இந்தியா Vs இங்கிலாந்து டி20 போட்டி: இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பிரம்மாஸ்திரம் வெற்றியை கொடுக்குமா?
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
புனேயில் இன்று (ஜன. 31) நடைபெறவுள்ள 4வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றும் முடிவுடன் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீ்ச்சு ஆதிக்கம் செய்கிறதா அல்லது இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு ராஜ்ஜியம் நடத்துகிறதா என்பது ஒவ்வொரு போட்டியிலும் நெருக்கடியாக செல்கிறது.
ரன் விருந்து எதிர்பார்ப்பு
இந்தியா-இங்கிலாந்து டி20 தொடரில் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களுக்கு ரன் விருந்தாக அமையும், வானவேடிக்கை நிகழ்த்தும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, இரு அணிகளுக்கும் இடையே சிக்ஸர் போர் இருக்கும் என கருதப்பட்டது. ஆனால், கடந்த 3 ஆட்டங்களும் எதிர்பார்ப்புக்கு மாறாகவே இருந்தது. ஆனாலும், கடைசி இரு போட்டிகளில் திரில்லான முடிவுகளுக்குப் பஞ்சமிருக்காது.
இந்திய அணி முன்னிலை
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரு போட்டிகளை இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றும் என நினைத்திருந்த வேளையில் ராஜ்கோட்டில் நடந்த 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து வென்று தொடரை உயிர்ப்பித்துள்ளது. இப்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கறது. இன்னும் ஒரு ஆட்டத்தில் வென்றால் இந்திய அணி தொடரைக் கைப்பற்றும்.
புனேயில் இன்று இரவு நடக்கும் இந்த போட்டியில் தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இந்திய அணியும், தொடரை நெருக்கமாகக் கொண்டு செல்ல இங்கிலாந்து அணியும் கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கலாம்.
இங்கிலாந்தின் வேகப்பந்து ஆயுதம்
இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்தே வீரர்கள் களமிறக்கப்படுகிறார்கள். ஆடுகளம் எவ்வாறாக இருந்தாலும் ஆர்ச்சர், மார்க் உட், பிரைடன் கார்ஸ், ஓவர்டன் ஆகியோர் நெருக்கடி தரும் விதத்தில் பந்துவீசுகிறார்கள். சரியான லைன் லென்த்தில், அதிவேகமாக பந்துவீசும்போது, சிறிய தவறு செய்து இந்திய பேட்டர்கள் விக்கெட்டை இழந்து விடுகிறார்கள். பவர்பிளே முடிவதற்குள் குறைந்தபட்சம் 3 விக்கெட்டுகளையாவது வீழ்த்திவிட்டுதான் ஓவர்டன், கார்ஸிடம் பந்துவீச்சை ஆர்ச்சரும், மார்க்வுட்டும் ஒப்படைக்கிறார்கள்.
இந்திய வீரர்களின் பலவீனத்தை அறிந்து, ஹோம் ஒர்க் செய்து திட்டமிட்டு செயல்படுவதால், விக்கெட்டை எளிதாக வீழ்த்த முடிகிறது. ஆதலால், இங்கிலாந்து அணியினருக்கு ஆடுகளம் ஒரு பொருட்டாக அமையவில்லை.
சரியான திட்டமிடலுடன் வந்து, ஒவ்வொரு இந்திய பேட்டருக்காக வைத்திருக்கும் தனித்தனி திட்டங்களை சரியாக செயல்படுத்தி விக்கெட்டை வீழ்த்துகிறார்கள். இதில் ரஷித்தின் சுழற்பந்துவீச்சு இங்கிலாந்தின் வெற்றிக்கு கூடுதலாக உதவி செய்கிறது. கடந்த 3 போட்டிகளிலும் ரஷித் பெரிதாக விக்கெட் ஏதும் வீழ்த்தாவிட்டாலும், அவரின் எக்கானமி ரேட் 3 முதல் 4 ரன்களுக்கு மேல் செல்லவில்லை.
சுழற்பந்து பிரம்மாஸ்திரம்
இந்திய அணியைப் பொருத்தவரை அர்ஷ்தீப் கடந்த 2 போட்டிகளுக்கு கை கொடுத்த நிலையில், கடந்த ஆட்டத்தில் ஷமி களமிறங்கினார். ஷமியின் இயல்பான பந்துவீச்சு விக்கெட்டை வீழ்த்தவில்லை. இந்திய அணி வேகப்பந்துவீச்சை நம்பி களமிறங்குவதைவிட சுழற்பந்துவீச்சாளர்கள் எனும் காய்களையே நம்புகிறது.
குறிப்பாக, புதிரான பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, ரவி பிஸ்னோய், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா என 5 சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துகிறார்கள். அதிலும், வருண் பந்துவீச்சை எவ்வாறு புரிந்துகொள்வது என இங்கிலாந்து பேட்டர்களுக்குப் புரியவில்லை.
வருண் பந்துவீச்சை உன்னிப்பாக கவனித்து ஆடுவதற்குள் பேட்டர்கள் விக்கெட்டை இழந்துவிடும் நிலைதான் இருக்கிறது. கடந்த 3 போட்டிகளிலும் வருணின் பந்துவீச்சு இங்கிலாந்து பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக அமைந்தது. அக்ஸர், பிஸ்னோய் சிறப்பாகப் பந்துவீசினாலும் ரன்களை விடுகிறார்கள். கடந்த ஆட்டத்தில் பிஸ்னோய் ரன்களை வாரிக் கொடுத்தார். இந்திய அணி சுழற்பந்துவீச்சு எனும் ஆயுதத்தை நம்பியே களமிறங்குகிறது.
கடந்த 3 ஆட்டங்களும் வேகப்பந்துவீச்சுக்கும், சுழற்பந்துவீச்சுக்கும் இடையிலான போட்டியாகவே மாறியுள்ளது.
சாம்ஸனுக்கு எச்சரிக்கை மணி
பேட்டிங்கைப் பொருத்தவரை இரு அணிகளிலும் முக்கிய பேட்டர்கள் பெரிதாக இன்னும் ஸ்கோர் செய்யவில்லை. இந்திய அணியைப் பொருத்தவரை சஞ்சு சாம்ஸன் கடந்த 3 ஆட்டங்களிலும் ஒரே மாதிரியாக, ஆர்ச்சர் பந்துவீச்சில்தான் ஆட்டமிழந்துள்ளார். சாம்ஸன் மார்புக்கு மேலே பவுன்ஸராக வரும் பந்துக்கு திணறுகிறார் எனத் தெரிந்து ஆர்ச்சர் தொடர்ந்து அதேபோன்று வீசி அவரின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். வேகப்பந்துவீச்சை கணித்து சாம்ஸன் ஆடுவதில் சிக்கல் இருக்கிறது. பந்தின் வேகத்துக்கு ஏற்ப சாம்ஸனின் பேட்டின் வேகம் இல்லாததால், நினைத்த ஷாட்களை அவரால் விளையாட முடியவில்லை.
தென் ஆப்பிரிக்காவில் ஜோஹன்னஸ்பர்கில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் சதம் அடித்த சாம்ஸன் இங்கு திணறுவது வியப்பாக இருக்கிறது. சாம்ஸன் இந்த டி20 தொடரில் திணறுவதை ஐபிஎல் தொடரில் அவரின் ராஜஸ்தான் அணி நிர்வாகம் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். கடந்த 3 போட்டிகளிலும் சாம்ஸன் 35 ரன்களைக்கூட கடக்கவில்லை.
இதேபோன்று, சாம்ஸன் மோசான ஃபார்மில் ஆடினால் தொடக்க வரிசை பேட்டிங்கை இழக்க நேரிடும், இந்த இடத்துக்கு ஜெய்ஸ்வால், அபிஷேக், சுப்மான் கில் என, பலர் போட்டியில் இருப்பதால் அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு சாம்ஸன் அணியில் நீடிக்க அவரின் பேட்டிங்கில் நிலைத்தன்மை அவசியம்.
ஸ்கை ஃபார்முக்கு திரும்புவாரா?
அதேபோல, கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடந்த 5 இன்னிங்ஸ்களிலும் பெரிதாக ரன்களை சேர்க்கவில்லை. சூர்யகுமார் பந்தை கணித்து ஆடுவதிலும், அனைத்து பந்திலும் பெரிய ஷாட்களுக்கு முயற்சிப்பதுமே அவருக்கு ஆபத்தாக முடிகிறது. சூர்யகுமார் தலைமையில் இதுவரை டி20 தொடரை இந்திய அணி இழக்கவில்லை, இதை மனதில் வைத்து இரு ஆட்டங்களிலும் பொறுப்பாக பேட் செய்தால் இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டும்.
ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், திலக்வர்மா நடுவரிசைக்கு பலம் சேர்க்கிறார்கள். கடந்த போட்டியில் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம்.
ரிங்கு சிங் வருகை
காயம் காரணமாக கடந்த 2 போட்டிகளிலும் இடம் பெறாத ரிங்கு சிங் இந்த ஆட்டத்தில் பங்கேற்பார் என துணைப் பயிற்சியாளர் ரியான் டென் தெரிவித்துள்ளார். ரிங்கு சிங் அணிக்குள் வரும்பட்சத்தில் நடுவரிசை பலம்பெறும். ஹர்திக் பாண்டியா, திலக்வர்மா, ரிங்கு சிங், அக்ஸர் படேல் என பேட்டிங் வரிசை ஸ்திரமாக அமையும்.
ரிங்கு சிங் களமிறங்கும் பட்சத்தில் துருவ் ஜூரெல் நீக்கப்படுவார். அதேபோல, வாஷிங்டன் சுந்தரை அமரவைத்து அவருக்கு பதிலாக ரமன்தீப் சிங் அல்லது ஷிவம் துபே இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கலாம் எனத் தெரிகிறது.
ஆதலால் பேட்டிங்கைப் பொருத்தவரை பலவிதமான தேர்வுகள் , வீரர்கள் இருந்தாலும், அவர்கள் வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொருத்து ஆட்டத்தின் போக்கு நகரும்.
சொதப்பும் பில்சால்ட்
இங்கிலாந்து அணியிலும் பேட்டிங் பிரச்னை இருக்கிறது. கரிபியன் மண்ணில் சதம் அடித்த பில் சால்ட் இந்தியத் தொடரில் திணறுகிறார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் நன்றாக விளையாடிய சால்ட் இந்தத் தொடரில் சுணங்குவது வியப்பாக இருக்கிறது.
ஹேரி ப்ரூக், ஸ்மித், பெத்தெல் இதுவரை பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை. இந்திய சுழற்பந்துவீச்சு அதிலும் வருண் பந்துவீச்சைக் கண்டு வியப்பில் உள்ளனர். கேப்டன் பட்லர் ஒரு போட்டியில் அரைசதம் அடித்தநிலையில், அடுத்த 2 ஆட்டங்களிலும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. லிவிங்ஸ்டன் கடந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் ஒரு கேமியோ ஆடியதால் ரன்கள் கிடைத்தன. இல்லாவிட்டால் இங்கிலாந்தின் நிலை மோசமாகியிருக்கும்.
இங்கிலாந்து அணியும் பேட்டிங் சிக்கலில் சிக்கியிருக்கிறது. அதிலும், இங்கிலாந்து அணி வீரர்களின் விக்கெட்டை வீழ்த்த இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பெரிய ஆயுதமாக அமையும்.
ஆடுகளம் எப்படி?
மகாராஷ்டிராவின் புனே மைதானத்தில் 42 ஆயிரம் பேர் வரை அமரலாம். புனே ஆடுகளம் முற்றிலும் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றது. கருப்பு மண்ணால் விக்கெட் அமைந்திருப்பதால், தொடக்கத்தில் சில ஓவர்கள் வேகப்பந்துவீச்சுக்கும் பின்னர் சுழற்பந்து வீச்சுக்கும் முற்றிலும் ஏதுவாக மாறிவிடும்.
இந்த ஆடுகளத்தில் 4 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் 2 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணியும், 2 ஆட்டங்களில் சேஸிங் செய்த அணியும் வென்றுள்ளன. ஆடுகளத்தின் தன்மையை உடனடியாக கண்டுபிடிப்பது கடினம் என்பதால் போட்டியில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது. குறிப்பாக, நடுப்பகுதி ஓவர்கள்தான் ஆட்டத்தில் மாற்றத்தைத் தரப்போகும் ஓவர்களாக மாறும். நடுப்பகுதி ஓவர்களை பேட்டர்கள் சமாளித்து ஆடிவிட்டால் டெத் ஓவர்களில் ஸ்கோர் செய்யலாம்.
இதுவரை 64 டி20 போட்டிகள் ஒட்டுமொத்தமாக நடந்துள்ளன. இதில், 35 முறை முதலில் பேட் செய்த அணியே வென்றுள்ளன. இந்த ஆடுகளத்தில்தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மிட்ஷெல் சான்ட்னர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியது நினைவிருக்கும். ஆதலால் சுழற்பந்துவீச்சு ஆயுதத்தை எந்த அணி வலுவாகக் கையாள்கிறதோ அந்த அணி வெற்றிக்கு முன்னெடுக்கும்.
இந்த மைதானத்தில் சராசரி ஸ்கோரே 167 ரன்கள்தான். இந்த ரன்களை இங்கு சேஸ் செய்வதே கடினமாகும். அந்த அளவுக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் வலுவாக இருந்தால் எளிதாக டிபெண்ட் செய்யலாம். இங்கு அதிகபட்சமாக 206 ரன்கள் வரை இந்திய அணி சேர்த்திருந்தாலும், அதிகபட்ச சேஸிங் என்பது, 2012ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 158 ரன்களை சேஸ் செய்ததுதான். இங்கு அக்ஸர் படேல் அதிகபட்சமாக 31 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்துள்ளார்.
இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்வதுதான் சிறந்த முடிவாகும். ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை எடுத்துவிட்டால், டிஃபெண்ட் செய்ய முடியும். ஆதலால் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும், இரவில் பனிப்பொழிவும் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இங்கிலாந்து அணி (உத்தேசம்)
பில்சால்ட்(விக்கெட் கீப்பர்), பென் டக்கெட், ஜாஸ் பட்லர்(கேப்டன்), ஹேரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தெல் அல்லது ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், அதில் ரஷீத், மார்க் உட்
இந்திய அணி (உத்தேசம்)
சஞ்சு சாம்ஸன்(விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்ஸர் படேல், ராமன் தீப் சிங் அல்லது வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னாய், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு