திருப்பரங்குன்றம் மலையில் அசைவம் சமைத்து சாப்பிடும் வழக்கம் இருந்ததா? பாஜகவின் புகாரும் உண்மை நிலவரமும்

திருப்பரங்குன்றம் தர்காவில் அசைவம் சமைக்கும் வழக்கம் இருந்ததா? பாஜக முன்வைக்கும் குற்றச்சாட்டு சரியா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திருப்பரங்குன்றம் மலையின் ஒருபுறம் முருகன் கோவில் உள்ளது, மறுபுறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது.
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயல்வதாகக் கூறி, பிப்ரவரி 4ஆம் தேதியன்று மதுரையில் இந்து முன்னணி போராட்டத்தை அறிவித்துள்ளது.

ஆனால், மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை நேர்த்திக் கடன் கொடுத்து சமைப்பது ஏற்கனவே வழக்கத்தில் இருந்ததாகக் கூறுகிறார், சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகி அல்தாஃப்.

‘திருப்பரங்குன்றம் மலைக்கு வழிபட செல்வதைத் தடுக்கவில்லை. அங்கு அசைவம் சமைப்பதைத்தான் எதிர்க்கிறோம்,’ எனக் கூறுகின்றன இந்து அமைப்புகள்.

“மலையில் என்னென்ன வழிபாட்டு முறைகள் இருந்ததோ அது அப்படியே தொடரும்” எனக் கூறுகிறார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு.

திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு சமைக்கும் வழக்கம் முன்பே இருந்ததா? தர்கா நிர்வாகிகளும் கோவில் நிர்வாகிகளும் கூறுவது என்ன?

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவிலும் மலையில் காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளது. மலையின் மறுபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா உள்ளது.

இந்த தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா நடப்பது வழக்கம். கடந்த 1 ஆம் தேதி சந்தனக்கூடு விழா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, 18ஆம் தேதி ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி விழா நடைபெற உள்ளதாக தர்கா நிர்வாகம் அறிவித்தது.

இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதையும் மீறி ஆடுகளை எடுத்துச் செல்ல முயன்றதாக, முஸ்லிம் அமைப்பினரை காவல் துறை தடுத்து நிறுத்தியது.

‘மலையில் ஆடு, கோழிகளை பலி கொடுப்பதற்கு அனுமதியில்லை’ எனக்கூறி, காவல் துறை அதிகாரிகள் தடுத்ததாகக் கூறுகிறார், சிக்கந்தர் பாதுஷா தர்காவின் செயற்குழு உறுப்பினர் அல்தாஃப்.

தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழாவும் கந்தூரி விழாவும் நடத்தப்படுவதாகக் கூறியும் அவர்களுக்குக் காவல் துறை அனுமதியளிக்கவில்லை. இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட இந்து முன்னணி அமைப்பினர், திருப்பரங்குன்றம் மலையைக் காக்க வலியுறுத்தி, வேல் ஊர்வலம் நடத்தினர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சர்ச்சையின் பின்னணி

தர்காவில் கந்தூரி விழா நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுவதை அறிந்து, கடந்த 22ஆம் தேதி ராமநாதபுரம் எம்.பி-யும் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருமான நவாஸ்கனி, திருப்பரங்குன்றம் மலைக்கு வந்தார். வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டில், அந்த தர்கா இருப்பதால் அதை ஆய்வு செய்ய வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“கடந்த காலங்களில் எவ்வாறு சுமூகமாக தர்காவுக்கு சென்று வழிபட முடிந்ததோ அதே நிலை தொடர வேண்டும்,” என்று மாநகர காவல் ஆணையரை கேட்டுக்கொண்டதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் நவாஸ்கனி எம்.பி. தெரிவித்திருந்தார்.

அதோடு, மலையில் அமர்ந்து சிலர் பிரியாணி சாப்பிடும் புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்தார். இது பேசுபொருளாக மாறியது.

இந்த புகைப்படத்தைப் பகிர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்துக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலையின் மீது கும்பலாக சென்று, அசைவ உணவு உண்டிருப்பது, முற்றிலும் தவறான செயல் மட்டுமின்றி, மதக் கலவரத்தை ஏற்படுத்தும் செயல்” எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசைக் கண்டித்து, பிப்ரவரி 4ஆம் தேதி மதுரையில் போராட்டம் ஒன்றை இந்து முன்னணி அறிவித்துள்ளது.

நேர்த்திக் கடனுக்கு அனுமதி மறுப்பு

திருப்பரங்குன்றம் தர்காவில் அசைவம் சமைக்கும் வழக்கம் இருந்ததா? பாஜக முன்வைக்கும் குற்றச்சாட்டு சரியா?

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, கடந்த டிசம்பர் 26ஆம் தேதி, ஆடு, சேவல்களை எடுத்துச் செல்ல காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. அதை கவனித்த 20க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், மலையின் படிக்கட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

அதேநேரம், கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்தப் பிரச்னை பூதாகரமாக உருவெடுத்ததாகக் கூறுகிறார், சிக்கந்தர் தர்காவின் செயற்குழு உறுப்பினர் அல்தாஃப்.

“ராஜபாளையத்தைச் சேர்ந்த அபுதாஹிர் என்பவர், ஒவ்வோர் ஆண்டும் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு வந்துகொண்டிருக்கிறார். தனக்கு குழந்தை இல்லாததால் வருடந்தோறும் அவர் நேர்த்திக் கடன் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்” எனக் கூறுகிறார் அல்தாஃப்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி ஆடு மற்றும் இரண்டு சேவல்களுடன் அபுதாஹிர் வந்துள்ளார். ஆனால், இவற்றை மலைக்கு எடுத்துச் செல்ல அனுமதியில்லை எனக் கூறி காவல் துறையினர் தடுத்ததாகக் கூறுகிறார் அல்தாஃப்.

இதைக் கவனித்த இருபதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள், மலையின் படிக்கட்டு அருகே அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், இறுதிவரை ஆடு, கோழிகளை எடுத்துச் செல்வதற்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை.

அதிகாரிகள் சொன்னது என்ன?

திருப்பரங்குன்றம் தர்காவில் அசைவம் சமைக்கும் வழக்கம் இருந்ததா? பாஜக முன்வைக்கும் குற்றச்சாட்டு சரியா?

பட மூலாதாரம், @KNavaskani

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அல்தாஃப், “அபுதாஹிருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காவல் துறையினருடன் பேசினோம். ‘இது மேலிடத்து உத்தரவு’ என்று மட்டும் கூறினர். அதற்கான உத்தரவு நகலைக் கேட்டபோது அவர்கள் தரவில்லை,” என்று தெரிவித்தார்.

மேலும், “எங்களைக் கைது செய்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் மனு கொடுத்தோம்” என்றவர், ஆர்.டி.ஓ-விடம் கூறி இந்தப் பிரச்னையைத் தீர்க்க முயன்றதாகவும் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்திய வருவாய் கோட்டாட்சியர், அது சிவன் மலை என்றும் அங்கு ஆடு, கோழிகளை வெட்டக்கூடாது என்றும் கூறியதாகக் கூறுகிறார் அல்தாஃப். ஆனால், காலம்காலமாக ஆடு, கோழிகளைச் சமைப்பதற்கான பாத்திரம் அங்கே உள்ளதாகத் தான் தெரிவித்ததாகவும், ஆனால் அதற்கு ‘இங்கு இந்துக்கள் அதிகமாக உள்ளனர்’ என்று மட்டும் வருவாய் கோட்டாட்சியர் பதில் அளித்ததாகவும் அல்தாஃப் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தர்காவுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் சமைத்த இடம், சமைத்துச் சாப்பிட்ட இடம், காவலர்களும் பொது மக்களும் உணவருந்தும் புகைப்படங்கள் ஆகியவற்றை பிபிசி தமிழுக்கு அல்தாஃப் பகிர்ந்தார்.

அதுகுறித்துப் பேசிய அவர், “2023 ஆம் ஆண்டு சந்தனக் கூடு விழாவும் கந்தூரி விழாவும் நடைபெற்றது. மலையில் தர்காவுக்கு பாத்தியப்பட்ட நெல்லித்தோப்பு என்ற இடம் உள்ளது. தர்காவில் மக்கள் அதிகளவில் கூடிவிட்டால் கீழே உள்ள நெல்லித்தோப்புக்குச் சென்றுவிடுவார்கள்.

அங்கு அனைத்து சமூகத்தினரும் சமைத்துச் சாப்பிட்டனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம்கூட அசைவம் சமைத்துச் சாப்பிட்டனர். இங்கு இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்களாகப் பழகி வருகிறோம். இதுவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை” என்று தெரிவித்தார்.

கோவில் பட்டாச்சாரியாரின் பதில்

திருப்பரங்குன்றம் தர்காவில் அசைவம் சமைக்கும் வழக்கம் இருந்ததா? பாஜக முன்வைக்கும் குற்றச்சாட்டு சரியா?

பட மூலாதாரம், HANDOUT

இதையடுத்து, திருப்பரங்குன்றம் கோவிலின் தலைமை பட்டாச்சாரியார் ராஜாவிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர், தர்காவில் சந்தனக்கூடு விழா நடத்தும் காலங்களில் கோவிலில் இருந்து மின்வசதி தரப்படுவது வழக்கமாக இருந்ததாகக் கூறுகிறார்.

மேலும், “அதற்கான கட்டணத்தை அவர்கள் செலுத்திவிடுவார்கள். ஜெனரேட்டரை பயன்படுத்துவதும் வழக்கமாக இருக்கிறது. அங்கு முஸ்லிம்கள் வழிபாடு நடத்தச் செல்வார்கள் எனத் தெரியும். இது காலம்காலமாக நடந்து வரும் பழக்கம்” எனக் கூறினார்.

ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்துச் சாப்பிட்டு வருவதாக, தர்கா நிர்வாகிகள் கூறுவது குறித்துக் கேட்டபோது, “அங்கு செல்லும் முஸ்லிம்கள் பூ, சர்க்கரை, ஊதுபத்தி ஆகியவற்றை எடுத்துச் செல்வார்கள். உள்ளூரில் உள்ள முஸ்லிம்கள் இங்கு சாமி கும்பிடவும் வருவார்கள்.

வேலுக்கு அபிஷேகம் செய்யும் பாலை வாங்கிச் சாப்பிடுவார்கள். வேறு எதையும் கொண்டு போனதாக எங்களுக்குத் தெரியவில்லை. இந்த மலையை நாங்கள் சிவனாக பார்க்கிறோம்” என்று மட்டும் பதில் அளித்தார்.

தற்போது சிலர் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி வருவதாகக் கூறும் தலைமை பட்டாச்சாரியார் ராஜா, “மலையில் வழிபாட்டைத் தவிர மற்ற செயல்பாடுகளுக்கு வாய்ப்புகள் இல்லை. எங்களால் பிரார்த்தனை மட்டும்தான் செய்ய முடியும்” எனக் கூறினார்.

இதையே பிபிசி தமிழிடம் கூறிய தமிழ்நாடு பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன், “தர்காவுக்கும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் தனித்தனி பாதைகள் உள்ளன. தர்காவுக்கு போகிறவர்கள் காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் சென்று வருகின்றனர்.

அங்கு கிடா வெட்டுவோம் என சில இஸ்லாமிய அமைப்புகள் கிளம்பியுள்ளன. அந்தக் கோவிலும் மலையும் புனிதமானது. அங்கு இதுவரை ஆடு, கோழிகளை பலி கொடுத்ததில்லை. அதை நாங்கள் தீவிரமாக எதிர்க்கிறோம்” எனக் கூறுகிறார்.

கந்தர் மலையா? சிக்கந்தர் மலையா?

திருப்பரங்குன்றம் தர்காவில் அசைவம் சமைக்கும் வழக்கம் இருந்ததா? பாஜக முன்வைக்கும் குற்றச்சாட்டு சரியா?

பட மூலாதாரம், ABDUL SAMAD

படக்குறிப்பு, “இது தொடர்பாக, எம்பி, எம்எல்ஏ-க்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து உண்மையான நிலவரம் என்ன என்பதை விசாரித்து அரசு தீர்வு கொடுக்க வேண்டும்” எனக் கூறுகிறார் அப்துல் சமது

இதை மறுத்துப் பேசும் மனிதநேய மக்கள் கட்சியின் மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ-வும் வக்ஃப் வாரிய உறுப்பினருமான அப்துல் சமது, ” ஒவ்வொருவருக்கும் வழிபாட்டு உரிமைகள் உள்ளன. தர்காவில் உள்ள அவுலியாவுக்கு நேர்த்திக்கடன் வைப்பது வழக்கம். அது நிறைவேறினால் ஆடு, கோழிகளைப் பலியிட்டு விருந்து வைப்பார்கள். மலைக்கு ஆடுகளையும், பாத்திரங்களையும் தூக்கிக்கொண்டு செல்கிறவர்கள் இன்றும் உள்ளனர்.

அந்த நம்பிக்கையைப் பாதுகாத்துத் தர வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. இதில் அரசியல் ஆதாயம் அடைவதற்காக சிலர், ‘சிக்கந்தர் மலை அல்ல, கந்தர் மலை’ எனப் பேசி வருகின்றனர். இது நல்லிணக்கத்தைக் கெடுக்கும் செயல்” என்றார்.

“அங்கே புதிய நடைமுறைகளை உருவாக்குமாறு அரசிடம் நாங்கள் கேட்கவில்லை. பல்லாண்டு காலமாக நடைமுறையில் உள்ள வழிபாட்டு உரிமையைத்தான் கேட்கிறோம். அதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார் அப்துல் சமது.

“இதுதொடர்பாக, எம்.பி., எம்எல்ஏ-க்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து உண்மையான நிலவரம் என்ன என்பதை விசாரித்து அரசு தீர்வு கொடுக்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாஜக கூறுவது என்ன?

திருப்பரங்குன்றம் தர்காவில் அசைவம் சமைக்கும் வழக்கம் இருந்ததா? பாஜக முன்வைக்கும் குற்றச்சாட்டு சரியா?

பட மூலாதாரம், RAMASRINIVASAN

படக்குறிப்பு, தர்காவுக்கு செல்வதிலோ, வழிபாடு நடத்துவதிலோ எந்தப் பிரச்னையும் இல்லை, ஆடு, கோழிகளை வெட்ட வேண்டாம் என்று மட்டுமே சொல்வதாகக் கூறுகிறார் இராம.சீனிவாசன்

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு பா.ஜ.க பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன், “தர்கா எங்களுக்குச் சொந்தம் என இந்துக்கள் யாரும் உரிமை கொண்டாடவில்லை. பொதுவாக, கோவில் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு அசைவ உணவுகள் விற்கப்படுவதில்லை.

அனைத்துக் கோவில்களிலும் இதுதான் நிலைமை. ஆனால், நாங்கள் மலை மேல் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை வெட்டுவோம் என்பதை எவ்வாறு ஏற்பது?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

காலம் காலமாக அசைவ உணவு சமைக்கப்படுவதாக தர்கா நிர்வாகிகள் கூறுவது குறித்துக் கேட்டபோது, “அது ஊடக வெளிச்சத்துக்கு வரவில்லை. இப்போதுகூட இரவில் ரகசியமாக சென்று ஆடு வெட்டி வந்தால் யாருக்கும் தெரியப் போவதில்லை. இது எங்களின் உணர்வுகளைப் பாதிக்கிறது என்றுதான் கூறுகிறோம்.

இப்போது பிரச்னை வெளியே வந்துவிட்டது. தர்காவுக்கு செல்வதிலோ, வழிபாடு நடத்துவதிலோ எந்தப் பிரச்னையும் இல்லை. அங்கே ஆடு, கோழிகளை வெட்ட வேண்டாம் என்றுதான் கூறுகிறோம். அது மட்டும்தான் பிரச்னை” எனக் கூறினார்.

சேகர்பாபு கூறியது என்ன?

அமைச்சர் பி.கே. சேகர்பாபு

படக்குறிப்பு, திருப்பரங்குன்றம் மலையில் என்னென்ன வழிபாட்டு முறைகள் இருந்ததோ அது அப்படியே தொடரும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்

மலையை முன்வைத்து எழுந்துள்ள சர்ச்சைக்கு இந்து சமய அறிநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, செய்தியாளர்களுக்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

“திருப்பரங்குன்றம் மலையில் என்னென்ன வழிபாட்டு முறைகள் இருந்ததோ அது அப்படியே தொடரும்” எனக் கூறியுள்ள அமைச்சர் சேகர்பாபு, “இனத்தால், மொழியால் மக்களைப் பிளவுபடுத்தும் சக்திகள் எங்கெல்லாம் முளைத்துள்ளதோ, அதையெல்லாம் அகற்றும் பணியில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

“திருப்பரங்குன்றத்தில் முருகனும் காப்பாற்றப்படுவார், அல்லாவும் காப்பாற்றப்படுவார்” எனக் கூறியுள்ள அமைச்சர் சேகர்பாபு, “இனம், சாதி, மதங்கள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட அரசாக இந்த அரசு செயல்படுகிறது” எனக் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு