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி அதை மேம்படுத்துவதற்கு அடிமட்டத்தில் உள்ள விளையாட்டு கூட்டமைப்புகளில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.

“இது ஸ்பான்சர்ஷிப்பாக இல்லாமல் ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் உதவியாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒடிசா ஹாக்கியில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறது.”

இந்த அணுகுமுறைக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. அடிமட்ட அளவில் அதிக வளங்களை கிடைக்கச்செய்யும் வகையில் விளையாட்டுத்துறை அறிமுகப்படுத்தியுள்ள வரைவு தேசிய விளையாட்டு கொள்கை, “விளையாட்டு வீரரை தத்தெடுங்கள்.” “ஒரு மாவட்ட விளையாட்டு திட்டத்தைத் தத்தெடுங்கள்,” மற்றும் “ஒரு இடத்தைத் தத்தெடுங்கள்” போன்ற முன்னெடுப்புகளை முன்வைத்துள்ளது.

இதை ஏற்றுக்கொள்ளும் செளரப் துகல், “தவழு, நட, பின்னர் ஓடு என்ற வழக்கு உள்ளது. நாம் இப்போதுதான் நடக்க தொடங்கியிருக்கிறோம், ஓடுவதற்கு நமக்கு இன்னமும் ஆதாரங்கள் தேவைப்படுகிறது.” என்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு