வாஷிங்டன் டிசி விமான விபத்து: பைடன் நிர்வாகத்தை டிரம்ப் குற்றம் சாட்டுவது ஏன்? என்ன பேசினார்?

அமெரிக்கா: விமானமும் ஹெலிகாப்டரும் மோதி விபத்து - நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் 64 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று, அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டருடன் நடு வானில் மோதி, ஆற்றுக்குள் விழுந்தது.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்த வாஷிங்டன் டிசியின் தீ மற்றும் அவசர உதவி சேவைகள் துறையின் தலைவர் ஜான் டொனெல்லி, அவர்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

அதுகுறித்துப் பேசியபோது அவர், “இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்த்திருப்பதாக நாங்கள் நம்பவில்லை,” என்று கூறினார்.

மேலும், தனது குழுக்கள் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து 27 உடல்களையும், ஹெலிகாப்டரில் இருந்து ஒரு உடலையும் மீட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்து குறித்து அதிபர் டிரம்ப் விரைவில் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார்.

அமெரிக்கா: நடுவானில் விமானமும் ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதி விபத்து

பட மூலாதாரம், Getty Images

என்ன நடந்தது?

ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தின் 33வது ஓடுதளத்தை நோக்கி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்துகொண்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் (இந்திய நேரப்படி காலை 7.30 மணியளவில்) இந்த விபத்து நிகழ்ந்ததாக, விமானப் போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பம்பார்டியர் சிஆர்ஜே 700 என்ற இந்தப் பயணிகள் விமானம், அமெரிக்காவின் கன்சாஸ் நகரின் விசிட்டா பகுதியில் இருந்து புறப்பட்டது. இதில் 60 பயணிகளும் நான்கு விமான பணியாளர்களும் இருந்ததாக அமெரிக்க ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.

அதே நேரம், விபத்தில் சிக்கியது சிக்கோர்ஸ்கி எச்-60 என்ற ராணுவ ஹெலிகாப்டர் என்றும் அது வர்ஜீனியாவில் உள்ள பெல்வாய்ர் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டதாகவும் என்று அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

உயிரிழப்புகள் ஏதேனும் இருக்கின்றனவா?

விமானத்தில் இருந்து 27 பேரின் உடல்களும் ஹெலிகாப்டரில் இருந்து ஒரு உடலும் மீட்கப்பட்டு இருப்பதாக ஜான் டொனெல்லி கூறியுள்ளார்.

மேலும், இந்த விபத்தில் ஒருவர்கூட உயிர் பிழைத்திருப்பதாகத் தான் நம்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விசாரணை நடத்தும்.

அமெரிக்க விமான-ஹெலிகாப்டர் விபத்து

பட மூலாதாரம், Getty Images

விபத்துக்கு பைடன் நிர்வாகத்தை குற்றம் சாட்டிய டிரம்ப்

இந்த விபத்து குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் டிரம்ப், “இந்த விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதாக” குறிப்பிட்டார்.

“இதன் பின்னணியைக் கண்டறியும் வரை ஓய மாட்டோம்” என்று குறிப்பிட்ட டிரம்ப், விமான போக்குவரத்து துறையில் பணியாற்றுவோர் அதிகபட்ச தரத்துடனும் அறிவுடனும் இருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த விபத்துக்கு பைடன் நிர்வாகத்தைக் குற்றம் சாட்டிய டிரம்ப், பன்முகத்தன்மை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளை இதற்குக் காரணமாகக் குறிப்பிட்டார்.

“விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிகளுக்கு, மாற்றுத் திறனாளிகள், உளவியல் பிரச்னைகள் உள்ளவர்களை பணியமர்த்தியதாக” குற்றம் சாட்டிய டிரம்ப், வெளிப்படையாக “பைடன் நிர்வாகத்தை, குறிப்பாக முன்னாள் போக்குவரத்து செயலாளரை” குற்றம் சாட்டியுள்ளார்.

வாஷிங்டன் டிசி விமான விபத்து: பைடன் நிர்வாகத்தை டிரம்ப் குற்றம் சாட்டுவது ஏன்? என்ன பேசினார்?

ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் 35,000 ஊழியர்களைக் கொண்ட ஒரு பெரிய நிர்வாக அமைப்பு. அவர்களில் ஒரு பகுதியினர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள்.

அங்கு “முன்னாள் போக்குவரத்து செயலாளர் பீட் புட்டிகீக்கால் நியமிக்கப்பட்டவர்கள் விமானப் போக்குவரத்தைப் பாதுகாப்பாகக் கட்டுப்படுத்தும் தகுதியுடையவர்கள் என்று தான் நம்பவில்லை” என்றும் கூறினார்.

ஃபெடரல் விமானப் போக்குவரத்து அமைப்பு வெள்ளையர்களால் நிரம்பியுள்ளதாகக் கூறி, அதில் பன்முகத்தன்மை கொள்கையின்படி பணியிடங்கள் நிரப்பப்பட்டதால் அதன் தரம் குறைந்துவிட்டதாக” டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும், தான் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் “டேப்களை” கேட்டதாகக் கூறிய அவர், “விமானம் அனைத்தையும் சரியாகச் செய்து கொண்டிருந்ததாகவும்” வழக்கமான “பாதையில் இருந்ததாகவும்” அவர் கூறுகிறார்.

ஆனால், ஏதோ காரணத்தால் ஹெலிகாப்டர் அதே உயரத்தில் இருந்ததாகவும் அது நம்ப முடியாத அளவுக்கு மோசமான கோணத்தில் சென்றதாகவும் டிரம்ப் கூறினார்.

வாஷிங்டன் டிசி விமான விபத்து: பைடன் நிர்வாகத்தை டிரம்ப் குற்றம் சாட்டுவது ஏன்? என்ன பேசினார்?

பட மூலாதாரம், Bernd Debusmann Jr/BBC

அதோடு ஹெலிகாப்டர், மேலே, கீழே அல்லது பக்கவாட்டில் என எப்படி வேண்டுமேனாலும் திருப்பக்கூடிய திறன் கொண்டது எனக் குறிப்பிட்ட டிரம்ப், அந்த ஹெலிகாப்டர் தவறான பக்கமாகத் திருப்பியுள்ளது,” என்று கூறினார்.

இந்த விபத்துக்கு பன்முகத்தன்மை கொண்ட பணியமர்த்தல் கொள்கைகளுக்குப் பங்கு உண்டு எனக் குற்றம் சாட்டுகிறாரா என்பதைத் தெளிவுபடுத்துமாறு செய்தியாளர் ஒருவர் டிரம்பிடம் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த டிரம்ப், “மூளை திறன் மற்றும் உளவியல் தரத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டிய சில வேலைகள் உள்ளன” என்றார்.

மேலும், தனது நிர்வாகம் மிக உயர்ந்த தரநிலைகளைக் கொண்டுள்ளதாகவும் முந்தைய அரசின் கீழ் தரநிலைகள் அதற்கு எதிர்மாறாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என்ன கூறுகிறார்கள்?

விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஜார்ஜ் வாசிங்டன் பார்க்வே வழியாக கார் ஓட்டிச் சென்றபோது, விமானம் மோதியதை தான் பார்த்ததாக அரி ஷுல்மன் என்பிசி வாசிங்டன் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

முதலில் விமானம் சரியாகச் சென்று கொண்டிருப்பதாகத்தான் தெரிந்தது என்று கூறும் அவர், திடீரென விமானம் வலதுபுறமாகத் திரும்பியதாகவும், விமானத்தின் அடிப்பகுதியில் இருந்து தீப்பொறிகள் சீராக வரத் தொடங்கியதாகவும் அவர் கூறுகிறார்.

அந்த நேரத்தில் அது “மிகவும் தவறு” என்று எனக்கு தெரிந்துவிட்டது. அந்த பகுதியில் விமானங்கள் தரையிறங்குவதை கடந்த காலங்களில் பார்த்திருந்த அவர், ஒரு விமானத்தின் அடிப்பகுதி அந்த இருட்டான நேரத்தில் தெரியக்கூடாது என்று கூறினார். அந்த தீப்பொறிகள் விமானத்தின் முன் பகுதியிலிருந்து பின்பகுதி வரை நீண்டு சென்றது.

விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு பூங்காவில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, இந்த விமான விபத்தை பார்த்ததாக ஜிம்மி மசியோ கூறுகிறார்.

வானில் ஒரு ‘ஒளிவீச்சு’ உருவானதை பார்த்ததாக அவர் நினைவுகூறுகிறார். ரீகன் விமானநிலையத்தை நோக்கி செல்லக் கூடிய விமானங்கள் வழக்கமான பாதையில் செல்லவில்லை என்று தோன்றியதாக அவர் குறிப்பிடுகிறார்.

அந்த பகுதிக்கு அவசர சேவைகள் வந்தடையும் வரை, அவர் வானில் பார்த்தது குறித்து, பெரிதாக எதையும் யோசிக்கவில்லை என்கிறார்.

உறையும் குளிரில் மீட்புப் பணி

அமெரிக்க விமான-ஹெலிகாப்டர் விபத்து

படக்குறிப்பு, வாசிங்டன் டிசி மேயர் முரியல் பவுசர்

தண்ணீரில் குதித்து தேடக்கூடிய காவலர்களும், காவல் படகுகளும் பல மணி நேரங்களாக மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். உறையும் குளிர் அவர்களின் பணியை சவாலாக்கியுள்ளது.

வாஷிங்டன் டிசியின் ஆளுநர் மேயர் பவுசர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவசர சேவை பணியாளர்கள் “மிகவும் இருட்டான, குளிரும் சூழலில்” மீட்புப் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை மிகவும் துயரமானது என்று குறிப்பிட்ட அவர், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினர் விமான நிலையத்தில் இருப்பதாகக் கூறினார்.

அமெரிக்க விமான-ஹெலிகாப்டர் விபத்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள ஹெலிகாப்டஹெலிகாப்டர்

தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் பிரிவு தலைவர் ஜான் டானலி, மீட்புப் பணிகள் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது என்று கூறுகிறார், “மிகவும் மோசமான சூழல் நிலவுகிறது” என்று குறிப்பிட்டார் அவர்.

உள்ளூர் நேரப்படி இரவு 8:58 மணிக்கு அவசர சேவை பிரிவினர் சம்பவ இடத்துக்கு வந்து, தண்ணீரில் விமானம் இருப்பதை கண்டனர். தற்போது 300 வீரர்கள் மீட்புப் பணியில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

வாசிங்டன் டிசியின் அவசர சேவை பிரிவினர், ரீகன் தேசிய விமான நிலையத்தில் திரண்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

போடோமேக் ஆற்றுப் பகுதியில் இந்த விமானம் நொறுங்கியுள்ளது, இந்த ஆறு வாஷிங்டன் டிசி வாயிலாக பாய்கிறது என, டிசி தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

தீயை அணைப்பதற்கு உதவும் படகுகள் மூலம், விமானத்தின் பாகங்கள் தேடப்பட்டு வருவதாக, அத்துறை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க விமான-ஹெலிகாப்டர் விபத்து

பட மூலாதாரம், Getty Images

“எனது மனைவி 20 நிமிடங்களில் தரையிறங்க போவதாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்” என்று ஹமாத் ராசா கூறுகிறார். அவர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த தனது மனைவி வருவதற்காக ரீகன் வாசிங்டன் தேசிய விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார்.

“இன்னும் 20 நிமிடங்களில் தரையிறங்குவோம் என்று கூறினார். அவரை யாராவது தண்ணீரிலிருந்து மீட்டு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

டிரம்ப் என்ன கூறினார்?

அமெரிக்க விமான-ஹெலிகாப்டர் விபத்து

பட மூலாதாரம், Getty Images

இந்த மோசமான சம்பவம் குறித்து தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவசர கால உதவியை மேற்கொண்டு வரும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “அவர்களின் ஆன்மாக்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறியிருந்தார்.

“விமானம் சரியான பாதையில் விமான நிலையத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. ஹெலிகாப்டர் குறிப்பிட்ட நேரத்துக்கு விமானத்தின் எதிரே நேராக சென்றுள்ளது. இரவு வானம் தெளிவாக உள்ளது. விமானத்தின் விளக்குகள் பிரகாசமாக எரிந்துக் கொண்டிருந்தன.”

“அந்த ஹெலிகாப்டர் மேலேயோ, கீழேயோ அல்லது வேறுபுறமாக திரும்பியோ ஏன் செல்லவில்லை. விமானத்தை பார்த்தீர்களா என்று கேட்டதற்கு பதிலாக, ஹெலிகாப்டர் என்ன செய்ய வேண்டும் என கட்டுப்பாட்டு மையம் ஏன் கூறவில்லை”

“இது மிகவும் மோசமான நிலை, இதை தவிர்த்திருக்க வேண்டும். இது சரியே இல்லை” என்று ட்ரூத் சோசியல் என்ற தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

சம்பவத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களுக்காக பிரார்த்திக்க அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ் கேட்டுக் கொண்டார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் மற்றும் போக்குவரத்து செயலர் சீயன் டஃபி நிலைமைகளை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

“எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் ” – அமெரிக்கன் ஏர்லைன்ஸ்

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ராபர்ட் ஐசோம், இந்த விபத்து குறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்தார்.

இது குறித்து ஏர்லைன்ஸ் இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்த அவரது வீடியோவில், விமானத்தின் தகவல்களையும், அதில் இருந்தவர்கள் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் என்பதையும் உறுதி செய்திருக்கிறார்.

உள்ளூர், மாநில மற்றும் தேசிய அதிகாரிகளுடன் தங்கள் நிறுவனம் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம்” என்று கூறிய அவர், வாஷிங்டன் டிசிக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஒரு குழுவை அனுப்பியிருப்பதாகவும், தானும் அங்கு செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு