இன்றைய (30/01/2025) தமிழ் மற்றும் ஆங்கிலம் நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியமான செய்திகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கருவுக்குள் மற்றொரு கரு வளர்ந்துகொண்டிருப்பது தெரிய வந்துள்ளது என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தை சேர்ந்த 35 வார கர்ப்பிணி பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வழக்கமான பிரசவகால பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, அந்த பெண்ணின் கருவை பரிசோதனை செய்தபோது, அவருக்கு “கருவுக்குள் கரு” என்ற அரிய வகை பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
பெண்ணின் கர்ப்பப்பைக்குள் குழந்தை கருவுற்றபோது, தவறுதலாக சிதைவுற்ற கரு ஒன்று அந்த குழந்தையின் வயிற்றுக்குள் சென்று தங்கிவிடும். இது பிற்காலத்தில் அந்த குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் பிரசாத் அகர்வால், “கருவுக்குள் கரு என்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். 5 லட்சத்தில் ஒருவருக்கே இதுபோன்ற பிரச்னை ஏற்படும். இதுவரை உலகம் முழுவதும் சுமார் 200 பேர் இதுபோன்ற பிரச்னையை எதிர்கொண்டுள்ளனர். இந்தியாவில் 10 முதல் 15 பேருக்கு இந்த பிரச்னை ஏற்பட்டு உள்ளது” என்றார்.
மேலும், தற்போது சம்பந்தப்பட்ட கர்ப்பிணியின் 35 வார கருவின் வயிற்றில் கரு போன்ற அமைப்பு இருப்பதையும், அதற்கு கை, கால்கள் போன்ற அசாதாரண அமைப்பு இருப்பதையும் கண்டறிய முடிந்துள்ளது. எனவே. பாதுகாப்பான பிரசவ நடைமுறைகளுக்காக அண்டை மாவட்டமான சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள மருத்துவமனைக்கு அந்த கர்ப்பிணி பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவர் கூறினார்.
இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரே நாளில் 100 பங்குனி ஆமைகள் உயிரிழப்பு
சென்னை கடற்கரையை ஒட்டி, செவ்வாய்கிழமையன்று 100க்கும் மேற்பட்ட பங்குனி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியதாக, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா அங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரே நாளில் இத்தனை ஆமைகள் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறை என்று அந்த செய்தி கூறுகிறது.
சென்னை பெசன்ட் நகரில் நிலைமைகளை கண்காணிக்க வனத்துறை கட்டுப்பாட்டு மையத்தை அமைத்துள்ளது. இந்த மையம் மீன்வளத்துறையினர், மீனவர்கள், இந்திய கடற்படையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் ஒன்றிணைந்து செயல்படும்.
சமீபத்தில் வனத்துறை அதிகாரிகள் கடறகரையையொட்டி ஆய்வு செய்தபோது, 100 ஆமைகளின் உடல்கள் கிடைத்தன, அவற்றில் சிலவற்றின் உடல்கள் மிக மோசமான நிலையில் இருந்ததால், உடற்கூராய்வு செய்ய முடியவில்லை. மேலும், சில ஆமைகளின் உடல்களை ஆய்வு செய்ய வண்டலூர் அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பங்குனி ஆமைகளின் இறப்பு தொடர்ந்து நடைபெறுவதா, அதை கண்காணிக்கத் தவறியதாக தமிழ்நாடு அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இழுவை படகுகள் மற்றும் தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்று கண்காணிக்கத் தவறியதாக விமர்சித்துள்ளது என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: பெங்களூரு நீதிமன்றம்
சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க, வைர நகைகளை வருகிற 14, 15-ம் தேதிகளில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, கர்நாடக அரசுக்கு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக, தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு கர்நாடகாவில் நடந்ததால், அவர் பயன்படுத்திய 27 கிலோ எடையுள்ள 468 வகையான தங்கம் மற்றும் வைர நகைகள், வெள்ளி பொருட்கள், நகைகள் உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அந்த பொருட்கள் தற்போது கர்நாடக அரசின் கருவூலத்தில் உள்ளன. ஜெயலலிதாவின் இந்த உடைமைகளை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை அரசின் கருவூலத்தில் சேர்க்கக்கோரி, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இதுதொடர்பான பெங்களூரூ நீதிமன்றத்தின் உத்தரவில், “27 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகள், 1,562 ஏக்கர் நிலப் பத்திரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். நகைகளை எடுத்துச் செல்ல தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் 6 பெட்டிகளுடன் வர வேண்டும். உரிய வாகன வசதி, பாதுகாப்புடன் வந்து அனைத்து நகைகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்துச் செல்ல வேண்டும்.
பொருட்களை எடுத்துச் செல்லும்போது அதனை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்கள் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த நடைமுறையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநருக்கு நடத்தை விதிகள்: திமுக தீர்மானம்
ஆளுநருக்கு நடத்தை விதிகள் மற்றும் கோப்புகள், மசோதாக்களில் கையெழுத்திட கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜன.31-ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு, அவையில் திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை விவாதிப்பதற்கான திமுக எம்பிக்கள் கூட்டம் நேற்று (ஜன. 29), முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறி்ப்பாக, “ஆளுநர்களுக்கு நடத்தை விதிகளை உருவாக்குதல், மாநில அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் செய்ய கூட்டத்தொடரில் வலியுறுத்தப்படும்.
டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வைத்த முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தல்
உருக்கு இரும்பு 5,370 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் அறிமுகமாகியுள்ளதை உலகுக்கு அறிவித்த அரசின் சாதனையை மத்திய அரசும், பிரதமரும் முன்னெடுக்க வேண்டும்”
என வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இலங்கை மீனவர் பிரச்னைக்கு தீர்வு கிடையாது: இலங்கை வெளியுறவுத்துறை
இலங்கை -இந்திய மீனவர் பிரச்னைக்கு தீர்வு கிடையாது என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நிலுக கதுருகமுவ தெரிவித்தார் என்று, வீரகேசரி செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
இலங்கை – இந்திய மீனவர் பிரச்னைக்கு தீர்வொன்று கிடையாது. தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தைகளே தற்போதும் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய ராஜதந்திர மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நிலுக கதுருகமுவ தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் காயமடைந்தமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக, பத்தரமுல்லையிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் புதன்கிழமை (29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், “இலங்கை – இந்திய மீனவர் பிரச்னை குறித்து நீண்ட காலமாக அதிகாரிகள் மட்டத்திலிருந்து அரச தலைவர்கள் மட்டம் வரை இந்தியாவுடன் மிக ஆழமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது ஒரு நாளில் நிறைவடையும் பிரச்சினையல்ல. இழுவைப் படகு முறைமை என்பது இலங்கையில் மாத்திரமின்றி இந்தியாவிலும் தடை செய்யப்பட்ட ஒரு மீன்பிடி முறைமையாகும்.
எனினும், அந்த முறைமையைப் பயன்படுத்தியே இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடி நடவடிக்கைளில் ஈடுபடுகின்றனர். சட்டதுடன் தொடர்புடைய தரப்புக்களின் ஊடாகவே கைதுகள், அதனையடுத்த சட்ட நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படுகின்றன. வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனையும் வழங்கப்படுகிறது” என்று அவர் கூறினார் என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு