மட்டக்களப்பில் திருக்குறள் உலக நூல் உலக சாதனை மாநாடும் ஆய்வரங்கமும்.

by adminDev

மட்டக்களப்பில் திருக்குறள் உலக நூல் உலக சாதனை மாநாடும் ஆய்வரங்கமும். on Thursday, January 30, 2025

(சித்தா) உலக திருக்குறள் மையம் மற்றும் கிழக்குப் பெருவளாகம், மட்டக்களப்பு, இலங்கை இணைந்து நடத்திய   “திருவள்ளுவரின் தாழ்த்தப்பட்டோர் வாழ்வியல் சிந்தனைகள்”ஆய்வரங்கமும், ஆய்வுக்கோவை வெளியீடும் கடந்த 2025.01.25 ம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு கிழக்குப் பெருவளாகத்தில் அதன் தலைவரும் தாபகருமான முனைவர். எஸ் .மோசேஸ் அவர்களது தலைமையில் இடம் பெற்றது. தமிழ்நாட்டிலும் தமிழர் வாழும் சர்வதேச நாடுகளிலும் இலங்கையில் மட்டக்களப்பிலுமாக மொத்தம் நூறு மையங்களில் உலக சாதனை மாநாடும் ஆய்வரங்கமும் நடந்தேறின.

மட்டக்களப்பு பெருவளாக ஆய்வரங்கத் தலைப்பாக “திருவள்ளுவரின் தாழ்த்தப்பட்டோர் வாழ்வியல் சிந்தனைகள்” என்ற விடயம் உலக திருக்குறள் மையத்தினால் வழங்கப்பட்டிருந்தது. முனைவர். எஸ். மோசேஸ் அவர்களாலும் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. பகீரதி மோசேஸ் அவர்களாலும் ( சமூக விஞ்ஞானத்துறை கிழக்குப் பல்கலைக்கழகம் )சிறப்பு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதோடு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பத்து இளம் ஆய்வாளர்கள் இவர்களால் நெறிப்படுத்தப்பட்டு அவர்களது ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வுக் கோவையில் உள்ளடக்கப்பட்டிருந்தன. 

நிகழ்வு அறிமுகம், மங்கல விளக்கேற்றல், திருவள்ளுவர் வாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து என்பவற்றுடன் வரவேற்புரையை செல்வி. ஷசாலினி ராஜன் நிகழ்த்த தலைமை உரையை ஆய்வு மாநாட்டின்  பொறுப்பாளரும், இணைப்பாளருமான கலாநிதி. எஸ். மோசேஸ் நிகழ்த்தினார். அதிதிகள் சார்பில் முனைவர் ஞா. தில்லைநாதன் (முன்னாள் துணைத் தலைவர், சமூக விஞ்ஞானத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை ) திரு. க.பகீரதன் (முன்னாள் அதிபர்) ஆகியோர் நிகழ்த்தினர். உலக சாதனை மாநாட்டு ஆய்வுக் கோவை வெளியீட்டுரையை திரு.எஸ். புண்ணியமூர்த்தி ( முன்னாள் பிரதி அதிபர், மொழிபெயர்ப்பாளர் ) நிகழ்த்தினார்.

நிகழ்வின் அடுத்த கட்டமாக அதிதிகளுக்கு முதல் பிரதிகள் வழங்கப்பட்டன. வைத்திய கலாநிதி. ரூபசிங்கம் சிறிக்காந்தன்( போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு) திரு. அ.கோகுல ரஞ்சன் ( உரிமையாளர், ராஜா புத்தக நிலையம், மட்டக்களப்பு )

திரு .ஸ்டீபன் ராஜன் ( துணைத்தலைவர்  கி.அ.ச தாண்டவன்வெளி )  திருமதி. புனித வாணி சிவகுமார் ( ஆசிரியை மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆகியோர் ஆய்வுக் கோவைப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். இதன் பின்னர் நடந்தேறிய ஆய்வரங்குக்கு முனைவர். ஞா. தில்லைநாதன் தலைமை வகிக்க பன்னிரண்டு ஆய்வுத் தலைப்புகளில் ஆய்வாளர்கள் தமது கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். மானுடவியல், வாழ்வியல்  சார்ந்த சமூகப் பிரச்சினைகள் ஆய்வரங்கின் கருப்பொருளாக அமைந்தன. இறுதி நிகழ்வாக நன்றி உரையை செல்வன்.எம்.கிரிஷிகேஷ் (இயக்குனர், கிழக்குப் பெருவளாகம்,  மட்டக்களப்பு, இலங்கை ) வழங்க மாநாட்டு நிறைவுரையை நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு. யோ. சிவகுமார் ஆசிரியர், வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயம்) வழங்கி வைத்தார். 

தொடர்புடைய செய்திகள்