முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலப்பகுதியில் இலங்கை படைகளால் காங்கேசன்துறைப்பகுதியில் பொதுமக்களது காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மாளிகையினை பொருத்தமான தரப்புக்களிடம் கையளிக்க தயாராவுள்ளதாக ஜனாதிபதி அனுர தெரிவித்துள்ளார்.
அதற்கான பரிந்துரையை வடக்கு ஆளநரிடம் கோரியுள்ள நிலையில் யாழ் பல்கலையின் சைவ பீடம் கீரிமலையில் அமைக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
வரலாற்றுக்கால சிவத்தமிழ்ப் பூமியான கீரிமலையின் அதே இடத்தில் ஆதி நகுலேச்சரம் அமைந்திருந்த இடத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழ் மக்களின் விசேட பயன்பாட்டிற்கு வழங்க தயாராகவுள்ளதாக அனுர குமார திசநாயக்கா இன்று யாழில் அறிவித்துள்ளார். இந்நிலையில் யாழ் பல்கலையின் இந்துக்கற்கைகள் பீடத்திற்கு அதனை கோர வேண்டும்.
ஜனாதிபதி ஆளுநருக்கு பொருத்தமான திட்ட வரைபை சமர்ப்பிக்க பணிப்புரை விடுத்துள்ள நிலையில் பல்கலைக்கழக பேரவை கோரிக்கையை ஆளுநரிடம் முன் வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அண்மையில் உருவாக்கப்பட்ட இந்து கற்கைகள் பீடம் நிரந்திர கட்டிட வசதி இன்றி இயங்கி வருவதும் அதற்கு பொருத்தமான இடத்தை தேடி வருவதும் அதற்காக முன்மொழியப்பட்ட பிரேரணைகளில் கீரிமலையும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது