பெண்ணின் வயிற்றில் பேன்டேஜ் துணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

பிரசவத்தின்போது வயிற்றில் பேன்டேஜை வைத்து தைத்த வழக்கில், அப்பெண்ணுக்கு ரூ. 13 லட்சம் இழப்பீடாக வழங்குமாறு, தனியார் மருத்துவமனைக்கு சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தவறான அறுவை சிகிச்சையால் 22 நாள்களுக்கு மேல் வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டதாகக் கூறுகிறார் பாதிக்கப்பட்ட பெண்.

மருத்துவமனையில் என்ன நடந்தது?

சென்னை தண்டையார்பேட்டையில் வசித்து வரும் தனசேகர்-பிரீத்தி தம்பதிக்கு திருமணம் நடைபெற்று ஐந்து ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதற்காக திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இதன்பின் கர்ப்பமான பிரீத்திக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, அதே தனியார் மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துச் சென்றுள்ளார் தனசேகர். அச்சமயம், ஏழு மாத கர்ப்பிணியாக பிரீத்தி இருந்துள்ளார்.

“எனக்கு பிரசவ தேதியாக செப்டம்பர் 5 ஆம் தேதியை மருத்துவர்கள் கூறியிருந்தனர். ஆனால், ஏழாவது மாதத்திலேயே வலி அதிகமானதால் மருத்துவமனைக்கு சென்றோம்.

அங்கிருந்த பெண் மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்துவிட்டு, உடனே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் எனக் கூறினார்” என்கிறார் பிரீத்தி.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

குறை பிரசவத்தில் குழந்தை பிறந்ததால், வேறொரு தனியார் மருத்துவமனையில் குழந்தையைக் கண்காணிப்பில் வைப்பதற்காக எடுத்துச் சென்றதாகக் கூறிய பிரீத்தி, தனக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததாக பிபிசி தமிழிடம் கூறினார்.

“தையல் போட்ட இடத்தில் இருந்து ரத்தம் வெளியேறியபடியே இருந்ததால் அங்கிருந்த செவிலியர் ஒருவர் அந்த இடத்தில் பஞ்சை வைத்து அழுத்தியபடியே இருந்தார். வலி அதிகமாக உள்ளதாகக் கூறியும் மருத்துவர்கள் உடனே வரவில்லை.

ஒருவழியாக அன்று இரவு (2022 ஜூலை 18) பத்து மணியளவில் என்னை பரிசோதித்த மருத்துவர், உடலில் ரத்தம் செலுத்த வேண்டும் என்றார். ஏழு நாள் அதே மருத்துவமனையில் ஐசியூவில் இருந்தேன். ஆனாலும், வாந்தியும், வயிற்றுப்போக்கும் நிற்கவில்லை” என்கிறார் பிரீத்தி.

வீட்டுக்கு வந்த பிறகும் வாந்தியும் வயிற்றுப்போக்கும் தொடர்ந்தது என கூறுகிறார் அவர். “மருத்துவர்களிடம் கேட்டபோது, ‘சிகிச்சையின்போது நிறைய ஆன்டிபயாடிக் கொடுத்துவிட்டோம். சரியாகிவிட்டது’ எனக் கூறினர். எனக்கு வயிற்றில் என்னமோ உள்ளது என கூறியும் அவர்கள் கேட்கவில்லை” என்கிறார்.

பெண்ணின் வயிற்றில் பேன்டேஜ் துணி

பட மூலாதாரம், HANDOUT

துணியை அகற்றிய அரசு மருத்துவர்கள்

இதன்பிறகு எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரீத்தியை சிகிச்சைக்காக அவரது கணவர் சேர்த்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த பெண் மருத்துவர், “உனக்கு வயிற்றில் ஏதோ பிரச்னை உள்ளது” என கூறி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளார்.

எழும்பூரில் இருந்து ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு வரும்போதே தனக்கு சுயநினைவு போய்விட்டதாக கூறும் பிரீத்தி, “சி.டி ஸ்கேன் எடுத்தபோது, ‘வயிற்றில் என்னமோ உள்ளது. அதை அறுவை சிகிச்சை செய்து பார்க்க வேண்டும்’ என மருத்துவர்கள் கூறினர்” என்கிறார்.

இதன்பிறகு, சுமார் எட்டு மணிநேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரீத்தியின் வயிற்றில் பேன்டேஜ் கட்டு இருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

“அதை வெளியில் எடுத்த பிறகு மருத்துவர்கள் பரபரப்பாக இருந்தனர். ‘யார் உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்தது? அவர்கள் செல்போன் எண்ணைக் கொடுங்கள், புகார் கொடுக்க வேண்டும்’ எனக் கேட்டனர். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது” என்கிறார் பிரீத்தி.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 14 நாள்கள் சிகிச்சை எடுத்த பின்னரே பிரீத்தியின் உடல்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. “அன்று அரசு ஆஸ்பத்திரி போகாமல் இருந்திருந்தால் இன்று என்னால் என் குழந்தைக்கு அம்மாவாக உயிருடன் இருந்திருக்க முடியாது” எனக் கூறி கண்கலங்கினார்.

பெண்ணின் வயிற்றில் பேன்டேஜ் துணி

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது

இதன்பிறகு தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்கள், அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை ஆவணங்கள் ஆகியவற்றுடன் சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பிரீத்தி வழக்கு தொடர்ந்துள்ளார்.

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உடல்நலம், மனநலம் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், தனது உடல் எடையில் சுமார் 20 கிலோ வரையில் குறைந்துவிட்டதாக வழக்கின் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

“வழக்கின் விசாரணையின்போது தங்கள் தரப்பு தெரிவித்த குற்றச்சாட்டை தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை,” என பிபிசி தமிழிடம் கூறினார் பிரீத்தியின் வழக்கறிஞர் சூர்யபிரகாஷ்.

தனியார் மருத்துவமனையின் விளக்கம்

இதுதொடர்பாக, நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதத்தை தனியார் மருத்துவமனை நிர்வாகம் முன்வைத்துள்ளது.

அதில், ‘குழந்தையின்மை சிகிச்சைக்காக வந்த தம்பதிக்கு நல்ல முறையில் சிகிச்சை வழங்கப்பட்டது. பிரசவ வலிக்காக வந்தவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தது. அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து உயிரைக் காப்பாற்றினோம்’ எனத் தெரிவித்துள்ளது.

அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பிய அவரை டிஸ்சார்ஜ் செய்ததாக வாதிட்ட தனியார் மருத்துவமனை, “அறுவை சிகிச்சைக்குப் பிறகு மனுதாரர் நீண்ட தூரம் பயணம் செய்துள்ளார். மீண்டும் வலி உள்ளதாகக் கூறியதால் மறுபடியும் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது” எனக் கூறியுள்ளது.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட ஸ்கேனில், ‘வயிற்றில் எந்தவித பொருளும் இருப்பது கண்டறியப்படவில்லை’ என தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அதேநேரம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிகாலை 2 மணியளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், அங்கே இந்த தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளது. மேலும், தங்களிடம் இருந்து பணம் பறிக்கவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பெண்ணின் வயிற்றில் பேன்டேஜ் துணி

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, இதனால் தன் உடல் எடை அதிகம் குறைந்ததாகக் கூறுகிறார், பிரீத்தி

தீர்ப்பில் நீதிபதி சொன்னது என்ன?

இந்த வழக்கில் ஜனவரி 10 ஆம் தேதியன்று சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அந்த உத்தரவில், ‘அறுவை சிகிச்சைக்குப் பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரண கோளாறால் மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் முறையாக உணவை எடுத்துக்கொள்ள முடியவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் அதே தனியார் மருத்துவமனையில் எட்டு நாட்களாக சிகிச்சை பெற்றுள்ளார்’ எனக் கூறப்பட்டுள்ளது.

மனுதாரருக்கு வலி ஏற்படுவதற்கான காரணத்தைக் கண்டறிவதில் தனியார் மருத்துவமனையில் தோல்வி ஏற்பட்டது மட்டுமல்லாமல் அதை மறைத்துள்ளதாகவும் கூறியுள்ளது.

‘மேலும், மருத்துவமனையில் இருந்து மனுதாரரை வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் பேன்டேஜ் துணி நீக்கப்பட்டுள்ளது’ எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன்பிறகே பிரீத்தியின் உடல்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பியதாகக் கூறியுள்ள நீதிமன்றம், “அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் பஞ்சு போன்ற (15*15 cm) பொருள் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சேவையில் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு ஆகியவற்றால் ஏற்பட்டால் ஏற்பட்ட சேவைக் குறைபாட்டால் மனுதாரருக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது” என நீதிபதி தெரிவித்துள்ளார்.

“அந்தவகையில், பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடாக 10 லட்ச ரூபாயை தனியார் மருத்துவமனை வழங்க வேண்டும். வழக்கு செலவாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். மேலும், மருத்துவ செலவுக்கு 3,26,746 ரூபாயை செலவழித்துள்ளதால், அதையும் சேர்த்து 13,36,746 ரூபாயை வழங்க வேண்டும்” என நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டுள்ளார்.

அதிக இழப்பீடு வழங்கப்பட்டது ஏன்?

பெண்ணின் வயிற்றில் பேன்டேஜ் துணி

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, அறுவை சிகிச்சையில் ஒரு பொருளையே உள்ளே வைத்து தைத்ததைத் தான் நீதிபதி தீவிரமாக எடுத்துக்கொண்டார் என்கிறார், வழக்கறிஞர் சூர்யபிரகாஷ்

“மருத்துவ அலட்சியம் தொடர்பாக கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காவல் ஆணையரிடம் மனு கொடுத்தோம். இந்த வழக்கில் தனியார் மருத்துவமனை மீது எஃப்.ஐ.ஆரை பதிவு செய்யுமாறு திருவொற்றியூர் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இவை இந்த வழக்குக்கு உதவியாக இருந்தன” எனக் கூறுகிறார் வழக்கறிஞர் சூர்யபிரகாஷ்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ”இன்னும் இரண்டு நாள் தாமதம் செய்திருந்தால் பெண்ணின் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும். அறுவை சிகிச்சையில் ஒரு பொருளையே உள்ளே வைத்து தைத்ததைத் தான் நீதிபதி தீவிரமாக எடுத்துக்கொண்டார். அதனால் தான் அதிக தொகையை இழப்பீடாக தருமாறு உத்தரவிட்டார்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு